மெடிக்கல் அவேர்னஸ்
உடல் நலம் குறித்து பரிசோதனை செய்வதற்கு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்ற நிலை மாறியே விட்டது. ஆப்பிள் வாட்ச் சீரிஸ், சாம்சங் கேலக்ஸி வாட்ச் போன்றவை மூலம் இதயம் தொடர்பான பிரச்சனைகளைக் கண்டறியும் இசிஜி, தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறல், ரத்த அழுத்தம் போன்றவைகளை பரிசோதிக்க முடிகிறது.
அதேபோன்று ஸ்மார்ட் மோதிரம் மூலம் மருத்துவத் தரத்திலான உடல் வெப்பநிலை மற்றும் மகப்பேறு ஆரோக்கியத்தைக் கண்காணிக்கிறது அதேபோல் டெக்ஸ்காம் ஜி7ல் கையின் பின்புறம் அடிவயற்றில் ஒட்டப்படும் சிறிய பாட்ச் மற்றும் குளுக்கோஸ் கண்காணிப்பு கருவிகள் உடலின் வளர்சிதை மாற்றத்தை உடனுக்குடன் கண்காணிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. இவை வீட்டிலிருந்தே மருத்துவ முடிவுகளை எடுக்கத் தேவையான துல்லியமான தகவல்களை வழங்குகின்றன.
இந்த அதிநவீனத் தொழில்நுட்பங்கள் குறிப்பிட்ட அலைநீளம் கொண்ட ஒளியைப் பயன்படுத்தி ரத்த ஓட்டத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கவனிப்பதன் மூலம் ரத்த அழுத்தம் மற்றும் ஆக்ஸிஜன் அளவைக் கணிக்கின்றன.
கடிகாரத்தின் பின்புறம் இருக்கும் பச்சை அல்லது சிவப்பு நிற எல்.இ.டி. விளக்கு, தோலின் உட்புறம் உள்ள காப்பிலரிஸ் எனப்படும் மிகச்சிறிய ரத்த நாளங்கள் வரை ஊடுருவுகிறது.
ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் புரதம் ஒளியை ஈர்க்கும் தன்மை கொண்டது. இதயம் துடிக்கும்போது ரத்த நாளங்களில் ரத்தம் அதிகரிப்பதால் அதிக ஒளி ஈர்க்கப்படுகிறது; துடிக்காத இடைவெளியில் குறைந்த ஒளியே ஈர்க்கப்படுகிறது.
இந்த ஒளி மாற்றங்களை ஒரு அலைவடிவமாக மாற்றி, எட்ஜ் ஏஐ எனும் தொழில்நுட்பம் மூலம் இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தைத் துல்லியமாகக் கணக்கிடப்படுகிறது.
குளுக்கோஸ் பரிசோதனை
தோலுக்கு அடியில் உள்ள செல்களைச் சுற்றியிருக்கும் திரவத்தில் ஒரு மெல்லிய நுண்-இழை தங்கியிருக்கும். ரத்தத்திலிருந்து இத்திரவத்திற்கு வரும் சர்க்கரை, அந்த இழையில் உள்ள என்சைம்களுடன் வினைபுரிகிறது. இந்த வேதிவினை ஒரு சிறிய மின் சிக்னலை உருவாக்குகிறது; சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் சிக்னலும் வலுவாக இருக்கும்.
இந்த சிக்னல் உடனுக்குடன் நம் ஃபோனுக்கு அனுப்பப்படுவதால், ஊசி குத்தாமலேயே சர்க்கரை அளவை 24 மணிநேரமும் கண்காணிக்க முடிகிறது. நாம் சாப்பிட்ட 15-30 நிமிடங்களில் எந்த உணவு நம் சர்க்கரை அளவை அதிகமாக உயர்த்துகிறது என்பதையும் இது உடனுக்குடன் காட்டும்.
சர்க்கரை முதலில் ரத்தத்தில் ஏறும், அதன் பிறகுதான் ஐ.எஸ்.எஃப். திரவத்திற்கு வரும். எனவே, நம் ரத்தச் சர்க்கரை மிக வேகமாக மாறும்போது (உதாரணத்திற்கு இனிப்பு சாப்பிட்ட உடனே), சென்சார் காட்டும் அளவுக்கும் உண்மையான ரத்த அளவுக்கும் 5 முதல் 10 நிமிடம் கால தாமதம் இருக்கும்.
மாத்திரைகள் அல்லது இன்சுலின் உடலில் எவ்வளவு சிறப்பாகச் செயல்படுகிறது என்பதை மருத்துவர்கள் துல்லியமாக அறியவும் இது உதவுகிறது. டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு இது மிக முக்கியமான கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது.
எதிர்காலத்தில் இதுபோன்று அணியக்கூடிய கருவிகள் ஊசி இல்லாமலேயே சர்க்கரை அளவு மற்றும் எலக்ட்ரோலைட்டுகளைக் கண்டறியும் வகையில் விரிவடைந்து வருகின்றன.
வியர்வை பகுப்பாய்வு மூலம் உடலில் நீர்ச்சத்து, லாக்டேட் மற்றும் மன அழுத்தத்தை கண்காணிக்கும் புதிய “ஸ்மார்ட் பேட்ச்கள்” மற்றும் மோதிரங்கள் தற்போது இறுதிக்கட்ட மருத்துவச் சோதனையில் உள்ளன. இவ்வாறு நம் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளும் ஒரு மருத்துவ உதவியாளராக இந்த கருவிகள் மனிதரை வழி நடத்துகின்றன.
அதேநேரம், ரத்த அழுத்தக் கருவிகளை மாதம் ஒருமுறையாவது ஒரு முறையான மருத்துவக் கருவியைக் கொண்டு மதிப்பீடு செய்ய வேண்டும். அப்போதுதான் நிஜமான பரிசோதனை முடிவுகளுடன் இந்த சாதனங்களின் கணக்கீடு இசைந்து செல்வதைக் கணக்கிட முடியும்.
இந்த மருத்துவ சாதனம் பாதுகாப்பானது என்றாலும், மருத்துவரின் நேரடிப் பரிசோதனைக்கு இணையானது அல்ல என்பதே உண்மை. எனவே, கையில் கட்டியிருக்கும் வாட்ச் மூலம் பார்க்கப்படும் பரிசோதனை முடிவுகளை முழுமையாக ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை.
