ஞானகுரு பதில்கள்
கேள்வி : திடீரென பூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்னாகும்..?
- பி.ஜான்சன், மன்னார்குடி.
ஞானகுரு :
பூமி சுற்றுவதற்கு மனிதன் காரணம் இல்லை என்பது போலவே, பூமி நின்று போவதற்கும் மனிதன் காரணமாக இருக்க முடியாது. எனவே இப்படிப்பட்ட கற்பனைகள் தேவையில்லை. அதேநேரம், திடீரென பூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்னாகும் என்பதற்கு அறிவியல் கூறும் விடை சுவாரஸ்யமானது. பூமி சுழல்வது நின்றுவிட்டால் பூமியில் இருக்கும் அத்தனை பொருட்களும் அதாவது கட்டடங்கள், வாகனங்கள் என எல்லாமே பறக்கத் தொடங்கும். கடல் தண்ணீர் துருவங்களை நோக்கிப் பாயும். சூரியக் கதிர்வீச்சு நேரடியாகப் பாதிக்கும் என்பதால் எல்லா உயிர்களும் இறந்து போகும். அத்தனை தொழில்நுட்ப சாதனங்களும் செயல் இழந்து போகும். பகல், இரவு என்று வருவது நின்றுவிடும். எப்போதும் பகலாக அல்லது எப்போதும் இருளாக இருக்கும். ஆனால், இவற்றை எல்லாம் பார்க்கத்தான் நாம் இருக்க மாட்டோம்.
கேள்வி : ஒரு சில கோயில்களுக்குச் சென்றால் மட்டும் மனம் நிம்மதியாகிறதே, அந்த கோயில் சக்தி நிரம்பியது என்பதாலா..?
- ஏ.அமராவதி, திருத்துறைப்பூண்டி
ஞானகுரு :
குறிப்பிட்ட கோயிலுக்குச் சென்றால் மனம் நிம்மதியாகிவிடும் என்ற எண்ணமே நிம்மதி தருகிறதே தவிர, அந்த கோயில் அல்ல. அதனால் தான் ஒவ்வொரு நபருக்கும் ஒரு கோயில் விருப்பமானதாக இருக்கிறது. எல்லா மனிதருக்கும் நிம்மதி தரும் கோயில் என்ற ஒன்று இந்த உலகில் இருந்தால், அந்த கோயிலைத் தவிர வேறு மருத்துவமனைகளே தேவையில்லாமல் போய்விடும். அதேபோல் கோயிலுக்கு சக்தி இருக்கிறது என்பதை மக்களும் அரச்சகர்களும் நம்புவதில்லை. அதனால்தான், குறிப்பிட்ட காலத்தில் கும்பாபிஷேகம் செய்யவில்லை என்றால் அந்தக் கோயிலுக்குச் சக்தி குறைந்துவிடும் என்று சொல்கிறார்கள்.