வெளிநாட்டு வேலை நல்லதா..?

ஞானகுரு பதில்

கேள்வி ; சொந்த மண்ணை விட்டு வெளிநாட்டு வேலைக்குப் போகலாமா…..?

  • டி.பாபு, கல்லுப்பட்டி.

ஞானகுரு :

செல்போன் யுகத்தில் உள்ளங்கைக்குள் உலகம் வந்துவிட்டது. எந்த நாட்டில் இருந்தாலும் சொந்த ஊருக்கு அதிகபட்சம் இரண்டு நாட்களுக்குள் திரும்பும் அளவுக்கு போக்குவரத்து வசதிகள் பெருகிவிட்டன. அதனால் பக்கத்து ஊருக்கு வேலைக்குப் போவதற்கும் வெளிநாட்டு வேலைக்குப் போவதற்கும் பெரிய வித்தியாசங்கள் கிடையாது.

அதேநேரம், என்ன காரணத்துக்காக வெளிநாட்டு வேலைக்குப் போகிறார், எவற்றை எல்லாம் இழந்துவிட்டுப் போகிறார் என்பதில் தான் வித்தியாசம இருக்கிறது. ஒயிட் காலர் ஜாப் எனப்படும் அலுவலகத்தில் அமர்ந்து வேலை செய்வதற்கு வெளிநாடு செல்பவர்கள் பெரும்பாலும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் சொந்த நாடு திரும்ப விரும்புவதில்லை.

புளு காலர் ஜாப் எனப்படும் உடல் உழைப்பு கொடுப்பவர்கள் கஷ்டப்பட்டு வேலை செய்கிறார்கள். பெரும்பாலோர் சொந்த நாட்டுக்குத் திரும்பிவிடுகிறார்கள். அதிக சம்பளம் என்ற காரணத்துக்காக வெளிநாட்டுக்குப் போகிறார்கள். அந்த காரணம் நிறைவேறினால் மகிழ்ச்சி அடைகிறார்கள். அதாவது அதிக பணம் மிச்சப்படுத்த முடிகிறது என்றால் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

வெளிநாட்டில் போய் கஷ்டப்பட்டும் போதிய சம்பளம் கிடைக்கவில்லை, பணம் போதவில்லை என்ற எண்ணத்தில் இருப்பவர்கள் ரொம்பவே சிரமப்படுகிறார்கள். உறவுகளைப் பிரிந்து வாழும் துன்பமும் அவர்களை ஆட்டிப் படைக்கிறது.

பொதுவாகச் சொல்வது என்றால் சொந்த ஊர், சொந்த நாடு என்ற சென்டிமென்ட் யாருக்கும் அவசியமில்லை. சொந்த வீடு, சொத்து இல்லாத நபருக்கு எங்கு வருமானம் வருகிறதோ அதுவே சொந்த ஊர்.

அந்த வகையில் யாதும் ஊரே யாவரும் கேளீர் அதாவது எல்லா நாடும் என் நாடு எல்லா மக்களும் என் மக்கள் என்பதே தமிழரின் தத்துவம். எங்கு மகிழ்ச்சியாக வாழ முடிகிறதோ, அந்த இடத்தைத் தேர்வு செய்யுங்கள். அது கிராமமாக இருந்தாலும் நல்லது, வெளிநாடு என்றாலும் நல்லது. மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment