ஞானகுரு பதில்
கேள்வி ; ஜல்லிக்கட்டு என்பது தமிழ் மண்ணுக்குப் பெருமைதானே..?
- சி.மல்லிகா, மதுரை.
ஞானகுரு ;
அரசு முன்னின்று நடத்துகிறது என்பதால் எல்லாமே சரியாகி விடாது. டாஸ்மாக் கடைகள் மூலம் ஒரு சமுதாயத்தை குடியில் தள்ளியிருக்கும் அரசு, இப்போது ஜல்லிக்கட்டு மூலம் ஒரு புதுவித போதையை மக்களிடம் உருவாக்குகிறது.
முன்பு ஜல்லிக்கட்டு என்று ஒரு வீர விளையாட்டு தமிழகத்தில் இருந்தது என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படலாம். இன்றும் நடப்பதில் பெருமைப்பட எதுவுமில்லை. இன்னும் சொல்லப்போனால் இன்றைய நாகரிக யுகத்திலும் மாடு குத்தி செத்துப்போகும் அவலம் இருப்பதற்கு அவமானப்பட வேண்டும்.
முன்பு மாடு பிடித்தவருக்கு சொந்த மகளை கட்டிக் கொடுத்தார்கள். இதன் அர்த்தம் மாட்டை விட பெண் கேவலமான நிலையில் இருந்தாள் என்பது தான். இன்று அந்த நிலை இல்லை என்றாலும், ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்பதை குடும்ப கெளரவமாகவே பார்க்கிறார்கள். சாதி பார்த்தே மாடு விடுகிறார்கள், சாதி பார்த்தே மாடு பிடிக்கிறார்கள். எந்த பெண்ணும் மாடு பிடிக்கக்கூடாது என்று ஒதுக்கி வைக்கிறார்கள்.
மாட்டுக்கு நன்றி சொல்வது அல்லது மாடு இனத்தைக் காப்பாற்றுவதற்கு ஜல்லிக்கட்டு என்பது சரியான வழியல்ல. ஜெயித்தாலும் தோற்றாலும் மாட்டுக் கிடைப்பது புல்லுக்கட்டு மட்டும்தான். பரிசு, பாராட்டு, கெளரவம் என்பதெல்லாம் மனிதருக்கே தேவைப்படுகிறது.
அடிமைகளை சண்டை போட வைத்து ரசித்த கூட்டம் இப்போது மாடுகளை மனிதருடன் மோதவிட்டு ரசிக்கிறது. ஒரு நாள் ராஜாவாக ஆசைப்பட்டு இளைஞர்களும் துள்ளிக் குதிக்கிறார்கள். அடிபட்டு ஊனமுற்றவர்கள், மாடு முட்டி செத்துப் போனவர்களை யாரும் கண்டுகொள்ளப் போவதில்லை. எனவே, ஜல்லிக்கட்டு என்பது வரலாற்று அடையாளமாக இருந்தாலே போதும். இப்போது கொண்டாடுவதற்கு அவசியம் இல்லை. மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
