• Home
  • யாக்கை
  • பெண்ணுக்கு உண்மையான அழகு இது தான்

பெண்ணுக்கு உண்மையான அழகு இது தான்

Image

உடலை நேசிப்பதே முக்கியம்

பளீச்சென திருத்தமான முக வடிவம், ஆரோக்கியம், சிரிப்பு, நல்ல குணம் போன்றவை பெண்ணுக்கு அழகு என்கிறார்கள். இது உண்மையா….?

அழகு என்பதற்கு சில முக்கியப் பிரபலங்கள் கொடுத்திருக்கும் இலக்கணத்தைப் படித்துப் பாருங்கள். ஏனென்றால், பார்லர் பியூட்டி பற்றி எந்த பிரபலமும் சொல்லவில்லை என்பது தான் ஆச்சர்யம். இதையெல்லாம் சொன்ன பிரபலங்கள் யார் என்று தேட வேண்டாம். ஏனென்றால், கருத்து முக்கியமே தவிர, கருத்து கூறியவர்கள் அல்ல. இனி, படித்துப் பாருங்கள்.

  • ஒரு பெண்ணுக்குப் புறத்தோற்றம் முக்கியம்தான். ஆனால் அதுவே முக்கியம் என்று நினைத்து ஆபத்தை விலைக்கு வாங்கக் கூடாது. ஒரு பெண்மணி புறத்தோற்றத்திற்காக ஒரு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து, அதுவே கடைசியில் அவரது உயிரைப் பறிக்கும் எமனாக வந்து வாய்த்தது. பார்ப்பதற்குக் கண்ணைக் கவரும் விதத்தில் இருக்கிறது என்பதற்காக நாம் நஞ்சு எடுத்து அருந்துவோமா? எனவே இயற்கை அழகுக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
  • ஆரோக்கியம் இருக்கும் இடத்தில் அழகு கண்டிப்பாகக் குடியேறும். ஆனால், அழகு மட்டுமே இருக்குமிடத்தில் ஆரோக்கியம் அரையடி தள்ளியே நிற்கும். அழகு என்பது உள்ளத்திலிருந்து ஊற்றெடுக்க வேண்டும். அதற்கு உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். நல்ல உடல்நலனே, நல்ல சிந்தனைகளின் வித்து. உள்ளமும் உடலும் நன்றாக இருந்தாலே எந்த மெனக்கெடலும் இல்லாமல் இயற்கையான அழகு நம்மை உறவாக்கிக் கொள்ளும்.
  • நல்ல சிந்தனைகள், உண்மையான அன்பு, இயற்கையோடு இணைந்த உணவு, புன்னகை ஆகியவற்றை உடலுக்கு அணிகலனாய் அணிந்துகொண்டாலே பெண்ணின் அழகு நாளுக்கு நாள் கூடும், ஒருநாளும் குறையாது. இந்தக் காலத்தில் எல்லாமே துரிதமாக நடக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக உள்ள காரணத்தால் ஆரோக்கியத்திற்குக் கவனம் தருவதைவிட விரைவில் தீர்வு வேண்டும் என ஆபத்தை விலை கொடுத்து வாங்கிக்கொள்வது தவறு. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதுபோல் புறத் தோற்றத்திற்கு அதீதக் கவனம் செலுத்துவது தேவை இல்லாதது.
  • நடிகைகளுக்கு மட்டுமே அழகு மூலதனமாகப் பார்க்கப்படுகிறது. அதனாலேயே அவர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் காணாமல் போய்விடுகின்றனர். அறிவு சார்ந்தோ, உடலியல் திறன்கள் சார்ந்தோ வெற்றிபெற்ற பெண்கள் நீண்ட காலம் அனைவராலும் போற்றப்படுகின்றனர், முன்மாதிரியாகப் பார்க்கப்படுகிறார்கள். இதற்கு பி.டி.உஷா தொடங்கி உடல் திறனால் வென்ற பல விளையாட்டு வீராங்கனைகளையும், டாக்டர் கமலா செல்வராஜ் போன்று அறிவுத் திறனால் சாதித்த பல மருத்துவர்கள், கல்வியாளர்களையும் சொல்லலாம். அழகு நிலையற்றது, அறிவு அழிவற்றது. அறிவோடு கூடிய ஆரோக்கியம் ஆயுள் உள்ளவரை அனைவரும் விரும்பும்படி செய்யும்.
  • துரித உணவுகள் போல உடல் எடையும் துரிதமாகக் குறைய வேண்டும் என்று கண்ட கண்ட மருந்துகளைச் சாப்பிட்டு இளைக்க முயற்சிக்கிறார்கள். பவுடர் மருந்துகள், சத்து மாத்திரைகள், அறுவை சிகிச்சை மூலம் உடல் எடை குறைய வேண்டும் என்பதில் காட்டுகிற ஆர்வத்தைச் சத்தான உணவுகள் சாப்பிடுவதிலும், எளிய உடற்பயிற்சிகள் செய்வதிலும் காட்டுவதே போதுமானது.
  • முக்கியமாக ருசிக்குச் சாப்பிடாமல் பசிக்கு மட்டுமே சாப்பிட்டால் ஆரோக்கியத்துடன் அழகும் கைவசப்படும். சினிமா ஹீரோயின்கள் போல வத்தல் குச்சியாக இருப்பதுதான் அழகு என்று, இன்றைய இளம் பெண்கள் நினைக்கிறார்கள். ஆனால், அந்த சைஸ் ஜீரோ ஹீரோயின்களைப் பார்த்தால் முகத்தில் எந்தவித மலர்ச்சியுமின்றி, வறண்ட சருமத்துடன், வறுமையில் வாடுவது போன்ற தோற்றத்தில்தான் இருக்கிறார்கள். எளிய நடைப் பயிற்சி, மூச்சுப் பயிற்சி, சத்துள்ள உணவுகள் போன்றவற்றுடன் இயந்திரங்களை நம்பி இருக்காமல் உடற்பயிற்சிகளையும் வீட்டு வேலைகளையும் செய்தாலே எடை கணிசமாகக் குறைந்துவிடும். ஆரோக்கியமான அழகைப் பேணிக் காக்கலாம்.
  • ஆரோக்கியம் இருந்தால் அழகு தன்னாலே வந்துவிடும். உடலுக்குத் தேவையான ஊட்டமான அனைத்துச் சத்துகளும், மனதுக்குத் தேவையான தன்னம்பிக்கையும் சுயமரியாதையும் ஒழுக்கமும் சேர்ந்து இருப்பதுதான் அழகு. பார்வை,நடை, உடை, கம்பீரம், விவேகம், அறிவு, திறமை, பண்பு எல்லாம் சேர்ந்து இருப்பதுதான் அழகு. அழகையும் ஆரோக்கியத்தையும் தனித்தனியே பிரிக்கத் தேவையில்லை. சிவப்பு அழகுக்காகவும், எடை குறைப்புக்காகவும் பெண்கள் தேவையில்லாமல் நேரத்தைச் செலவிடுவதைவிட தெளிவான ,நேர்மையான எண்ணங்களுடன் நேரத்தைச் செலவிட்டாலே போதும். பணமும் நேரமும் மிச்சமாகும்.
  • அகத்தின் அழகு முகத்தின் தெரியும் என்பதற்கேற்ப,ஒரு பெண்ணின் அழகு, அக அழகுதான். அக அழகு அழிவில்லாதது, ஆனால் புற அழகு நிரந்தரம் இல்லாதது. நாம் ஆரோக்கியமாக இருந்தாலே அழகு தானாக வந்துவிடும். சாதனை புரிவதற்கு அழகு தேவையில்லை, ஆரோக்கியமே முக்கியம். எனவே, பெண்கள் அழகைவிட ஆரோக்கியத்திற்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
  • இன்றைக்குப் பள்ளி தொடங்கி அனைத்து இடங்களிலும் பெண்கள் தங்களைப் பார்க்க வேண்டும் என்றும், அப்படிப் பார்க்காவிட்டால் இந்தச் சமுகத்தில் தங்களுக்கு மதிப்பே இல்லை என்ற தவறான எண்ணத்துடனேயே இருப்பதால்தான் சிவப்பழகு கிரீம்களுக்கு அவ்வளவு மரியாதை. இயற்கை கொடுத்த அழகை ஒழுங்காகப் பராமரித்து நாம் ஆரோக்கியமாக வாழ்வதால் அழகு நம்மைத் தேடி ஓடி வரும். வயது தரும் உடல் மாற்றத்தை ஏற்கும் மனப்பக்குவம் இருந்தாலே, ஆரோக்கியம் தேடிவரும்.
  • கருப்போ, சிவப்போ அதுமட்டும் ஒருவருக்கு உயர்வான மதிப்பையும் மரியாதையையும் தந்துவிடாது.கிராமங்களில் உள்ள பெண்கள் உழைப்பை மட்டுமே அழகு என நினைக்கிறார்கள். ஆனால், நாகரிகம் படைத்த நகரத்துப் பெண்கள்தான் புறத்தோற்றத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பணத்தையும் உடல்நலனையும் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். திறமை, ஆளுமை, முயற்சி, துணிவு ஆகியவை மட்டுமே பெண்களுக்கு அழகு.
  • வெளியில் தன்னை அழகாகவும் ஆரோக்கியமாகவும், அறிவாகவும் மகிழ்ச்சி நிறைந்தவர்களாகவும் காட்டிக்கொள்ளும் பெரும்பாலான பெண்கள் உள்ளுக்குள் தாழ்வு மனப்பான்மையுடன் இருக்கிறார்கள். இதற்குக் காரணம் பெண் என்றால் இப்படித்தான் அழகாக இருக்க வேண்டும் என்ற மற்றவர்களின் பார்வை. அதைத் தானும் சரி என ஏற்றுக்கொண்டு அதற்கான தொடர் முயற்சிகள், வீண் பிரயத்தனங்களைப் பெண்கள் செய்கிறார்கள். ‘நிரந்தர மகிழ்ச்சியையும்’ நன்மையும் தரவல்ல, அறிவை நோக்கிய தேடலைத் தொடங்குவோம்.
  • பெண்ணின் ஆரோக்கியம் தனக்கும் தன் குடும்பத்துக்கும் மன நிம்மதியைக் கொடுக்கும். ஆரோக்கியம் இருந்தால் வீட்டில் ஆனந்தமும் உறவுகளிடையே தெம்பும், தன்னம்பிக்கையும் உண்டாகும். பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளும் தெளிவும் துணிச்சலும் ஏற்படும். பெண்ணின் ஆரோக்கியத்துக்கு வயது வரம்பு கிடையாது. முதுமையிலும் ஆரோக்கியமாக இருக்கும் பெண் நிறைவாகத் தெரிவாள்.

Leave a Comment