• Home
  • சர்ச்சை
  • சூர்யாவுக்கு அப்பாவை விட மனைவி முக்கியமா..?

சூர்யாவுக்கு அப்பாவை விட மனைவி முக்கியமா..?

Image

பொண்டாட்டிதாசன் விமர்சனம்

தமிழர்களின் அடையாளங்களில் ஒன்றாக கருதப்படும் கூட்டுக்குடித்தனம் கிட்டத்தட்ட வழக்கொழிந்து போயிருக்கிறது. பொருளாதாரம், லைஃப் ஸ்டைல் மாற்றம் காரணமாக திருமணம் முடித்ததும் பெரும்பாலோர் தனிக்குடித்தனம் போய்விடுகிறார்கள். ஆனாலும் இந்த விஷயத்தில் பெரும்பாலும் ஆணுக்கு சாதகமான முடிவுகளே எடுக்கப்படுகிறது. அதாவது ஆணின் பெற்றோர் இருக்கும் ஊர் அல்லது ஆண் வேலை பார்க்கும் இடத்துக்குப் பக்கத்தில் குடியேறுகிறார்கள். இதனை பெண் ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

இதில் மாறுபட்டு ஒரு சிலரே பெண் விருப்பத்துக்கு மதிப்பு கொடுக்கிறார்கள். அப்படியொரு நபராக நடிகர் சூர்யா மாறியிருக்கிறார். இத்தனை காலமும் பெற்றோருடன் சென்னையில் வசித்துவந்த சூர்யா, இப்போது மனைவி ஜோதிகாவின் விருப்பத்துக்கு ஏற்ப மும்பைக்கு குடி பெயர்ந்துள்ளார். பெத்த அம்மா, அப்பாவையும், ஏற்றிவிட்ட தமிழகத்தையும் ஏமாற்றிவிட்டார் என்று விமர்சனம் செய்கிறார்கள்.

இந்த விமர்சனத்துக்கு சூர்யா எளிமையாகவும் தெளிவாகவும் ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார். ’’எப்போதும் ஆண்களுக்காக பெண்கள் எல்லாவற்றையும் விட்டுக்கொடுக்க வேண்டுமா? ஆண்களும் பெண்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதிலும், விட்டுக்கொடுப்பதிலும் தவறு இல்லை, அதற்கான சிறிய முயற்சி செய்திருக்கிறேன்’’ என்று வெளிப்படையாகவே ஜோதிகாவுக்காக இந்த மாற்றம் என்கிறார். ஏனென்றால் சூர்யாவுக்காகவும் சூர்யா குடும்பத்துக்காகவும் ஜோதிகா இதுவரை தன்னுடைய சினிமா வாழ்க்கையை மட்டுமின்றி சொந்தக் குடும்பத்தையும் இத்தனை காலமும் இழந்திருக்கிறார்.

பொதுவாக திருமணம் என்பது ஆணுக்கு மகிழ்ச்சிகரமான மாற்றமாக இருக்கிறது. அதேநேரம், பெண்ணுக்கு ஒட்டுமொத்த இடப்பெயர்வாக மாறிவிடுகிறது. ஒரு செடியை வேரோடு புடுங்கி வேறு ஓர் இடத்தில் நடப்படுவது போன்று பெண் வாழ்க்கை அசைக்கப்படுகிறது. ஒரே ஒரு தாலி காரணமாக தன்னுடைய சொந்த குடும்பத்தை விட்டு அந்நியமாகிறாள்.

பெண் நிறைய படித்திருந்தாலும் திறமையோடு இருந்தாலும்  திருமணத்துக்குப் பிறகு அவள் வேலையைத் தொடர்வதற்கு எக்கச்சக்க தடைகள் போடப்படுகின்றன. அதை ஒரு வழியாகத் தாண்டும் பெண்களில் நிறைய பேர் குழந்தைப் பிறப்புக்குப் பிறகு வேலையை விட வேண்டிய நிலைக்கு ஆளாகிறார்கள். மத்திய அரசின் தேசிய குடும்ப ஆரோக்கிய ஆய்வறிக்கையின்படி திருமணமான பெண்களில் சுமார் 32%தான் வேலைக்குப் போகிறார்கள். ஆனால், இவர்களில் கிட்டத்தட்ட 25% பேர் கூலித் தொழிலாளர்கள் நிலையில் இருக்கும் ஏழைப் பெண்கள். படித்து, முடித்து திருமணத்திற்குப் பிறகு, குழந்தைகளுக்குத் தாயான பிறகும் வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 7% மட்டும் தான்.

பிள்ளைகள் வளரும் வரையிலும், அவர்களைக் கவனிக்கவில்லை என்றால் பிரச்னையாகிவிடும் என்ற பயத்தில் தங்களையே மறந்துவிடுகிறார்கள். ஆனால், எல்லாம் கொஞ்ச காலம் தான். பிள்ளைகள் சடசடவென வளர்ந்து விடுகிறார்கள். அதன் பிறகு பெண்கள் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போன்ற நிலைக்கு ஆளாகிறார்கள். அதனால் தான்  குடும்பத்தில் நிறைய இடங்களில் சண்டை நடக்கிறது, விவாகரத்தை நோக்கி வாழ்க்கை நகர்கிறது.

பிள்ளை படித்து முடித்து வேலைக்குப் போய் சம்பாதிக்கத் தொடங்கியதும் நிறைய குடும்பத் தலைவிகளுக்கு கணவனை எதிர்த்து நிற்கும் தைரியம் வந்துவிடுகிறது. எல்லாமே இருந்தும் எதையோ இழந்தது போல் உணரும் பெண்கள் தங்கள் வாழ்க்கையை மறுபரிசீலனை செய்யவேண்டிய நிலைக்கு ஆளாகிறார்கள்.

இது போன்ற தருணங்களில் பெண்களுக்கு ஆதரவாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டியது ஆணின் கடமை. அதையே சூர்யா சிறப்பாகவும் தெளிவாகவும் செய்திருக்கிறார்.

குழந்தைகள் கொஞ்சம் பெரியவர்கள் ஆனதும் ஜோதிகாவுக்குத் தனிமை போரடித்திருக்கிறது. அவர் மீண்டும் தன்னுடைய குடும்பத்தைத் தேடுகிறார். அதற்கு சூர்யாவும் ஆதரவாக நின்று அவரது விருப்பத்தை நிறைவேற்றி இருக்கிறார். கணவனுக்காக மனைவி விட்டுக்கொடுப்பது மட்டுமல்ல, மனைவிக்கு கணவன் விட்டுக்கொடுப்பதும் சரியான முடிவு என்பதை செயலில் காட்டியிருக்கிறார் சூர்யா.

தாய், தந்தை, சகோதரர் ஆகியோரை விட மனைவியின் பக்கம் நிற்க வேண்டிய நேரம் இது என்பதை சூர்யா தெளிவாகப் புரிந்திருக்கிறார். ஒரு நல்ல நடிகர் மட்டுமல்ல, ஒரு நல்ல கணவர் என்ற வகையிலும் சூர்யா ஜெயித்திருக்கிறார்.

Leave a Comment

Image Not Found

கட்டுரை பகுதிகள்