பணமே மந்திரம்
பணம் சம்பாதிப்பது ஒரு போதை. குறுகிய காலத்தில் அதிக லாபம் பார்க்கும் பேராசை நிறைய மனிதர்களுக்கு உண்டு. இதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் சொல்லலாம். ஓரளவு வசதியான நண்பர் ஒருவர், 2 லட்சம் ரூபாய் பணம் அவசரமாக மருத்துவச் செலவுக்குத் தேவை. எத்தனை வட்டி என்றாலும் பரவாயில்லை. ஆறு மாதங்களில் திருப்பிவிடுவேன் என்று கேட்டால் என்ன செய்வார்கள் தெரியுமா..?
கையில் பணம் இல்லை என்றாலும் புத்திசாலித்தனமாக பணம் சம்பாதிக்க நிறைய பேர் திட்டம் போடுவார்கள். மனைவியின் நகையை வாங்கி வங்கியில் அடகு வைத்து, அந்தப் பணத்தை நண்பருக்கு 2 அல்லது 3 வட்டிக்குக் கொடுப்பார்கள். நகை இல்லையென்றால் அவர்களுக்குத் தெரிந்த நபரிடம் 1 வட்டிக்குக் கடன் வாங்கி நண்பருக்கு 2 வட்டிக்குக் கொடுப்பார்கள்.
நண்பர் கூறியபடி நடந்துகொண்டால் அது லாபமான டீலாக இருக்கும். ஆனால், பெரும்பாலும் அப்படி நடப்பதில்லை. வட்டியும் அசலும் வாங்குவதற்கு ரொம்பவே சிரமப்பட வேண்டியிருக்கும். ஏனென்றால் கந்துவட்டிக்காரர் போன்று கறாராகப் பேசி, மிரட்டி பணத்தை வசூல் செய்ய முடியாது. எனவே, பெரும் நஷ்டத்தை சம்பாதிப்பார்கள்.
சென்செக்ஸ் குறைந்திருக்கிறது இப்போது பணம் முதலீடு செய்தால் பெரிய லாபம் வரும் என்று சிலர் ஆருடம் சொல்வார்கள். நல்ல லாபம் தரக்கூடிய தொழிலுக்கு பார்ட்னர் தேவை என்பார்கள், சீப்பாக இரண்டு பிளாட் கிடைக்கிறது, வாங்கிப் போட்டால் இரண்டே வருடத்தில் டபுள் லாபம் வரும் என்றெல்லாம் ஆசை காட்டுவார்கள்.
இதுபோன்ற ஆசை வார்த்தைகளில் மயங்குபவர்கள் நிச்சயம் நஷ்டத்தையே சந்திப்பார்கள். எனவே அனுபவம் இல்லாத முதலீடு பெரும்பாலும் தோல்வியே தரும். இந்த ஆலோசனை பிசினஸ் லோன்களுக்கு மட்டும் பொருந்தாது என்று சொல்லலாம். மற்றபடி பெரிய லாபத்துக்கு ஆசைப்பட்டால் பெரிய நஷ்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை புரிந்துகொள்ளுங்கள். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
