களம் இறங்கிய ஜனாதிபதி
கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு சி.பி.ஐ. கையில் ஒப்படைத்த பிறகும் தினம் ஒரு போராட்டத்தை நடத்தி மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பதற்கு பா.ஜ.க. முயற்சி எடுப்பதாக சொல்லப்படும் நிலையில் இந்திய ஜனாதிபதி திரெளபதி முர்மு இந்த விவகாரம் குறித்துப் பேசியிருப்பது பெரும் அதிர்வுகளை உருவாக்கியுள்ளது.
சிபிஐ வசம் வழக்குகளை ஒப்படைத்தால் உடனடியாக குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்றெல்லாம் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் இப்போது என்ன செய்கிறார்கள். இத்தனை நாட்களாக சி.பி.ஐ. என்ன கிழித்தது என்று மம்தா ஆவேசம் காட்டியிருக்கிறார்.
இந்த நிலையில் ஜனாதிபதி திரெளபதி முர்மு, ‘’கொல்கத்தாவில் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதைக் கேள்விப்பட்டபோது திகைத்து, திகிலடைந்தேன். கொல்கத்தாவில் மாணவர்கள், மருத்துவர்கள் நீதி கேட்டு போராட்டம் நடத்தியபோது, குற்றவாளிகள் வேறு இடங்களில் சுதந்திரமாக திரிந்து கொண்டிருந்தனர். பாதிக்கப்பட்டவர்களில் மழலையர் பள்ளி சிறுமிகளும் அடங்குவர். மகள்கள், சகோதரிகள் இத்தகைய கொடுமைகளுக்கு ஆளாவதை எந்த நாகரீக சமூகமும் அனுமதிக்காது. தேசம் சீற்றம் அடையும். நானும் சீற்றம் அடைகிறேன்.
நமது அரசியலமைப்புச் சட்டம் பெண்கள் உட்பட அனைவருக்கும் சமத்துவத்தை வழங்கியது. ஆனாலும், பெண்கள் ஒவ்வொரு சிறு வெற்றிக்கும் நிறைய போராட வேண்டியுள்ளது. 2012ல் இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட போது அதிர்ச்சியும் ஆத்திரமும் ஏற்பட்டது. இதே கதியை இன்னொரு நிர்பயா சந்திக்க விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். அதற்கான திட்டங்களை உத்திகளை வகுத்தோம். இந்த முயற்சிகள் ஓரளவிற்கு மாற்றத்தை ஏற்படுத்தியது. ஆனாலும், எந்தவொரு பெண்ணும் அவர் வாழக்கூடிய, வேலை செய்யக்கூடிய இடத்தில் பாதுகாப்பான நிலையை உணரும் வரையிலும் நமது பணி முடிவு பெறாது…’’ என்று ஆவேச அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கொல்கத்தா மருத்துவர் கொலை விவகாரத்தில் மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், மாநிலத்தில் தொடர்ந்து 7 நாட்கள் கடையடைப்புப் போராட்டம் நடத்துவதற்கு பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. ஆகவே, இவை எல்லாமே மம்தா ஆட்சியைக் கலைப்பதற்கான திட்டம் என்றே சொல்லப்படுகிறது.
ஆட்சியைக் கலைப்பது இப்போது கடினம் என்றாலும் உச்சநீதிமன்றத்தின் கண்டிப்பு மற்றும் மாநில சட்ட ஒழுங்கைக் காரணம் காட்ட முடியும் என்று சொல்கிறார்கள். மேலும், கவர்னர் ஆட்சியைக் கொண்டுவந்து தேர்தலை சந்தித்தால் பா.ஜ.க.வுக்கு ஆதாயம் கிடைக்கும் என்று கணக்குப் போடுகிறார்கள்.
அதனாலே, இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் இத்தனை நாட்களாக கொல்கத்தா மருத்துவர் விவகாரத்தில் ஏன் பேசவில்லை? ஏன் இத்தனை நாட்கள் கழித்து பேசுகிறார்? அவர் ஏன் மணிப்பூர், ஹத்ராஸ் போன்ற விவகாரங்களில் மௌனம் காத்தார்? மமதா அரசை முடித்து ஜனாதிபதி ஆட்சி கொண்டுவரத்தான் இப்பொழுது அறிக்கை விட தூண்டப்பட்டிருக்கிறாரா? என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன.