குவியும் வி.ஐ.பி.கள்
இந்தியா முழுக்க ரத்தன் டாட்டா மறைவுக்கு வருந்தும் நேரத்தில் தமிழகத்தில் மட்டும் முரசொலி செல்வம் இறுதிச்சடங்குக்கு எக்கச்சக்க வி.ஐ.பி.கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இத்தனை பேருக்கும் முரசொலி செல்வம் பழக்கமான நபரா அல்லது முதல்வர் ஸ்டாலின் என்பதால் அவரை இத்தனை பேரும் நெருக்கம் என்று சொந்தம் கொண்டாடுகிறார்களா என்று அப்பாவி பொதுஜனம் ஆச்சர்யமாகப் பார்க்கிறார்கள்.
உண்மையில் முரசொலி செல்வம் யார்..?
கருணாநிதியின் மருமகனாக எல்லோருக்கும் தெரிந்த முரசொலி மாறனின் தம்பியே இந்த முரசொலி செல்வம். கருணநிதியின் மூத்த மகள் செல்வியைத் திருமணம் செய்துகொண்டவர். அதனாலே திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியின் ஆசிரியராக இருந்தவர்.
முரசொலி ஆசிரியர் என்ற காரணத்தாலே எம்.ஜி.ஆராலும் ஜெயலலிதாவாலும் தண்டிக்கப்பட்டவர். எண்பதுகளில் திருச்செந்தூர் ஆலய சரிபார்ப்பு அதிகாரி சுப்ரமணியப் பிள்ளை மர்மக்கொலை தொடர்பாக எம்ஜிஆர் அரசு ஓய்வுபெற்ற நீதிபதி சி.ஜே.ஆர்.பால் தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்தது. அந்தக் கமிஷனின் அறிக்கையை எம்ஜிஆர் அரசு வெளியிடாத நிலையில், அதை எதிர்க்கட்சித் தலைவரான கலைஞர் திடீரென ஒருநாள் பத்திரிகையாளர்களிடம் வெளியிட்டு எம்ஜிஆர் அரசுக்கு நெருக்கடியை உருவாக்கினார்.
அதனால் ஆத்திரமடைந்த எம்ஜிஆர் அரசு உடனடியாக முரசொலி அலுவலத்துக்குள் சோதனை நடத்தியது. அரசு அதிகாரி சதாசிவம், உதவியாளர் சண்முகநாதன் ஆகியோரோடு சேர்ந்து முரசொலி செல்வத்தையும் கைது செய்து சிறையில் அடைத்தது.
ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் பரிதி இளம்வழுதி பேசிய பேச்சு முரசொலியில் வெளியானது. அப்போது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட பகுதியைப் பிரசுரித்த குற்றத்துக்காக முரசொலி மீது உரிமைமீறல் பிரச்னை எழுப்பப்பட்டது. முரசொலி ஆசிரியர் முரசொலி செல்வத்தை சட்டமன்றத்தில் வைத்து கண்டிக்கப்போவதாக அறிவித்தார் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா. அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தை அணுகினார் முரசொலி செல்வம். அப்போது முரசொலி செல்வம் மன்னிப்பு கோருவதாக இருந்தால், பிரச்னையை விட்டுவிடும்படி சபாநாயகரைக் கேட்டுக்கொள்வோம் என்றார் நீதிபதி. ஆனால் அவையிலிருந்து நீக்கப்பட்ட பகுதிகள் எவையென்று தெரியாத நிலையில், குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்கமுடியாது என்று உறுதியாகச் சொல்லிவிட்டார் முரசொலி செல்வம்.
அதனைத் தொடர்ந்து டெல்லி சென்று மக்களவை சபாநாயகரை சந்தித்துப் பேசிவிட்டு வந்த சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா, உடனடியாக முரசொலி செல்வத்தைக் கைது செய்ய உத்தரவிட்டார். சட்டப்பேரவை கூடும் நாளில் நேரில் வந்து ஆஜராகவேண்டுமென முரசொலி செல்வத்துக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி, சட்டமன்றத்தில் அதுவரை இல்லாத வகையில் நீதிமன்றத்தில் இருப்பது போன்ற சிறப்புக்கூண்டு கொண்டுவரப்பட்டது. சட்டமன்றத்துக்கு வந்த முரசொலி செல்வம், அந்தக் கூண்டில் ஏறி நின்றார். பிறகு கண்டனத் தீர்மானத்தை வாசித்தார் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா.
ஜெயலலிதா ஆட்சியில் பத்திரிகைகளுக்கு எதிரான அடக்குமுறை நிகழ்வாக விமர்சிக்கப்படும் இந்த நிகழ்வு பற்றி முரசொலியில் எழுதிய கலைஞர், அந்தக் கடிதத்துக்கு வைத்த தலைப்பு, “கூண்டு கண்டேன், குதூகலம் கொண்டேன்” என்பதுதான். அந்த வகையில் எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற இரண்டு அதிமுக முதலமைச்சர்களாலும் கைது நடவடிக்கைக்கு உள்ளானவர் முரசொலி செல்வம்.
சிலந்தி என்ற பெயரில் எதிர்க்கட்சிகளுக்குப் பலமான பதிலடி கொடுத்தவர் முரசொலி செல்வம். எந்த உடல்நலக் குறைபாடும் இல்லாமல் சுறுசுறுப்பாக இருந்தவர் திடீரென மரணம் எய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இவர் நேரடி அரசியலுக்கு வராதவர் என்றாலும் இவரை சந்தித்தால் எதையும் சாதித்துக்கொள்ள முடியும் என்று சொல்லப்படும் வகையில் அதிகாரப்புள்ளியாகவே திகழ்ந்திருக்கிறார்.
நிறைய பேருக்கு நிறையவே உதவிகள் செய்தவர் என்றாலும் இப்போது முதல்வராக ஸ்டாலின் இருப்பதன் அடிப்படையிலே அத்தனை பேரும் வந்து போகிறார்கள். மேல் மட்ட நபர்களுக்கு மட்டுமே நெருக்கமானவர் என்பதாலே கோடிகளுக்கு அதிபதியாகவும் இருக்கிறார். மீடியாக்கள் மீண்டும் மீண்டும் காட்டுவதாலே இத்தனை பேர் வந்து குவிகிறார்கள்.