ஞானகுரு பதில்கள்
கேள்வி : பள்ளிகளில் தேர்வு வைப்பது எதற்காக..?
எம்.கணேசன், பராசக்தி நகர்.
ஞானகுரு :
ஒவ்வோர் ஆண்டும் மாணவர்கள் புத்தம் புதிய தகவல்கள் அறிந்துகொள்ளவும், புரிந்துகொள்ளவும் வேண்டும் என்பதற்காகவே கல்வி கற்பிக்கப்படுகிறது. குறிப்பிட்ட காலத்தில் ஒரு மாணவர் எந்த அளவுக்கு அறிந்துள்ளார் என்பதை கணக்கிடுவதற்காக தேர்வுகள் நடத்தப்படுகின்றன. போதிய புரிதல் இல்லாதவர் மீது கூடுதல் கவனம் செலுத்துவதற்கு தேர்வுகள் பயன்பட வேண்டும். ஆனால் தற்போது பாடங்களை மனப்பாடம் செய்து எழுதுவது மட்டுமே தேர்வு முறையாக மாறியிருக்கிறது. இன்றைய போட்டிகள் நிறைந்த காலகட்டத்தில் இதனை தவிர்க்கவும் இயலாது ஆகவே, இந்த நடைமுறையிலும் வெற்றி பெறுவதற்கு மாணவர்கள் தேர்வையும் ஜெயிக்கத்தான் வேண்டும்.
கேள்வி : கபடி, கொக்கோ, நொண்டி, தட்டாங்கல் போன்ற விளையாட்டுகள் திட்டமிட்டு மறைக்கப்படுகிறதா அல்லது இன்றைய தலைமுறையினருக்கு ஆர்வம் இல்லையா..?
- எஸ்.காவேரி, என்.ஜி.ஓ. காலனி
ஞானகுரு :
அது ஒரு காலம். தூங்குவதற்கும் சாப்பிடுவதற்கும் மட்டுமே பிள்ளைகள் வீட்டிற்கு வருவார்கள். மற்ற நேரங்களில் எல்லாம் வீதிகளில், தோட்டங்களில், மைதானங்களில் விளையாடிக்கொண்டு இருப்பார்கள். ஆனால், இன்று எந்த குடும்பத்தினரும் தங்கள் பிள்ளையை வீட்டு வாசல் தாண்ட அனுமதிப்பதில்லை. அப்படி பெற்றோர் அனுமதிக்காத நிலையில், அன்றைய கூட்டு விளையாட்டுகள் இன்றும் தாக்குப்பிடிப்பது சாத்தியமில்லையே. இப்போது தெரிகிறதா யார் இந்த விளையாட்டுகளுக்கு முடிவுரை எழுதுவது என்று..?