• Home
  • சட்டம்
  • கல்யாணத்துக்கு முன்பு கவுன்சிலிங் சட்டப்படி அவசியமா..?

கல்யாணத்துக்கு முன்பு கவுன்சிலிங் சட்டப்படி அவசியமா..?

Image

வழக்கறிஞர் நிலா விளக்கம் அளிக்கிறார்

இன்றைய இளம் தலைமுறையினர் ஆணும், பெண்ணும் செல்லப்பிள்ளைகளாக வளர்கிறார்கள். காலம் முழுவதும் சேர்ந்து வாழப்போகிறோம் என்ற ஆசையிலும் ஆர்வத்திலும் ஜோடி சேர்கிறார்கள். ஆனால், தன்னுடைய வாழ்க்கையில் இன்னொரு நபரை அனுசரித்துச்செல்வதில் கடும் நெருக்கடியை சந்திக்கிறார்கள். இதனால் நிறைய திருமணங்கள் தோல்வியைத் தழுவுகின்றன.

இந்த திருமணத் தோல்விகளுக்கு நல்லதொரு தீர்வாக கல்யாணத்துக்கு முன்பு கவுன்சிலிங் என்பதை முன்வைக்கிறார் வழக்கறிஞர் நிலா.

திருமணத்திற்கு முன்பு கவுன்சிலிங் எடுத்துக்கொள்வது பல்வேறு வழிகளில் உதவி செய்யும் என்கிறார். அதாவது திருமணத்துக்குத் தயாராகும் இருவருடைய தனிப்பட்ட எதிர்பார்ப்புகள், இலக்குகள், மதிப்புகள், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றைப் பற்றி நேர்மையாக பேசும் சூழலை உருவாக்கும்.

அதேபோல் சிக்கலான விஷயங்களை எப்படிச் சொல்லுவது, ஒருவருடைய உணர்வுகளை மற்றவருக்கு எப்படி புரிய வைக்கலாம் என்பதைக் கவுன்சிலிங் கற்றுத்தரும். எனவே சின்னச்சின்ன விஷயங்களில் வரும் சாதாரண மனஸ்தாபங்களைத் தவிர்க்க இது மிகவும் உதவும். சண்டை, தகராறு வரும்போது அதை புத்திசாலித்தனமான சமாளிக்கும் வழிகளை அறிந்துகொள்ள முடியும்.

குடும்ப செலவுகள், சேமிப்பு, கடன், சொத்து முதலிய பொருளாதார விஷயங்களை சிந்திக்கவும், திட்டமிடவும் உதவுகிறது. ஆரம்பத்திலேயே இது குறித்து இருவரும்  பேசி விட்டால் எதிர்காலச் சிக்கல்கள் குறையும்.

மேலும், அவரவர் பெற்றோருடன் என்ன மாதிரியான உறவை வைத்திருக்க விரும்புகிறார்கள் என்பதிலும் குழந்தை பெற்றுக்கொள்வதில் பெற்றோர் தலையீடு, தம்பதியர் விருப்பம் குறித்து பேசிக்கொள்ள முடியும்.

நிறைய குடும்பத்தினருக்குச் சிக்கலாக இருக்கும் பாலியல் எதிர்பார்ப்புகள், உடல் நலம் மற்றும் நெருக்கம் குறித்த விஷயங்களை பாதுகாப்பாக விவாதிக்கலாம். அதேபோல் கடந்த காலத் தவறுகள், சிக்கல்களை எப்படி சரிசெய்வது என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படலாம். இதனால் இருவரும் ஒருவருக்கொருவர் ஆதரவு தரும் நிலை உருவாகும்.

சட்டத்தின் பார்வையில் திருமணத்திற்கு முந்தைய கவுன்சிலிங் அவசியம் இல்லை என்றாலும் இன்றைய சூழலில் இது மிகப்பெரும் முன் தயாரிப்பை வழங்கிவிடும். ஆகவே, எப்படிப்பட்ட பிரச்னைகள் எல்லாம் வர வாய்ப்புண்டு என்பதை அறிந்துகொண்டு, அதனை தீர்க்கவும் முன்வரலாம்.

இதுபோன்ற மேலும் சில முக்கிய கருத்துகளை புதுயுகம் தொலைக்காட்சியில், ‘சட்டம் ஒரு வகுப்பறை’ நிகழ்ச்சியில் பேசிவருகிறார் நிலா. அதனை பாருங்கள், மேலும் நிறைய நல்ல தகவல்கள் அறிந்துகொள்ளலாம்.

YouTube player

Leave a Comment