ஞானகுரு பதில்கள்
கேள்வி : காலம் கனியும் காத்திரு என்று பெரியோர்கள் கூறுகிறார்களே..?
- ஏ.வினிதா, கோட்டையூர்.
ஞானகுரு :
வேட்டைக்குச் செல்லும் இடத்தில் சில முயல் குட்டிகள் கிடைக்கிறது. உடனே அதனை விற்பனை செய்பவனுக்கு அன்றைய வயிறு நிரம்புகிறது. ஆனால், அந்த முயல் குட்டிகளை வளர்த்து, நிறைய குட்டிகள் போடவைத்து, ஒரு பண்ணையாக மாற்றுபவன் செல்வந்தனாகிறான். அந்த காத்திருக்கும் காலமே ஒருவனை மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்தி கனிய வைக்கிறது. வயிற்றுக்கும் மூளைக்கும் நடக்கும் போட்டியில் எதற்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பதில் இருக்கிறது வெற்றி.
கேள்வி : பாவத்திற்கான தண்டனையும் புண்ணியத்திற்கான பலனும் மனிதர்களுக்குக் கிடைக்குமா..?
- டி.பூபதிபாண்டியன், ஹவுசிங் போர்டு.
ஞானகுரு :
பாவம் என்றும் புண்ணியம் என்றும் எப்படி வரையறை செய்வது..? வறுமையில் வாடும் ஒரு மீனவனின் வலையில் நிறைய விலையுயர்ந்த மீன்கள் கிடைக்கிறது என்றால், அது அவன் செய்த புண்ணியத்துக்குக் கிடைத்த பரிசா… அப்படியென்றால் அந்த மீன்களுக்கு அது புண்ணியமா அல்லது தண்டனையா..? இங்கு எதுவும் உண்மை அல்ல. புண்ணியம் என்றும் பாவம் என்றும் எதுவும் இல்லை என்பதை தெளிவதே அறிவு.