ஞானகுரு பதில்கள்
கேள்வி : குறுக்கு வழியில் பணம் சேர்ப்பது வாழ்வை வளமாக்குமா..?
- கே.மகாலட்சுமி, யமுனை தெரு.
ஞானகுரு :
நேர்வழி, குறுக்குவழி என்பது ஆளுக்கு ஆள், நாட்டுக்கு நாடு மாறுபடக்கூடியது. இந்தியாவில் வங்கியை ஒரு சாதாரண மனிதனால் ஏமாற்ற இயலாது. பணம் கட்டவில்லை என்றால் சொத்துக்களை ஜப்தி செய்து ஜெயிலில் போட்டுவிடுவார்கள். ஆனால், பெரும் கோடீஸ்வரர்கள் வங்கிக்கு பணம் கட்டாமல் ஏமாற்றலாம். அவர்கள் குறுக்குவழியில் பணம் சேர்ப்பது தெரிந்தாலும், அரசு கண்டுகொள்வதில்லை. அப்படித்தான் சாராயத்தை தனி நபர்கள் விற்பது தவறு, அரசு செய்வது சரி.
ஆகவே, நேர் வழி அல்லது குறுக்கு வழி என்று பார்க்காமல் நிம்மதி தரும் வழியில் பணத்தைத் தேடுங்கள். அது எந்த வழியாக இருந்தாலும் நல்லதே. அதேநேரம், பணம் இருந்தால்தான் வாழ்வு வளமாகும் என்ற எண்ணமே தவறு. பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வாழ்வை கொண்டாட்டமாக வாழ முடியும்.
கேள்வி : பண சிக்கலில் சிக்கி தவிப்பவர்கள் மீள்வது எப்படி..?
- ஏ.சிவானந்தம், மீனாட்சி நகர்.
ஞானகுரு :
பணம் எதற்காக தேவைப்படுகிறது என்பதுதான் முக்கிய கேள்வி. உணவுக்கு பணம் தேவை என்றால், அது தீவிரமான சிக்கல். கடுமையான உழைப்பு மூலம் இந்த சிக்கலை தீர்த்துவிட முடியும். அந்தஸ்துக்காக, படிக்க வைப்பதற்கு, வீடு கட்டுவதற்கு, கடன் கொடுப்பதற்கு, மருத்துவச் செலவுக்கு என்பன போன்ற சிக்கலில் தவிப்பவர்கள், அதற்கான வழியை அவர்களே கண்டறிய வேண்டும். ஏனென்றால், அந்த சிக்கலை உருவாக்கியது அவர்கள்தான். பாதையை உருவாக்கியவர்களுக்கே, அதை கடப்பதும் எளிதாக இருக்கும்.












