• Home
  • ஞானகுரு
  • கடவுளை விட கர்மா பெரிதா..? கர்மாவை விட கடவுள் பெரிதா..?

கடவுளை விட கர்மா பெரிதா..? கர்மாவை விட கடவுள் பெரிதா..?

Image

ஞானகுரு பதில்கள்

கேள்வி : கர்மா பெரிதா… கடவுள் பெரிதா..?

  • சி.மாணிக்கவாசகம், சேயூர்.

ஞானகுரு ;

எந்த ஒரு செயலுக்கும் எதிர்வினை உண்டு என்பது அறிவியல். அதேபோல் ஒருவரது எண்ணம், வார்த்தை, செயல் போன்றவையும் மனிதருக்கே திரும்பிவரும் என்று பல்வேறு மதங்கள் சொல்கின்றன. இந்த ஜென்மத்தில் அல்லது அடுத்த ஜென்மத்தில் கூட பலன் கிடைக்கும் என்கிறார்கள். இதையே விதி அல்லது கர்மா என்கிறார்கள்.

பரிகாரம், பிரார்த்தனை செய்தால் பாவங்கள் தொலைந்துவிடும் என்று சொல்பவர்களே, விதியை மாற்றவே முடியாது என்றும் அடித்துச்சொல்வார்கள். கர்மாவை மாற்றவே முடியாது என்றால் கடவுள் எதற்கு..? கடவுளால் மாற்ற முடியும் என்றால் கர்மா எதற்கு..? கடவுளும் கர்மாவும் மனிதருக்குத் தேவையில்லாத ஆணிகள்.

கேள்வி : குறுகிய காலத்தில் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன். அதற்கு எங்கு செல்ல வேண்டும், என்ன கற்க வேண்டும்..?

  • பி.ராமநாதன், கிணத்துக்கடவு

ஞானகுரு :

வாழ்க்கையைப் புரிந்துகொள்ளும் தேடுதல் வந்துவிட்டாலே விடை கிடைக்கத் தொடங்கிவிடும். கெளதம புத்தர் காடிய வழியை நீங்களும் கடைபிடியுங்கள்.

புத்தர் தனது சீடர்களுக்கு தீட்சை கொடுப்பதற்கு முன்பு, மயானத்தில் மூன்று மாதங்கள் தங்கியிருந்து உடல்கள் எரிவதையும் உறவினர்கள் நடத்தையையும் அறிந்துகொள்வதை ஒரு கட்டாயப் பாடமாக வைத்திருந்தார். மயானம் சீடர்களிடம் மிகப்பெரும் மாற்றத்தை உருவாக்கியது. உடல் பற்றி பெருமைப்படுவதும், கவலைப்படுவதும் எத்தனை அறியாமை என்பது தெரிந்துவிடும். மரணத்தைப் புரிந்துகொண்டால் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் கொண்டாட முடியும். நீங்களும் மரணத்தை வேடிக்கை பாருங்கள், வாழ்க்கை புரிந்துவிடும்.  

Leave a Comment