ஸ்டாலினைத் தாக்கும் வேல்முருகன்
எடப்பாடி அணிக்குத் தாவுவார் என்று எதிர்பார்க்கப்படும் வேல்முருகன் பட்டாசு ஆலையில் உயிர் இழந்தவர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்த தமிழக அரசுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்திருக்கிறார். கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்கள் குடும்பத்திற்கு 10 லட்சம் ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில், இதற்கு 3 லட்சம் மட்டுமே ஒதுக்கியது சர்ச்சையாகியுள்ளது.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம், மல்லி உட்கடை மாயத்தேவன்பட்டி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் நிகழ்ந்த விபத்தில், ஸ்ரீவில்லிபுத்தூர், மல்லி உட்கடை நாகபாளையத்தைச் சேர்ந்த புள்ளகுட்டி மற்றும் வத்திராயிருப்பு, குன்னூரைச் சேர்ந்த கார்த்திக் ஈஸ்வரன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தி பெரும் கவலை அளிக்கிறது. மேலும், இந்த விபத்தில் போஸ், மணிகண்டன் ஆகிய இருத்தொழிலாளர்கள் காயமடைந்துள்ள நிலையில், சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சமும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
அதே நேரத்தில், ஒவ்வொரு முறையும் பட்டாசு வெடி விபத்து நிகழும் போது விபத்துகள் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்காமல், அரசு இழப்பீடு மட்டும் வழங்குவது போதுமானதாக இல்லை. இது போன்ற விபத்துக்கள் நடக்காமல் இருக்க அரசு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து சிந்திக்க வேண்டும். பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிர்ப்பலிகளுக்கு காரணம் உரிமையாளர்களின் இலாப வெறியும், அப்பட்டமான விதிமீறலும், அதிகாரிகளின் மெத்தனப்போக்கும் தான். அதிக லாபத்துக்காக, உற்பத்தி அளவை காட்டிலும் அதிகளவு பட்டாசு தயாரிக்க பணியாளர்களை நிர்ப்பந்தம் செய்வதும் பட்டாசு விபத்துக்கான காரணமாகும்.
பட்டாசு தொழிலில் இருந்து ஆயிரக்கணக்கான கோடிகள் அரசிற்கு வரி வருவாயாக வரும் நிலையில், தமிழ்நாடு அரசு தற்போது அறிவித்துள்ள இழப்பீடு என்பது போதுமானதாக இருக்காது. உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு வாழ்வாதாரம் முக்கியமானது. ஆகவே, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, இழப்பீடாக தலா ரூ.20 லட்சமும், காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும், தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும்’’ என கோரிக்கை வைத்திருக்கிறார்.