கவுன்சிலிங் ரூம்
ஜோசப்பை அழைத்துக்கொண்டு வந்தார் அவனது தந்தை. 25 வயதுக்கே உரிய தெனாவெட்டு, அசட்டை, திமிர் எல்லாமே ஜோசப் கண்களில் அப்பட்டமாகத் தெரிந்தது.
‘’இந்த வாரம்தான் ஜெயில்ல இருந்து ஜாமீன்ல வந்திருக்கான். இன்னமும் அந்த பொண்ணு மேல கோபமும் ஆத்திரமும் அடங்காம இருக்கான். யார் சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறான்’’ என்று மகன் மீது புகார் பத்திரம் வாசித்தார் தந்தை. வேறு யாரோ ஒருவரை பற்றி தந்தை பேசுவது போன்று கண்டுகொள்ளாமல் நின்றான் ஜோசப்.

என்ன நடந்தது?
இரண்டு வருடம் முன்பு இன்ஜினியரிங் முடித்த ஜோசப், ஒரு பெரிய நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தான். அவன் முன்பு குடியிருந்த தெருவில் நித்யாவின் வீடு இருக்கிறது. அவளது அமைதியான குணமும் இயல்பான பேச்சும் ஜோசப்பிற்கு ரொம்பவும் பிடித்துவிட்டது. அடிக்கடி நித்யாவுடன் பேசியிருக்கிறான், அவளும் பேசியிருக்கிறாள்.
ஒரு கட்டத்தில் ஜோசப்பே தைரியமாக முன்வந்து, ‘மனதார காதலிக்கிறேன்… திருமணம் முடிக்கத் தயாராக இருக்கிறேன்’ என்று கூறியிருக்கிறான். ஆனால், அவனது காதலை ஏற்க நித்யா முன்வரவில்லை.
மீண்டும் மீண்டும் நித்யாவிடம் தன்னுடைய காதலை சொல்லிக்கொண்டே இருந்திருக்கிறான் ஜோசப். அதற்கு நித்யாவும் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்திருக்கிறாள். இதனால் கடுப்பான ஜோசப், நேரடியாக அவளுடைய வீட்டுக்கே போய் தன்னுடைய காதலை பெரியவர்கள் முன்பு சொல்லி நியாயம் கேட்க நினைத்திருக்கிறான்.
நித்யா மறுப்பு தெரிவித்தால் அவள் கண் முன்னே தன் கழுத்தை அறுத்து தற்கொலை மிரட்டல் விடுக்கலாம் என்ற திட்டத்துடன் காய் நறுக்கும் கத்தியை எடுத்து பாக்கெட்டில் வைத்து கொண்டு போயிருக்கிறான்.
இவன் போன நேரத்தில் முன்னறையில் நித்யா டி.வி. பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறாள். இவனைத் திடீரென பார்த்ததும் பயந்து அலற, அவளது அப்பா, அம்மா, பாட்டி என எல்லோரும் ஒன்று கூடியிருக்கிறார்கள்.
உடனே மிரண்ட ஜோசப் கத்தியை எடுக்க, நித்யா மேலும் பலமாக கத்தியிருக்கிறாள். ஜோசப்பைப் பிடிக்க அவளது அப்பா நெருங்கிய சமயத்தில், ‘அவனை பிடிச்சு வெளியே தள்ளுங்கப்பா’ என்று நித்யா கத்தியதும் ஜோசப்பிற்கு ஆவேசம் வந்திருக்கிறது. அவளை மிரட்டுவதற்காக கத்தியுடன் பாய, அவள் விலகி ஓட, எப்படியோ அந்த கத்தி நித்யாவின் வயிற்றில் பாய்ந்துவிட்டது.
காய் நறுக்கும் மொட்டைக் கத்தி என்பதால் வயிற்றுக்குள் இறங்காமல் மேலோட்டமாக வயிற்றைக் கீறியிருக்கிறது. கொப்பளித்த ரத்தத்தைப் பார்த்து எல்லோரும் அலற, அக்கம்பக்கத்தினர் அவனை அமுக்கிப்பிடித்து போலீஸில் ஒப்படைத்திருக்கிறார்கள். இரண்டு வருடங்கள் சிறை தண்டனை முடித்து வெளியே வந்திருக்கிறான். இந்த விஷயத்தை நீங்களும் பேப்பரில் பார்த்திருப்பீர்கள் என்று அவனது தந்தை சொல்லி முடித்தார்.
’’இன்னமும் கோபத்தோடு இருக்கான், திரும்பவும் இவன் தப்பு பண்ணிட்டு ஜெயிலுக்குப் போயிடக்கூடாதுன்னு நினைக்கிறோம்’’ என்றார் அவனது தந்தை.
அவரை வெளியே அனுப்பிவிட்டு ஜோசப்பை மட்டும் இருக்கச் சொன்னேன். ஆனால் ஜோசப்பும் எழ முற்பட்டான்.
பளாரென ஜோசப் கன்னத்தில் அடித்தார் அவனது தந்தை. ‘’உனக்காகத்தான் இங்கே வந்திருக்கோம், நீ எந்திரிச்சா என்ன அர்த்தம்..?” என்று ஆவேசமானார்.
’’பெத்தவங்ககிட்ட இருந்துதாங்க புள்ளைக்கு அவசரப்புத்தி, ஆத்திரம் வருது… நீங்கள் பொறுமையாக இருங்கள். நான் பேசிக்கொள்கிறேன்’’ என்று அவரை வெளியே அனுப்பினேன்.
‘’எனக்கு எதுவும் பேச வேண்டாம்…’’ என்றான் ஜோசப்.
‘’ஓகே. நீங்கள் எதுவும் பேச வேண்டாம். அமைதியாக அரை மணி நேரம் இருந்துவிட்டுக் கிளம்புங்கள். உங்கள் தந்தையாவது சந்தோஷப்படுவார்’’ என்றபடி என்னுடைய வேலையை பார்க்க ஆரம்பித்தேன்.
கொஞ்ச நேரத்தில் வெறுமையைத் தாங்கமுடியாமல் ஜோசப் பேசத் தொடங்கினான்.
‘’என்னுடைய வாழ்க்கை முடிந்துவிட்டது. எல்லோருமே என்னை வில்லன் போலத் தான் பார்க்கப் போகிறார்கள். அதனால் வில்லனாகவே மாறிவிடலாம் என்று நினைக்கிறேன்….’’
’’அப்படின்னா..?’’
’’நித்யாவை கொலை செஞ்சிட்டு ஜெயிலுக்குப் போகப் போறேன்..’’ என்று ஆத்திரம் தீராமல் பேசினான்.
’’ரொம்பவும் நல்ல முடிவு… அப்படியே செய்யுங்கள். அதோடு உங்கள் தாய், தந்தைக்கும் சாப்பாட்டில் விஷம் வைத்துவிடுங்கள். உங்களைப் பற்றிய அவர்களுக்குத் தேவை இருக்காது….’’
‘’முட்டாள்தனமா பேசாதீங்க… அவங்க என்ன தப்பு செஞ்சாங்க..?’’
‘’அப்படின்னா நித்யா என்ன தப்பு செஞ்சாங்க…’’
‘’என் கூட நல்லா பேசிக்கிட்டு இருந்தா… ஆனா, காதலிக்கிறேன்னு சொன்னதும் ஓடுறா… என்னை ஏமாத்திட்டா…’’
‘’நீ தான் அவளை ஏமாற்றியிருக்கிறாய்…’’
‘’எப்படி சொல்கிறீர்கள்..?’’
‘’ரக்கட் பாய்ஸ் என்பார்கள். அதாவது தங்களுக்கு விருப்பமானதை அடைவதற்கு எதையும் செய்வார்கள். நீங்கள் அப்படிப்பட்ட சுயநலத்துடன் இருந்திருக்கிறீர்கள். நித்யா உன்னை நல்ல நண்பனாக மட்டும் நினைத்திருக்கலாம். ..’’
‘’இல்லை சார், அவ கண்ணுல காதலைப் பார்த்தேன்…’’
‘’ஆண்கள் சட்டென காதலை சொல்லிவிடுவார்கள். ஆனால், பெண்கள் கூடுதல் காலம் எடுத்துக்கொள்வார்கள். ஒரு வேளை அந்த காலகட்டத்தில் நித்யா இருந்திருக்கலாம். அதை புரிந்துகொள்ளாமல் நீங்கள் அவசரப்பட்டிருக்கலாம்.. உங்களுக்கு காதல் என்றால் என்னவென்று தெரியுமா?’’
‘’மனசுக்குப் பிடிச்சவங்களோட வாழ்ந்து, அவங்களை நல்லா கவனிச்சிக்கிறது…’’
‘’அப்புறம்..?’’
‘’கல்யாணம் பண்ணிக்கிடணும், ஏமாத்தக்கூடாது, எப்பவும் சந்தோஷமா வைச்சுக்கணும்…’’
‘’உங்களுக்கு காதலின் அடிப்படையே புரியவில்லை. உங்களுடைய விருப்பம் பற்றி மட்டுமே பேசுகிறீர்கள். எதிராளிக்கும் மனம் என்று ஒன்று இருக்கும் என்பது உங்களுக்குப் புரியவில்லை. அதைவிட காதல் என்பதன் இன்னொரு அர்த்தம் சுதந்திரம். யாரிடம் தங்கள் மனதில் இருப்பதை சுதந்திரமாகப் பேச முடியுமோ, யாருடன் சுதந்திரமாக வாழவும் முடியுமோ அவர்களையே பெண்கள் காதலிப்பார்கள்…’’
‘’நான் நன்றாகவே அவளை கவனித்துக்கொள்வேன். அவளை பாதுகாப்பேன்…’’
‘’உண்மை தான். ஆனால், தங்கத்தில் கட்டினாலும் கூடு என்பது சிறையே. நீங்கள் அவளை ஆடம்பரப் பொருளாக, உங்களுக்குப் பிடித்த விஷயமாகப் பார்க்கிறீர்களே தவிர, நித்யாவுக்கு சுதந்திரம் கொடுப்பதற்குத் தயாராக இல்லை. அடம் பிடித்து பொம்மை வாங்கும் குழந்தை போன்று இருக்கிறீர்கள்…’’
’’அப்படியென்றால், நான் நித்யாவை உண்மையாக காதலிக்கவில்லை என்கிறீர்களா?’’
‘’ஆம். நீங்கள் உண்மையில் நித்யாவை காதல் செய்கிறீர்கள் என்றால் இப்போதும் நித்யாவை காதல் செய்ய வேண்டுமே தவிர, எதிரியாகப் பார்க்க முடியாது. ஆனால், நீங்கள் ஒரு வியாபாரி போன்று தான் காதலை பார்க்கிறீர்கள். நீங்கள் காதலித்தால் பதிலுக்கு அவரும் காதலிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். நித்யா காதலிக்கவில்லை என்றால் என்ன… நீங்கள் அவரை காதலித்துக்கொண்டே இருக்க வேண்டும். அது தான் உண்மையான காதல்…’’
‘’முட்டாள்தனமாக இருக்கிறது…’’
’’காதல் என்பது முட்டாள்தனம் மட்டுமே. அதனால் தான் காதலிக்காக உயிர் கொடுக்கிறார்கள். நீங்கள் தான் உயிரை எடுக்க நினைக்கிறீர்கள்…’’
‘’அது அவசரத்தில் நடந்த விஷயம். உண்மையில் அவளை காயப்படுத்த நினைக்கவில்லை, அப்படி நடந்துவிட்டது. ஆனால், அதன் பிறகு அவள் நடவடிக்கையை என்னால் ஒரு போதும் மன்னிக்க முடியாது…’’
’’அப்படி மன்னிப்பது தான் காதல்… எதிரியையும் மன்னிக்க வேண்டும் என்று தானே உங்கள் மதமும் சொல்கிறது..’’
‘’மதம் என்னமும் சொல்லும், அப்படியெல்லாம் யாரும் நடக்க முடியாது..’’
‘’அப்படியென்றால் நீங்கள் இயேசு மீது நம்பிக்கை வைக்கவில்லையா..? அவரை கைது செய்து ஊர் மக்கள் முன்னே அவமானப்படுத்தி, அடித்து, சித்ரவதை செய்து, ரத்தம் சிந்தசிந்த ஆணியடித்து சிலுவையில் ஏற்றினார்கள். அப்போதும், ‘அவர்கள் அறியாமல் செய்கிறார்கள், மன்னியுங்கள்’ என்று தானே இயேசு சொன்னார்..’’
ஒரு கணம் திகைப்படைந்து ‘‘அவர் ஆண்டவர், நான் சாதாரண மனுசன்தான…’’ என்றார்.
’’அவர் எதிரிகளையே மன்னிச்சார். உங்களால் உங்களுக்குப் பிடித்த காதலியை மன்னிக்க முடியாதா..?’’
ஜோசப் அமைதியாக இருந்தார்.
’’போதும் ஜோசப், புது மனுசனா மாறுங்க. நித்யாவை மட்டுமில்ல, இந்த உலகத்துல இருக்கிற எல்லா மனிதர்களையும் காதலிக்கத் தொடங்குங்கள். மனதில் இருக்கும் ஆசையை, கோபத்தை வெளியே அனுப்புங்கள். உங்களுக்காகக் காத்திருக்கும் உன் பெற்றோருக்கு நல்ல மகனாக முதலில் நடந்துகொள்ளுங்கள்…’’
‘’நித்யாவை நான் திருமணம் செய்துகொள்ள வழியே இல்லையா?’’
’’எதிர்காலம் எப்படிப்பட்ட ஆச்சர்யங்களை ஒளித்து வைத்திருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. நம்பிக்கையுடன் எதிர்காலத்தை சந்திக்கத் தொடங்குங்கள். உங்களுக்கு என்ன கொடுக்கவேண்டும் என்பது இந்த பிரபஞ்சத்துக்குத் தெரியும். உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறதோ, அதற்குரிய பரிசு கிடைக்கும்.. நித்யாவை விட வேறு ஒரு பெண்ணை நீங்கள் காதலிக்கலாம், திருமணம் செய்யலாம்…’’ என்றதும் வேகமாகப் பேசினார்.
‘’காதல் ஒரு முறை தானே வரும்…’’
‘’காதல் காலம் முழுக்க வந்துகொண்டே இருக்கும். காதலுக்கும் கடல் அலைக்கும் முடிவுகள் இல்லை’’ என்றேன்.
‘’கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது, நாளை வருகிறேன்’’ என்று திரும்பிச் சென்ற ஜோசப் அடுத்த நாள் வந்தார். மேலும், சில சந்தேகங்களைக் கேட்டார். நிறைய விவாதம் செய்தார்.
கடைசியாக கிளம்பும்போது, ‘’நித்யா மீது காதலிக்க எனக்கு இப்போதும் உரிமை இருக்கிறது. ஆனால், அவரது விருப்பமின்றி அவர் நிழலைத் தொடுவதற்கும் உரிமை இல்லை என்பது புரிந்துவிட்டது. சந்தோஷம்’’ என்று கிளம்பினார்.
ஜோசப் மாறிவிட்டார். இனி திரும்பவும் வர மாடார்.