மெக்காவில் முத்தம்
இஸ்லாமியர்களின் புனித நகரமாக கருதப்படும் மெக்காவில் முத்தம் கொடுத்த இரண்டு வங்கதேசத்தினருக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்ட விவகாரம் உலகம் முழுக்க பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சவுதி அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலின்படி, அவர்கள் “ஒழுக்கக்கேடான செயலில்” ஈடுபட்டதாகக் கூறப்பட்டுள்ளது. அது பாலியல் குற்றம் என்று ஊடகங்களில் குறிப்பிடப்பட்டாலும், அந்தச் செயலின் துல்லியமான தன்மை அதிகாரபூர்வமாகப் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை. ஆனால், மசூதிக்கு வெளியே முத்தம் கொடுத்ததையே குற்றம் என்று கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் வங்க தேசத்தைச் சேர்ந்த நஸ்ருல் இஸ்லாம் அப்துல் பாசிர் (Nazerul Islam Abdul Basir) மற்றும் சிதி அக்தர் (Siti Akhtar) ஆகிய இருவரும் குற்றம் சாட்டப்பட்டுல்ளனர். மசூதிக்குள் ஒழுக்கக்கேடான செயலில் ஈடுபட்டதாகக் குற்றம் நிரூபிக்கப்பட்டு, மரண தண்டனை இந்த மாதம் அக்டோபர் 14ம் தேதி நிறைவேற்றப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவின் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, பாதுகாப்பு அதிகாரிகள் இருவரையும் கைது செய்தனர். விசாரணைக்குப் பின்னர் அவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டது. உரிய நீதிமன்றம் அவர்களைக் குற்றவாளிகளாகக் கண்டறிந்து மரண தண்டனை விதித்தது. அந்தத் தீர்ப்பு சம்பந்தப்பட்ட உயர் நீதித்துறை அமைப்பால் உறுதிசெய்யப்பட்டு, பின்னர் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான அரச ஆணை பிறப்பிக்கப்பட்டதாகச் சவுதி அதிகாரிகள் தெரிவித்தனர். அக்டோபர் 14 அன்று மெக்கா பகுதியில் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அவர்கள் இருவரும் கணவன், மனைவியா அல்லது காதலர்களா என்று முழுமையான தகவல்கள் கூறப்படவில்லை. மசூதியின் புனிதத்தன்மையையும் அந்த இடம் மற்றும் நேரத்தின் புனிதத்தையும் மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
இஸ்லாமியர்களுக்கு மெக்கா மிக முக்கியமான புனித நகரமாகும். அங்குள்ள மஸ்ஜிதுல் ஹராம் உள்ளிட்ட மசூதிகள் வழிபாட்டுக்கும் ஆன்மிக ஒழுக்கத்துக்கும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. எனவே, புனித இடத்தில் செய்யப்படும் குற்றங்கள் குறித்து சவுதி அதிகாரிகள் கடுமையான அணுகுமுறையை வெளிப்படுத்துகின்றனர்.
ஒரு செயல் மதரீதியாகக் கடுமையான தவறாகக் கருதப்படுகிறது என்றாலும், அதற்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது.
பொதுவாக மரண தண்டனை விதிக்கப்படும் குற்றங்கள் மிகவும் தீவிரமானவையாக இருக்க வேண்டும் என்பது சர்வதேச மனித உரிமை விவாதங்களில் முக்கியமான கோட்பாடு. குற்றச்சாட்டின் தன்மை, ஆதாரங்களின் நம்பகத்தன்மை, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழக்கறிஞர் உதவி கிடைத்ததா, நியாயமான விசாரணை நடைபெற்றதா போன்றவை இங்கு முக்கியம்.
ஒருவர் செய்த குற்றம் எவ்வளவு கடுமையானதாக இருந்தாலும், அவருக்கு மரண தண்டனை என்பது அவர்கள் செய்த குற்றத்தைவிட கொடுமையானது. இதைத்தான் இஸ்லாத்தின் கடவுள் விரும்புகிறாரா..? இதுதான் இஸ்லாம் போதிக்கும் அன்புப் பாதையா..?
ரத்தம் கேட்பது எந்த மதமாக இருந்தாலும், அது அழியத்தான் வேண்டும்.
