விளக்கமளிக்கிறார் வழக்கறிஞர் நிலா
கொறடா உத்தரவை மீறிவிட்டார்கள், கட்சிக் கொறடா என்பதெல்லாம் தமிழக சட்டமன்றத்தில் அதிகம் விவாதிக்கப்படும் ஒரு பேச்சாக இருக்கிறது. கொறடா என்பது என்ன பதவி, இதற்கு என்ன அதிகாரம் என்பது குறித்து அரசியல் நுணுக்கத்துடன் விளக்கம் தருகிறார் வழக்கறிஞர் நிலா.
கொறடா என்றால்…?
“Whip” என்ற ஆங்கிலச் சொல்லின் தமிழ் வடிவமே கொறடா. இந்தப் பதவி இந்திய நாடாளுமன்ற முறையில் பிரிட்டிஷ் பாராளுமன்ற மரபிலிருந்து வந்தது.
ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்களது சட்டமன்ற உறுப்பினர்கள் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒற்றுமையாக ஒருமித்த அனுபவத்துடன் செயல்படுவதற்கு ஒருவரை அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவரை கொறடாவாக நியமிக்கிறது.

அரசு கொறடா
ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொறடா இருப்பது போன்று அரசுக்கும் கொறடா இருக்கிறார். இவர் தலைமை கொறடா என்று அழைக்கப்படுகிறார். அரசு கொறடா என்பவர், மாநில அமைச்சருக்கு இணையான அந்தஸ்து பெற்றவர். அவருக்கு அமைச்சருக்கு உண்டான வாகனம், தனி அறை உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும். சட்டமன்றம் அல்லது நாடாளுமன்றத்தில், ஒரு அரசியல் கட்சியின் உறுப்பினர்களை ஒருங்கிணைத்து, கட்சித் தலைமையின் உத்தரவுகளை நடைமுறைப்படுத்தும் முக்கியப் பொறுப்பு வகிப்பவர் தலைமை கொறடா (Chief Whip) ஆவார். சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று பெரும்பான்மை எம்எல்ஏக்களுடன் ஆட்சியமைக்கும் கட்சியில் இருந்து, ஒரு எம்எல்ஏ தேர்வு செய்யப்பட்டு, அவர் அரசு கொறடாவாக அறிவிக்கப்படுவார். அதேபோல், ஒவ்வொரு கட்சியில் இருந்தும் ஒருவர் கொறடாவாக தேர்வு செய்யப்படுவார்.
கொறடாவின் பணி
தங்கள் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் அவையில் கலந்து கொள்வதை உறுதி செய்வது. மசோதாவுக்கு ஆதரவாக அல்லது எதிராக கட்சியின் நிலைப்பாட்டின் அடிப்படையில் வாக்களிக்க வேண்டும் என்பதை அறிவுறுத்துவது கொறடாவின் முக்கியப் பணியாகும். சுருக்கமாகச் சொல்வது என்றால் சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் கட்சியின் ஒழுங்கை நிலைநாட்டும் அதிகாரியே கொறடா.
கொறடா அவசியமா?
ஒரு கட்சியில் 100 எம்.எல்.ஏக்கள் இருந்தாலும், அவர்கள் ஒவ்வொருவரும் அவர்கள் விருப்பப்படி தனித்தனியாக வாக்களிக்க ஆரம்பித்தால் கட்சியின் நிலைப்பாடு சிக்கலாகிவிடும். எனவே, யார் எப்போது வர வேண்டும்? எப்படிப் பேச வேண்டும்? எந்த தீர்மானத்தில் எப்படி வாக்களிக்க வேண்டும்? என்பதை ஒருங்கிணைக்க கொறடா அமைப்பு உருவாக்கப்பட்டது.
கொறடா அதிகாரம்
கொறடாவுக்கு அமைச்சர் போன்று அதிகாரங்கள் இல்லை. ஆனால் கட்சி தொடர்பான நடவடிக்கைகளில் அமைச்சரைவிட அதிக அரசியல் செல்வாக்கு கொண்டவராக இருப்பார்.
கொறடாவுக்கு உள்ள முக்கிய அதிகாரம் என்னவென்றால் கட்சியின் அதிகாரபூர்வ உத்தரவு வழங்குவது. அதாவது ஒரு மசோதா அல்லது நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவாக அல்லது எதிராக வாக்களிக்க வேண்டும் என்று உத்தரவு போட முடியும். அதேபோல், அவையில் கண்டிப்பாக இருக்க வேண்டும் அல்லது வெளிநடப்பு செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கலாம்.
அதிரடி நடவடிக்கை
உறுப்பினர்களின் நடவடிக்கையைக் கண்காணித்து யார் அவைக்கு வரவில்லை? யார் எதிராக பேசுகிறார்கள்? யார் மாற்றி ஓட்டு போடுகிறார்கள் என்பதை கட்சித் தலைமையிடம் தெரிவிப்பார்.
ஒரு உறுப்பினர் கொறடா உத்தரவை மீறினால் அவரை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்ய முடியும். எம்.எல்.ஏ. அல்லது எம்.பி. பதவி நீக்கம் பரிந்துரை செய்ய முடியும்.
கட்சித்தாவல் தடுப்பு சட்டம்
முன்பு கொறடா உத்தரவை மீறுவதன் மீதான நடவடிக்கை பலவீனமாக இருந்தது. ஆனால் இப்போது இந்தியாவில் கட்சி தாவல் தடுப்பு சட்டம் (Anti-Defection Law) 1985-ல் அரசியலமைப்பின் 10வது அட்டவணையாக கொண்டு வரப்பட்டது. இதன்படி கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டுக்கு எதிராக வாக்களித்தால் அல்லது வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் இருந்தால் அந்த உறுப்பினரை தகுதி நீக்கம் செய்யலாம்.
அதனால்தான் கொறடா உத்தரவு சாதாரண அறிவிப்பு அல்ல; அது அரசியல் உயிர்க்கோடு. தமிழகத்தில் பல முறை குறைந்த பெரும்பான்மை அரசுகள் உருவான சூழ்நிலைகள் இருந்துள்ளன.
அந்த நேரங்களில் சில எம்.எல்.ஏ.க்கள் தரப்பு மாறுவது, ரகசிய ஆதரவு, எதிர்ப்பு போன்றவை அரசை கவிழ்க்கும் அளவுக்கு செல்வதால், கொறடா மிகவும் முக்கியமானவராக மாறுகிறார்.
குறிப்பாக நம்பிக்கை வாக்கெடுப்பு, ராஜ்யசபா தேர்தல், சபாநாயகர் தேர்தல், நிதி மசோதாக்கள் போன்ற விவகாரங்களில் கட்சியின் கொறடா உத்தரவு கடுமையாக அமல்படுத்தப்படும். இதன் மூலம் கட்சி ஒற்றுமை பாதுகாக்கப்படுகிறது. பணம் கொடுத்து உறுப்பினர்களை வாங்கும் அரசியல் குறையும். அரசு நிலைத்தன்மை பெறும்.
பாதகம் என்ன..?
கொறடாவின் உத்தரவு மூலம் எம்.எல்.ஏக்களின் தனிப்பட்ட கருத்து சுதந்திரம் பாதிக்கப்படுகிறது என்பது நீண்ட காலமாக கூறப்பட்டு வருகிறது. மக்கள் பிரதிநிதியாக இல்லாமல் கட்சியின் அடிமையாக மாறவேண்டிய நிலை உருவாகிறது. தலைமையின் சர்வாதிகாரத்துக்கு முழு கட்டுப்பாடு கிடைக்கிறது. இதனால் இந்தியாவில் எம்.எல்.ஏக்கள் மக்கள் பிரதிநிதிகளாக இல்லாமல், கட்சி பிரதிநிதிகளாகவே செயல்பட வேண்டிய நிலையை கொறடா உருவாக்குவதாக விமர்சிக்கிறார்கள்.
சில நேரங்களில் முதலமைச்சரின் ஆட்சியை காப்பாற்றுவதிலும், சில நேரங்களில் அரசை கவிழ்ப்பதிலும் கூட கொறடாவின் பங்கு தீர்மானிப்பதாக மாறிவிடுகிறது.
