ஒரு குழந்தை போதுமா..?!

Image

கொஞ்சம் யோசிங்க பாஸ்

அது ஒரு காலம். தீபாவளி பண்டிகை என்றால் வீடு முழுவதும் உறவுகளால் நிரம்பி வழியும். இரண்டு நாட்களுக்கு முன்னரே வகைவகையாக இனிப்புகள் தயார் செய்வார்கள். பண்டிகை தினத்தில் பெரியோர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி, புதிய துணிகளை உடுத்தி, பட்டாசுவிட்டு, இனிப்புகள் சாப்பிட்டு மகிழ்வார்கள். அக்கம்பக்கத்தினருக்கும் அள்ளியள்ளிக் கொடுப்பார்கள் என்பதால், இருப்பவர்கள், இல்லாதவர்கள் என்ற வித்தியாசமின்றி ஊரே சந்தோஷத்தில் மிதக்கும்.

ஆனால், இன்று தீபாவளி மட்டுமல்ல எந்த ஒரு பண்டிகைக்கும் வீடுகளில் விருந்தினர்களை வரவேற்கும் பழக்கம் போயேபோய்விட்டது. அவரவர் வீட்டு வாசலில் பட்டாசுகளைப் போட்டு, அவரவர் அழகு பார்த்துக்கொள்ளும் நிலை வந்துவிட்டது. ஒவ்வொரு வீடும் தனித்தனி தீவாக மாறிவிட்டது.

இதற்கெல்லாம் காரணம் என்னவென்று யோசனை செய்திருக்கிறீர்களா..? வீட்டுக்கு ஒரு பிள்ளை போதும் என்ற முடிவுக்கு பலரும் வந்ததுதான். தனியே வாழ்ந்த பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களானதும், பெற்றோர்களையே பாரமாகத்தான் பார்க்கிறார்கள். உறவுகளையும் நட்புகளையும் தள்ளியே வைக்கிறார்கள். அதனால்தான் இன்று முதியோர் இல்லங்களிலும், வீடுகளிலும் தனித்து வாழும் முதியவர்கள் எண்ணிக்கை பெரிகியுள்ளது.

அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, சின்ன அண்ணன், பெரிய அண்ணன், சின்ன அக்கா, பெரிய அக்கா, சித்தப்பா, பெரியப்பா, அத்தை, மாமா, மச்சான்,மச்சினி, அண்ணி, கொழுந்தனார், நாத்தனார், தாய்மாமன், சித்தப்பா பையன், சித்தப்பா பொண்ணு, பெரியப்பா பையன், பெரியப்பா பொண்ணு, அத்தை பையன், அத்தை பொண்ணு, மாமன் பொண்ணு, மாமன் பையன் போன்ற வார்த்தைகள் எல்லாம் இன்னும் சில ஆண்டுகளில் யாருக்கும் புரியாமலே போய்விடும்.

தனியே வாழ்வது பொருளாதார ரீதியில் வசதியாக இருக்கலாம். ஆனால், அதனால் எத்தனையெத்தனை இழக்கிறார்கள் தெரியுமா? இன்பத்தை, துன்பத்தை  பகிர்ந்துகொள்ள யாரும் இருப்பதில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நேரத்தில் நர்ஸை தவிர, யாரும் துணைக்கு இருப்பதில்லை. கட்டிக் கொடுத்த பெண் வீட்டில் ஒரு பிரச்னை என்றால், உரிமையுடன் சண்டை போட யாரும் வருவதில்லை. திருமண வீடுகளில் கலகலப்பு உண்டாக்க நாத்தனார், கொழுந்தன் இருப்பதில்லை. குழந்தைக்கு மொட்டை போடுவதற்கு மாமன் மடி கிடைப்பதில்லை. பாட்டி, தாத்தா கதையைக் கேட்க யாருமில்லை.

அதனால், ஒரே ஒரு முறை உங்கள் கடைசி காலம் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். பணமில்லாத ஒருவனை அனாதை என்று யாரும் சொல்வதில்லை. உறவுகள் அருகே இல்லாதவர்தான் அனாதை. கார், பங்களா வசதியைவிட, தோளில் சாய்ந்து அழுவதற்கு உறவுகளும், வெற்றியை பகிர்ந்துகொள்ளவும் சொந்தங்களும் தேவை என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.

உங்கள் குழந்தைக்கு எதிர்கால பாதுகாப்புக்கு சொத்துக்கள் மட்டும் போதாது என்பதுதான் மருத்துவர்களின் ஆலோசனையும் ஆகும். ஆகவே, வீட்டுக்கு இரண்டு பிள்ளைகளாவது அவசியம் என்பதை புரிந்துகொண்டு முடிவெடுங்கள்.

அதேநேரம், உங்கள் உடல் நிலை, பொருளாதார நிலை மற்றும் வளர்ப்பதற்கான வாய்ப்புகளையும் நன்கு ஆலோசனை செய்து முடிவெடுங்கள்.

ஒரு பிள்ள என்றால் நல்லது. இரண்டு பிள்ளை என்றாலும் நல்லது.

Leave a Comment