முகத்தில் சுருக்கத்துக்கு இப்படியொரு காரணமா..?

சிம்பிள் பியூட்டி டிப்ஸ்



முதுமையில் முகத்தில் சுருக்கம் வருவது சகஜம்தான். ஆனால் இப்போது, இளம் வயதிலேயே சில பெண்களுக்கு நெற்றி, கழுத்துப் பகுதி, கண்களுக்குக் கீழே சுருக்கம் வருவதுண்டு. முகத்தில் சுருக்கத்தைக் கண்டதும் பதறிப்போய் கண்டதையும் தேய்க்கும்போது, அந்த சுருக்கம் அதிகரிக்குமே தவிர குறைவதில்லை. ஏனென்றால் பெரும்பாலான முக சுருக்கத்துக்குக் காரணமே கவலை, மன அழுத்தம் போன்றவைதான்.

மேலும், நீர்ச்சத்து குறைபாடு, சூரியன் அல்லது புற ஊதாக்கதிர்களால் ஏற்படும் பாதிப்பு, ஹார்மோன் மாற்றம், ஆரோக்கியமற்ற உணவு பழக்கம் போன்றவையும் சுருக்கம் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கின்றன. குண்டாக இருக்கும் நபர்கள் திடீரென உடல் எடையைக் குறைப்பதும் சுருக்கத்துக்குக் காரணமாகிறது. அதாவது உடலில் இருக்கும் கொழுப்பு கரைந்து முகம், கழுத்து, கைவிரல் பகுதிகளில் சுருக்கம் தோன்றும். எந்த காரணத்தால் முகச்சுருக்கம் ஏற்பட்டது என்பதைக் கண்டறிந்து, அதனை நிவர்த்தி செய்ய வேண்டும். அதன்பின்னரே, சுருக்கத்தை நீக்கும் அழகு சிகிச்சையில் இறங்கவேண்டும்.

சருமத்தின் அழகைப் பாதுகாக்க கார்போ ஹைட்ரேட், புரோட்டீன், வைட்டமின்கள், தாதுக்கள், கொழுப்பு போன்ற உணவுகள் தேவை. முட்டைக்கோஸ், வெள்ளரிக்காய், கீரை வகைகள், முளைவிட்ட பயறு வகைகள் போன்றவை போதுமான அளவுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த உணவுதான் சருமத்திற்கு இளமையையும், மினுமினுப்பையும் தரும். அதோடு தினமும் பத்து டம்ளர் தண்ணீரும் குடித்தால் சருமம் வறண்டு சுருக்கம் தோன்றுவது தவிர்க்கப்படும்.

முகம், கழுத்துப் பகுதியில் உள்ள சுருக்கங்களைப் போக்க வீட்டுப் பொருட்களைக் கொண்டே ஒரு ஃபேஷியல் செய்து தீர்வு காண முடியும். ஆம், முட்டையின் வெள்ளைக் கரு, முல்தானிமிட்டி, தேன் மூன்றையும் கலந்து முகத்தில் பூசி, நன்றாகக் காயவிட வேண்டும். அதன்பிறகு நிதானமாக கழுவலாம். இதனை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்யலாம்.

ஒரு கிண்ணத்தில் இரண்டு டீஸ்பூன் ஓட்ஸ், ஒரு டீஸ்பூன் பாதாம் விழுது, ஒரு டீஸ்பூன் ஆரஞ்சு சாறு, அரை டீஸ்பூன் கோதுமை எண்ணெய் போன்றவைகளை சேர்க்கவும். அதனை நன்றாக கலந்து நெற்றியில் மற்றும் சுருக்கம் தென்படும் பகுதிகளில் பூசி, அரை மணி நேரம் கழித்து நீரில் கழுவிவிடலாம்.

ஒரு வாழைப் பழத்தை நன்றாக பிசைந்து அதனுடன் ஒரு டீஸ்பூன் முல்தானி மெட்டி சேர்க்கவும். பின்பு இரண்டு டீஸ்பூன் பால், 5 துளிகள் தேன் கலந்து நன்றாக குழைத்துக்கொள்ளவும். அதனை சுருக்கத்தில் தடவிவிட்டு கால் மணி நேரம் கழித்து கழுவிவிடலாம்.

எண்ணெய் மசாஜ் செய்வதும் சுருக்கங்களைப் போக்க உதவும். ஒரு டீஸ்பூன் பாதாம் எண்ணெய், அரை டீஸ்பூன் விளக்கெண்ணெய், அரை டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 4 சொட்டு கோதுமை எண்ணெய் ஆகியவற்றை கலந்து நெற்றியில் தடவி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். எண்ணெய் நன்றாக உறிஞ்சப்படும் வரை மசாஜ் செய்துவிட்டு தூங்க செல்லலாம்.


ஆவி பிடிப்பதும் சரும சுருக்கத்தைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கொதிக்க வைத்த நீரில் மஞ்சள் போட்டு பிடிக்கலாம். அதேபோன்று அழகுக்கு ஆவி பிடிப்பதற்கு எலுமிச்சையும் மிகச் சிறந்த பொருள். பொதுவாக ஆவி பிடிக்கிற பொழுது, அதனுள் சிறிதளவு எலுமிச்சை இலைகளைப் போடுங்கள். ஜலதோஷம், தலையில் நீர் கோர்த்தல் போன்ற பிரச்சினைகள் கூட குணமாகியிருக்கும். எலுமிச்சை இலைகள் கிடைக்காதவர்கள் அரை மூடி எலுமிச்சை சாறைக்கூட சேர்த்துக் கொள்ளலாம்.நீங்கள் எலுமிச்சை கழத்தை சாறெடுத்துவிட்டு, தோல்களைத் தூக்கி கீழே போட்டு விடாதீர்கள். அதை பத்திரப்படுத்தி வைத்து அந்த தோல்களைக் கூட தண்ணீரோடு சேர்த்து கொதிக்க வைத்துப் பயன்படுத்தலாம்.

ஆவி பிடித்து முடித்த பின்பு, துண்டால் துடைத்துக் கொண்டு பின் ஐஸ் கட்டியை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் நன்கு தேய்க்க வேண்டும்.ஆவி பிடித்த பின்னர், நம்முடைய முகத்தில் உள்ள சருமத் துவாரங்கள் விரிவடையாமல் இருக்க வேண்டுமென்றால் நிச்சயம் ஐஸ் ஒத்தடம் கொடுப்பது அவசியம். அதன்பின் ஏதாவது ஒரு பேஸ்பேக் அப்ளை செய்து சிறிது நேரம் கழித்து முகத்தைக் கழுவிவிடுங்கள். உங்கள் முகம் தேவதை போல ஜொலிக்கும்.

சரும சுருக்கங்களைப் போக்குவதற்கு, . ‘ஒளி தெரபி’ எனப்படும் சிகிச்சை முறையும் தற்போது பிரபலமடைந்து வருகிறது. வெள்ளை, நீலம், மஞ்சள் ஆகிய நிறங்கள் ஒளி சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த சிகிச்சையில் சூரிய ஒளியைப் பிரதிபலிக்கும் ஒளிக் கதிர்களை வெளியிடும் விளக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த விளக்கின் அருகில் காலையில் 20 முதல் 30 நிமிடங்கள் வரை உட்கார்ந்திருப்பது மனநிலையை மேம்படுத்தும்.

நல்ல தூக்கம் மிகவும் அவசியம். அதாவது 6 முதல் 8 மணி நேரம் தூங்குவது நல்ல பலன் கொடுக்கும். எனவே, சரும சுருக்கம் என்றதும் பதற வேண்டாம். வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே எளிதில் குணமாக்கி பளபளப்பு பெற்றுவிட முடியும்.

Leave a Comment