சூடம் காட்டுவது தொழில் பக்தியா.?

Image

ஆசிரியர் பார்வை

நிறைய தொழிற்சாலைகள், கடைகளைத் திறந்ததும் பக்திமயமாக சூடம், பத்தி பொருத்தி, சாம்பிராணி காட்டுவார்கள். இதையே தொழில்பக்தி என்று நினைக்கிறார்கள்.

ஆயிரம் பேர் தொழில் தொடங்கினாலும் வெற்றி ஒருவருக்குத்தான் கிட்டுகிறது. அந்த வெற்றிக்கு திறமை, கால சூழல், தேவை என பல காரணங்கள் இருந்தாலும், மிகவும் முக்கியமானது தொழில் பக்தி. ஆம், ;செய்யும் தொழிலை தெய்வமாகக் கருதி செய்பவரால் மட்டுமே வெற்றியை நோக்கி நகர முடியும்.

ஏன் தொழில் பக்தி வேண்டும் என்று சொல்கிறோம் என்றால், காரணம் இருக்கிறது. பக்தி என்பதன் அர்த்தம், மனதை வேறு எதிலும் அலைபாய விடாமல், ஒருமுக சிந்தனையாக செய்வதுதான். அப்படிப்பட்ட ஒருமுக சிந்தனையை தொழிலில் செலுத்துபவனால் நிச்சயம் வெற்றிக்கோட்டை தொட்டுவிட முடியும்.

ஒருவர் ஒரு தொழிலில் வெற்றிபெற்றதும், அவரது கடையின் பெயரை வைத்து பலரும் அருகருகே போட்டிக்குத் தொழில் தொடங்குவதை பார்த்திருப்பீர்கள். ஆனால், தொழில் பக்தியுடன் நேர்மையாக தொழில் செய்துவரும் முதல் நபரின் கடையில் நடக்கும் வியாபாரத்தை போட்டியாளர்களால் ஒருபோதும் தட்டிப்பறிக்க முடியாது. அந்த வெற்றிக்குக் காரணம்தான் தொழில் பக்தி. அந்த பக்திதான் அவரை, தொழிலில் மட்டுமல்லாது, வாழ்விலும் உயர வைக்கிறது.


வெளிநாடு சென்று மேற்படிப்புகள் படித்தால் மட்டும்தான் தொழிலை வெற்றிகரமாக அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியும் என்பதில்லை. சின்ன அளவில் தொழில் தொடங்கி, அதன் நெளிவுசுளிவுகளை அறிந்து, தோல்விகளை வெற்றிப்படிகளாக்கி, படிப்படியாக முன்னேறி பெரும் தொழில் சாம்ராஜ்யத்தைப் படைத்தவர்கள்தான் டாடா, பிர்லா போன்ற கோடீஸ்வரர்கள்.    

ஒரு தொழிலில் திடீர் வெற்றிக்கு ஆசைப்படாமல்,  நீண்டகாலம் நிலைத்துநிற்கும் வெற்றிக்காகத்தான் உழைக்க வேண்டும். அதற்கு நேர்மை, திறமையுடன் தொழில் பக்தியும் அவசியம். இன்னொரு வகையில் சொல்வது என்றால், தொழில் பக்தி உடைய ஒருவர் நேரம் காலம் பார்க்காது கடின உழைப்பைக் கொடுப்பதற்கு தயாராகவே இருப்பார். சின்னச்சின்ன தோல்விகளைக் கண்டு கலங்கிவிட மாட்டார்.

மேலும், ஒரு மாணவனைப்போல ஒவ்வொரு விஷயத்தில் இருக்கும் கற்றுக்கொள்ளும் மனநிலையுடன் இருப்பார். அதிக லாபத்தைக் காட்டி அவரை ஏமாற்றிவிட முடியாது. சிந்தனை நேர்மையாக இருந்தால், அந்த தொழில் எந்த சிரமமும் இல்லாமல் வளர்ந்துகொண்டே இருக்கும் என்பது உறுதி.

ஆரம்பகாலத்தில் மட்டுமல்ல. வெற்றிபெற்ற பின்னும்  உழைப்பைக் கொடுத்துக்கொண்டே இருப்பதுதான் தொழில் பக்தி.  தொழிலைத் தக்க வைக்க. உழைப்பின் வடிவமும் வீச்சும் மாறலாம். ஆனால் என்றும் தொழில் பக்தி நிலைத்து நிற்க வேண்டும். அதுதான், வெற்றிக்கு ஆதாரம்.

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்

Leave a Comment