சிலர் புறக்கணிப்பது வருத்தம் தருகிறதா?

Image
  • இயற்கையிடம் பாடம் படியுங்கள்

தினமும் வாட்ஸ் ஆப்பில் குட்மார்னிங் பதிவு போடும் நபர், ஒரு நாள் போடவில்லை என்றாலும், அவர் புறக்கணிக்கிறாரோ என்று மனிதர்கள் பதட்டப்படுகிறார்கள்.

உறவினர் நேரில் வந்து பத்திரிகை வைக்காமல் போனில் அழைக்கிறார், பணம் வாங்கிய நண்பர் நன்றி சொல்லவில்லை, கடைக்காரர் காலண்டர் தரவில்லை. பக்கத்து வீட்டுப் பெண்ணை கோயிலுக்கு கூட்டிச்செல்லும் தோழி என்னை அழைக்கவில்லை என்றெல்லாம் சாதாரண நிகழ்வுகளையும் புறக்கணிப்பாகக் கருதி வேதனைப்படுகிறார்கள்.

ஒரு விஷயத்தை மறந்துவிடுகிறார்கள். இதேபோன்று நாமும் நிறைய பேரை தினமும் புறக்கணிக்கிறோம்.   

படிக்கும் நேரத்தில் பிள்ளை பேசும்போது, ‘இப்ப படிக்கிற வேலையை மட்டும் பார்’ என்று கண்டிப்பது புறக்கணிப்பு. சாப்பிட்டீங்களா என்று கேட்பதற்கு போன் செய்யும் மனைவியிடம், ‘இப்போ இது முக்கியமா?’ என்று கட் செய்வது புறக்கணிப்பு. வாசலில் பூத்திருக்கும் புதிய ரோஜாவை கண்டுகொள்ளாமல் செல்வது புறக்கணிப்பு. கோயில் வாசலில் பிச்சைக்காரர்களை காணாதவர் போன்று நகர்வது புறக்கணிப்பு. ரொம்பவும் உரிமையாகப் பேசும் நபர் தூரத்தில் வருவதைப் பார்த்ததும், பக்கத்து சந்தில் நுழைவது புறக்கணிப்பு.

தான் விஷ் செய்வதை உயர் அதிகாரி பார்த்தும் பார்க்காதது போல் போனதற்கு வேதனைப்படும் ஒருவர், அவரை பார்த்து சல்யூட் அடிக்கும் வாட்ச்மேனுக்கு  தலையைக்கூட அசைப்பதில்லை. நம்முடைய புறக்கணிப்புக்கு ஏதேனும் காரணம் வைத்திருப்போம். அதே போன்று பிறர் நம்மை புறக்கணிப்பதற்கும் தெரிந்தும், தெரியாமலும் காரணங்கள் இருக்கலாம், இல்லாமலும் போகலாம்.

புறக்கணிப்பு ஏன் வலி, வேதனை தருகிறது என்றால், ஒருவரை உயர்வாக நினைப்பதாலே அவர் புறக்கணிப்பைக் கண்டு வருந்துகிறோம். சாதாரணமாக நினைப்பவர்கள் புறக்கணிப்பை நாம் பொருட்படுத்துவதே இல்லை.

எனவே, யாரையும் நம்மைவிட உயர்வாக எண்ண வேண்டாம், தாழ்வாகவும் கருத வேண்டாம். யார் பாராட்டுவதாலும், புறக்கணிப்பதாலும் நமக்கு எதுவும் ஆகப்போவதில்லை என்ற உண்மையைப் புரிந்துகொள்ளுங்கள்.

இந்த பிரபஞ்சத்தில் இயற்கையே உயர்வானது. சூரியன், சந்திரன், காற்று, மழை போன்றவை எந்த ஒரு மனிதரையும் புறக்கணிப்பதில்லை. ஆகவே மனிதர்கள் புறக்கணிப்பை கண்டுகொள்ளாமல் கடந்து செல்ல கற்றுக்கொள்ளுங்கள்.

அதுவே, மகிழ்ச்சி.

  • எஸ்.கே.முருகன்

Leave a Comment