- சூப்பரான மெடிக்கல் அட்வைஸ்
திருப்பதி வெங்கடாசலம், மதுரை மீனாட்சி, மயிலாப்பூர் கபாலீஸ்வரர், பழனி முருகன் போன்ற திருத்தலங்களுக்கு வரிசையில் நின்று செல்லும் எந்த பெண்களும், ஆண்களும் சாமியாடுவது கிடையாது. அதேநேரம் கிராமப்புறத் தெய்வங்கள், குலதெய்வங்களைக் கும்பிடும் பெண்கள் மட்டும் ஆவேசமாக சாமியாடுகிறார்கள்.
இது ஏன் தெரியுமா?
மனதளவில் பலவீனமாக இருப்பவர்கள், மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் கோயிலில் எழுப்பப்படும் மணியோசை, குலவைச் சத்தம், கொட்டுச்சத்தம் ஆகியவற்றால் இழுக்கப்பட்டு தங்களை சாமியாடியாக நினைத்துக் கொள்கிறார்கள். இதனை குழு நோய் என்றும் சொல்லலாம். வேறு யாராவது ஒருவர் சாமியாடுவதைப் பார்த்து, தங்களுக்கும் சாமி வந்துவிட்டதாக நினைத்துக்கொள்கிறார்கள்.
சாதாரண நேரத்தில் இவர்கள் சொல்லும் கருத்தை மதிக்காதவர்கள், அதையே சாமியாடியாக சொல்லும்போது பய பக்தியுடன் கேட்டுக்கொள்கிறார்கள். எனவே, சாமியாடியாக இருப்பதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறார்கள். எனவே, தொடர்ந்து சாமியாடியாக இருக்க விரும்புகிறார்கள். சாமியாடும் நேரத்தில் எத்தகைய ஆவேசமாக நடந்துகொள்கிறோம், என்னவெல்லாம் பேசுகிறோம் என்பதை ஒருசிலரால் புரிந்துகொள்ளவே முடியாது. கொஞ்ச நேரத்தில் அவர்களாகவே இயல்பு நிலைக்கு வந்துவிடுவார்கள்.
எப்போதாவது ஒரு முறை சாமியாடுவது தவறல்ல. அடிக்கடி சாமியாடுவது, அளவுக்கு அதிகமாக ஆவேசமாவது, உடலை வருத்திக்கொள்வது போன்ற நிலை இருந்தால் மருத்துவ சிகிச்சை அவசியம். கோயிலில் சாமிக்கு அருகே நின்று பூஜை செய்பவர்கள், மேல்தட்டு பெண்கள் ஏன் சாமி ஆடுவதில்லை என்ற கேள்விகளை எழுப்பி உண்மைத் தன்மையை புரியவைப்பதும், அவர்களின் மன அழுத்தத்தை சரி செய்வதும் தீர்வாக இருக்கும்.