எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
ஜாதி மறுப்பு திருமணம் நடத்தியதற்காக திருநெல்வேலி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் சூறையாடப்பட்டுள்ள சம்பவம் தமிழகம் முழுக்க கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. எதிர்க் கட்சித் தலைவர் இந்த விவகாரத்திற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து எடப்பாடி பழனிசாமி, ‘தேசிய கட்சி அங்கீகாரம் பெற்ற ஒரு கட்சியின் அலுவலகம் தாக்கப்படுவது என்பதே இந்த விடியா திமுக ஆட்சியில் சீர்கெட்ட சட்டம் ஒழுங்கிற்கு அத்தாட்சி. சுயமரியாதை இயக்கம் தழைத்தோங்கிய தமிழ்நாட்டில், இன்றளவும் ஜாதிய தீண்டாமையால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வது வேதனைக்குரியது. நெல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தைத் தாக்கியவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு விடியா திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்’ என்று கேட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் திருநெல்வேலி பெருமாள் புரத்தை சார்ந்த உதய தட்சாயினி (23) என்ற பெண்ணுக்கும் பாளையங்கோட்டை அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்த மதன் (28) என்பவரும் ஆறு ஆண்டுகளுக்கு மேலாக காதல் செய்திருக்கிறார்கள்.
இவர்கள் திருமணத்திற்கு பெண் வீட்டார் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில், இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆதரவு கொடுத்து திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள்.
தங்கள் மகளை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் கொடுத்த பெண் வீட்டாருக்கு மணமக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் புதுமண தம்பதிகள் இருப்பதாக பெண்ணின் வீட்டிற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து பெண்ணின் தாயார் மற்றும் உறவினர்கள் என சுமார் 30க்கும் மேற்பட்டவர்கள் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் அலுவலகத்தில் இருந்த கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. மேலும் தீக்கதிர் பேப்பர் அலுவலகத்தையும் தாக்கியுள்ளனர். இத்தாக்குதலில் கட்சி அலுவலகத்தில் இருந்த சிபிஎம் தோழர்கள் வழக்கறிஞர் பழனி,அருள், முருகன்,முத்து சுப்பிரமணி ஆகியோர் காயமடைந்துள்ளனர். அலுவலகத்தின் கண்ணாடி உள்ளிட்ட கதவுகளை உடைத்து சூறையாடியுள்ளது அக்கும்பல்.
தமிழ்நாட்டில் இப்படி சாதியவாதிகளால் ஒரு கட்சி அலுவலகம் தாக்கப்பட்டிருப்பது இதுவே முதன் முறையாகும். தமிழ்நாடு காவல்துறை உடனடியாக சாதிவெறிக்கும்பலை கைது செய்து குண்டர்சட்டத்தில் அடைக்க வேண்டும். மக்களுக்காக போராடிவரும் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கே பாதுகாப்பில்லை என்றால், யாருக்கு பாதுகாப்பு கிடைக்கப்போகிறது? இது மற்ற சம்பவம் போல காவல்துறை மெத்தனமாக இருக்கக்கூடாது என்று குரல் எழுந்துள்ளது.
ஜாதி மோதலை தடுப்பதில் ஸ்டாலின் அரசு தொடர்ந்து மெத்தனம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது. இனியாவது தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.