ஹரியானா தேர்தல் தலைகீழ் மாற்றம்
ஒலிம்பிக் போட்டியில் வினேஷ் போகத் தங்கம் வெல்லப் போகிறார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போட்டியே போட முடியாத நிலைக்கு ஆளானார். அதேபோன்று ஹரியானா தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கப்போகிறது என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தலைகீழ் மாற்றம் நடந்து பா.ஜ.க. மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்திருக்கிறது.
ஹரியானா சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 5-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில், 68% வாக்குகள் பதிவாகி இருந்தன. மொத்தமுள்ள 2 கோடியே 3 லட்சத்து 54 ஆயிரத்து 350 வாக்காளர்களில் ஒரு கோடியே 38 லட்சத்து 19 ஆயிரத்து 776 வாக்குகள் பதிவாகின. தேர்தலுக்குப் பிந்தைய பல்வேறு கருத்துக்கணிப்புகள், ஹரியானாவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என்றும் கூறின. இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்க்ப்பட்ட நேரத்தில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகுத்தது.
ஆனால், அதன்பிறகு திடீர் மாற்றம் ஏற்பட்டு பா.ஜ.க. ஆட்சிக்கு வந்திருக்கிறது. தேர்தல் கமிஷன் மோசடி என்று காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள் என்றாலும், தோல்வியை இனி மாற்ற முடியாது. இந்த நிலையில் ஹரியானா தேர்தல் பற்றி பேசும் காங்கிரஸ் கட்சியினர், ‘’ஹரியானாவில் வெற்றி பெற இருந்த அத்தனை வாய்ப்புகளையும் காங்கிரஸ் கட்சியே வீணடித்து விட்டது. காங்கிரஸ் கோஷ்டி பூசல் உச்சத்தில் இருந்த நிலையில் பாஜக ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை ஒருங்கிணைத்து வெற்றி பெற்றிருக்கிறது. இண்டியா கூட்டணியில் இருக்கும் ஆம் ஆத்மியை தனியே நிற்க விட்டது ஒரு பெரும் தவறு.
அலையலையாக பாஜகவிலிருந்து விலகியவர்களை காங்கிரஸ் இணைத்துக் கொண்டது பெரும் தவறு. தேர்தல் வரை பாஜகவில் இருப்பவர்கள் திடீரென காங்கிரஸிற்கு வருவதன் காரணம் என்ன? அதிருப்தியாளர்களை வெளியேற்றி வெற்றி பெறும் நுட்பத்தை பின்பற்றுகிறது பாஜக. தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் பாஜகவில் சேர்ந்து விடுகின்றனர். ஹூடாவுக்கும் செல்ஜா குமாரிக்குமான பூசல்கள் தான் மாபெரும் வெற்றி பெற வேண்டிய ஹரியானாவில் பாஜகவை வெற்றி பெற வைத்திருக்கிறது.
வேட்பாளர் தேர்வில் ஹூடாவின் சாய்ஸ்க்கு முக்கியத்துவம் கொடுத்த காங்கிரஸ் குமாரியின் பரிந்துரையை முழுவதும் நிராகரித்து விட்டது. விளைவு மேடைக்கு மேடை இதை பற்றியே பேசினார்கள் பாஜகவினர். அரியானாவில் சுயேட்சைகளின் பங்கும் அதிகம். கடந்த தேர்தலில் 7 சுயேட்சைகள் வெற்றி பெற்றனர். ஜே.ஜே.பி, மாயாவதியின் பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி ஆகியவை பாஜகவின் அதிருப்தி வாக்குகளை சிதறடித்து விட்டன. குறிப்பாக கடந்த தேர்தலில் கூட்டணியில் இருந்த ஜே.ஜே.பி. பாஜகவிடமிருந்து தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு விலகியது நுட்பமான அரசியல். காங்கிரஸ் கட்சியே வெற்றியை தூக்கி பாஜகவிடம் கொடுத்த கொடுமையை இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும்..’ என்கிறார்கள்.
ராகுல் காந்தி பாடம் கற்கட்டும்.