ஞானகுரு தரிசனம்
வெளுத்துப்போன முகத்துடன் வந்து நின்றார் மகேந்திரன். ஞானகுருவை பார்த்ததும் கண்களில் இருந்து மளமளவென கண்ணீர் சிந்தியது. ’’சுவாமி.. என்னோட பையன் ஐ.டி. நிறுவனத்தில் நல்ல வேலையில் சேர்ந்துவிட்டான் என்று சந்தோஷப்பட்டேன்… கடந்த வாரம் திடீரென மது குடித்துவிட்டு போதையில் வந்து நிற்கிறான். நான் கண்டிப்பு காட்டியதும், ‘இன்னமும் பழைய காலத்தில் இருக்காதீர்கள். குடிக்கிறதெல்லாம் ஒரு தப்பே இல்லை’ என்று எனக்கு அட்வைஸ் செய்துவிட்டுப் போகிறான். நான் சரியாக வளர்க்கவில்லையா அல்லது இந்த உலகத்தை நான் புரிந்துகொள்ளவில்லையா என்று புரியவில்லை…’’ என்று நிறுத்தினார்.
மகேந்திரன் தோளில் கை போட்டு பேசத் தொடங்கினார் ஞானகுரு.
ஜாதி, மதம், மொழி பாகுபாடு பார்க்காமல் ஒரு புதிய மதமாக போதை உருவாகியிருக்கிறது. டாஸ்மாக் கடையில் இருந்து ஒரு மது பாட்டிலை வாங்கி குடித்தாலே போதை மதத்தில் சங்கமித்துவிடலாம். அந்த மதத்தில் எல்லா துன்பமும் காணாமல் போய்விடும் என்று நம்புகிறார்கள்.
அந்த நம்பிக்கையை ஊக்கப்படுத்துவது போல், தெருவுக்குத் தெரு சாராயக்கடைகள் திறந்துவைக்கிறது அரசு. எனவே பள்ளி மாணவன் தொடங்கி முதியவர் வரையிலும் பெருமையோடு குடிக்கிறார்கள். சட்டம், ஒழுங்கைப் பாதுகாத்து, மக்களை நல்வழிக்குத் திருப்பி, ஆரோக்ய வாழ்க்கை அமைத்துத்தர வேண்டிய அரசுதான், சாராயக் கடைகளை நடத்துகிறது என்பது பெரும் வினோதம். பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பதற்கு ஆதாரம் தேடி இனி எந்த இடம் தேடியும் அலையவேண்டியதில்லை…’’
‘’அரசே மதுக்கடை நடத்துகிறது என்றால், அது அத்தனை கொடூரம் இல்லை என்று எடுத்துக்கொள்ளலாமா..?’’
’’மது எத்தனை கொடியது என்பதற்காக சொல்லப்படும் இந்தக் கதையை ஏற்கெனவே நீங்கள் கேட்டிருக்கலாம். ஓர் ஊரில் விசித்திரமான போட்டி அறிவிக்கப்பட்டது. ஏதேனும் ஒரே ஒரு பாவச்செயல் செய்தால் சன்மானம் என்று அறிவிக்கப்பட்டது. பணத்துக்கு ஆசைப்பட்ட வெளியூர் விறகுவெட்டி ஒருவன் போட்டியில் கலந்துகொள்ள முன்வந்தான்.
பந்தய மேடையில் ஒரு பெண் குற்றவாளியும் ஆண் குற்றவாளியும் நிறுத்தப்பட்டு இருந்தார்கள். அதோடு ஒரு குப்பி மது வைக்கப்பட்டிருந்தது. அந்த விறகுவெட்டிக்கு நிபந்தனை அறிவிக்கப்பட்டது. மதுவை குடிக்கலாம் அல்லது மங்கையை பாலியல் வல்லுறவு செய்யலாம் அல்லது ஆண் குற்றவாளியை கொலை செய்யலாம். ஏதேனும் ஒரே ஒரே ஒரு குற்றம் மட்டும் செய்தால் தக்க சன்மானம் தங்கமாக கிடைக்கும் என்று சொல்லப்பட்டது.
மங்கையை சீரழிப்பதும், குற்றவாளியை கொலை செய்வதும் அதர்மம் என்று நினைத்தான் விறகுவெட்டி. மது குடிப்பதால் எந்த பாவமும் இல்லை என்று நினைத்து முழு பாட்டில் மதுவையும் குடித்தான். கொஞ்சநேரத்தில் அவனுடைய மூளை மழுங்கியது. அந்த மங்கையை பார்த்ததும் மோகம் கொண்டான். அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்யத்துணிந்தான். அவனை அந்த குற்றவாளி தடுத்தான். நீ தவறு செய்கிறாய், வேண்டாம் என்று சொன்னான். உடனே ஆவேசமடைந்த விறகுவெட்டி, அருகில் இருந்த கோடரியால் குற்றவாளியின் தலையை வெட்டிவிட்டு பெண்ணை மானபங்கப் படுத்தினான். போதையில் இருந்து மீண்ட பிறகுதான், ஒரே நேரத்தில் மூன்று குற்றங்களையும் புரிந்துவிட்டது தெரியவந்தது.
போட்டி நிபந்தனை படி ஒரே ஒரு குற்றம் மட்டும்தான் செய்யலாம், ஆனால் விறகுவெட்டி மூன்று குற்றம் செய்துவிட்டான். அதனால் அந்த மேடையில் விறகுவெட்டியை குற்றவாளியாக கட்டி வைத்தார்கள். யாரேனும் பாவம் செய்வதற்கு ஆர்வமாக இருக்கிறீர்களா என்று மீண்டும் ஒரு போட்டிக்கு அறிவிப்பு செய்தார்கள். குடி எல்லாவற்றையும்விட மோசமான குற்றம் என்பதை சொல்வதற்கே இந்த கதை.
மூளையை மட்டுமல்ல உடல் உறுப்புகளையும், குடும்ப பொருளாதாரத்தையும் மது சிதைத்துவிடுகிறது என்று தெரிந்தேதான் மனிதன் குடிக்கிறான்.. மது உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பது உண்மைதான், ஆனால் எனக்கு எதுவும் செய்யாது. ஏனென்றால் நான் அளவுடன் குடிக்கிறேன் என்றுதான் பலரும் சொல்கிறார்கள்.
அதேபோல், குடிக்கிறது தப்பா என்று கேட்கும் அளவுக்கு ஒரு புதிய தலைமுறை வந்துவிட்டது. ஆண், பெண், சிறுவர் என்ற பேதமின்றி அத்தனை பேருக்கும் மது அருந்துவதற்கு ஏதேனும் ஒரு சின்ன காரணமே போதுமாக இருக்கிறது. இப்போது மது குடிப்பது பெண்களுக்கும் புரட்சியாகவும், விடுதலையாகவும் தெரிகிறது.
உடல் அலுப்புக்கு மது குடித்தால் தவறு இல்லை என்று தங்களைத்தாங்களே சமாதானம் செய்துகொள்கிறார்கள். பரிட்சையில் ஃபெயில் என்றாலும் பாஸ் என்றாலும் குடிக்கலாம். காதலில் ஜெயித்தாலும் தோற்றாலும் குடிக்கலாம். சம்பள உயர்வு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் குடிக்கலாம். கல்யாணம், கருமாதி என்றாலும் குடிக்கலாம். பணக்காரன், ஏழை, உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி, கிராமம், நகரம் என எங்கேயும் எல்லோரும் எப்போதும் குடிக்கலாம் என்ற நிலை உருவாகியிருக்கிறது. அதேநேரம், இது மனித குலத்துக்குப் புதியது அல்ல. வேத காலங்களில் இருந்து மனிதன் குடித்துக்கொண்டுதான் இருக்கிறான். கடவுளுக்கும் மது பாட்டில் வைத்து கும்பிடத்தானே செய்கிறார்கள்.
கடவுள்களும், தேவர்களும் சோமபானம் குடிக்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம்..?
தன்னுடைய பலவீனங்களை எல்லாம் கடவுளுக்கும் புகுத்தியவன் மனிதன். அவன்தான் கடவுளும் தேவர்களும் குடிப்பதாக எழுதிவைத்தான். அவன்தான் கடவுளுக்கு இரண்டு பொண்டாட்டி, நூறு பொண்டாட்டி என்று எழுதி பலதார மணத்துக்கு ஆதரவு திரட்டினான். அவன்தான் பிறன்மனை கவர்வதும், வஸ்திரங்களை ஒளித்துவைப்பதும் கடவுள் லீலையாக காட்டியவன். ஆகவே, மனிதன் காட்டிய கடவுள் எல்லாம்… உண்மையான கடவுளே இல்லை.
? மனிதன் ஏன் குடிக்கிறான்?
மனிதன் இயல்பாகவே பலவீனமானவன். தன்னுடைய எண்ணத்துக்கும் சிந்தனைக்கும் மது பலம் கொடுப்பதாக நம்புகிறான். மது குடிக்கும்போது பலசாலியாக உணர்கிறான். மது எதையும் சாதிக்கும் சக்தி தருவதாக நினைக்கிறான். குழப்பமில்லாமல் முடிவு எடுக்கவும், படுக்கையறையில் மனைவியை சமாளிக்கவும் மது உதவும் என்று நம்புகிறான். ஆனால் உண்மை என்ன தெரியுமா?
மது குடிப்பவனுக்கு உடல் ஒத்துழைப்பு தருவதில்லை. நடை தள்ளாடும், கண் பார்வை மங்கிவிடும். சுவை தெரியாது. சிந்தனை மழுங்கிவிடும். மூளைக்கும் கைக்கும் ஒத்திசைவு இருக்காது. அதீத பாசம் அல்லது அதீத கோபம் உண்டாகும். வாந்தி, மயக்கம், மரணம் போன்ற பிரச்னைகளும் உண்டாகும். அதனால் குடியிடம் ஜாக்கிரதையாகவே இருக்கவேண்டும்.
? ஆனால் குடிக்கும்போது சந்தோஷமாக இருப்பதாக உணர்கிறார்களே..?
குடியால் கவலை, சோகம் மறந்து சந்தோஷமாக இருக்கிறேன் என்பார்கள். தூக்கம் வரவழைக்க குடிக்கிறேன் என்பார்கள். உடல் வலி, அலுப்பு தீர்வதற்காக குடிப்பார்கள். இதுபோல் ஏதேனும் காரணங்களால் பொய் சொல்கிறார்கள். ஒரு கட்டத்தில் குடித்தால் மட்டுமே சந்தோஷமாக இருக்கமுடியும் என்ற அடிமை நிலைக்கு மாறுகிறார்கள். குடிக்கத் தொடங்கிய காரணத்தை மறந்து, குடிப்பதற்காகவே வாழத் தொடங்குகிறார்கள். குழந்தையின் சிரிப்பில், குடும்பத்தினரின் அன்பில், நண்பர்களின் நெருக்கத்தில் கிடைக்காத சந்தோஷம் மதுவில் நிச்சயம் கிடைக்காது.
? குடியை நிறுத்துவது எப்படி?
முதலில் அரசு மனசு வைக்கவேண்டும். அரிதாக கிடைக்கவேண்டிய பொருள் அருகில் கிடைப்பதுதான் குடி பெருக முக்கிய காரணம். மது அருந்துவது ஒழுக்கக்கேடான செயல் என்ற எண்ணம் பிஞ்சு நெஞ்சில் இருந்தும் தோன்றவேண்டும். மது குடிப்பது தவறு இல்லை, மதுவுக்கு அடிமையாக இருப்பதுதான் தவறு என்ற எண்ணம் இப்போது நிறைய பேருக்கு உண்டு. அதேபோல் வீட்டு ஆண்கள் மது குடித்துவிட்டு யாரையும் வம்பிழுக்காமல் இருந்தால் போதும் என்ற மனநிலைக்கு பெண்கள் வந்துவிட்டார்கள். இதனால் குடிப்பழக்கம் பெருகுமே தவிர குறைவதற்கு வழியில்லை.
? அப்படியென்றால் மனிதகுலம் மதுவால் அழிந்துபோகுமா?
தன்னம்பிக்கை உள்ள மனிதனால் எத்தனை பெரிய அடிமைத்தனத்தில் இருந்தும் தன்னை விடுவித்துக்கொள்ள முடியும். பொதுநலன் கொண்ட தலைவனால் மதுவை மனிதனிடம் இருந்து தள்ளிவைக்க முடியும். நல்ல தலைவன் வரும் வரை பிள்ளைகளை மது அரக்கனிடம் இருந்து பாதுகாத்து வை.