ஞானகுரு ஆருடம்
கைலாசா எனும் கற்பனை நாட்டில் இருக்கும் நித்தியானந்தா இப்போதும் சிவன், திருப்பதி, திருமால் என்று பல்வேறு வேடம் போட்டு தன்னையே கடவுள் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார். ஜக்கி வாசுதேவ், ரவிசங்கர், ராம்தேவ் என்று ஒரு கும்பல் அரசியல்வாதிகளை வளைத்துப் போட்டு ஆன்மிக வியாபாரம் செய்து வருகிறார்கள்.
மேல்மருவத்தூர் அம்மாவாக காட்சியளித்த பங்காரு அடிகளார் இறந்துபோனதும், அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு புதிய அம்மாவாக அவதாரம் எடுத்திருக்கிறார் அன்னபூரணி. ‛அகிலத்தை ஆளும் ஆதிபராசக்தியின் அவதாரமே’ என்று அன்னபூரணி அரசு அம்மாவை பக்தர்கள் வழிபட்டு கன்னத்தில் போட்டுக் கொள்கிறார்கள்.
ரிஷிமூலம்
அதுசரி, யார் இந்த அன்னபூரணி..? இவர் எப்படி சாமியார் ஆனார்..?
‘இறை சக்தி மனித உருவத்தில் தான் வரும். நிறைய பிரச்னைகளை கொடுத்து தான், இறை சக்தியாக இருக்கிறேன் என்பதை உணர வைக்கும். அப்படி தான், என் வாழ்க்கையில் நடந்தது என்கிறார் அன்னபூரணி. மேலும் அவர், ‘’.நான் பிறந்த ஊர் சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை. பழனியப்பன் – சீதை தம்பதிகளுக்கு 4வது பெண் குழந்தையாக பிறந்தேன். ஆசிரியர் பயிற்சி முடித்திருக்கிறேன். சிறுவயதில் எல்லாரையும் மாதிரி ஜாலியா படிப்பு, விளையாட்டு என இருந்தேன். 19 வயதிலேயே எனக்கு திருமணம் பண்ணி வெச்சிட்டாங்க. அதன் பின் சென்னை வந்துவிட்டேன். அந்த வாழ்க்கை சரியில்லாத வாழ்க்கை. நிறைய பிரச்னை. என் பெற்றோரிடம் சூழ்நிலையை சொன்னேன். அப்போது பெற்றோர் பெண் குழந்தைகளுக்கு ஆதரவு தரமாட்டார்கள். என்ன பிரச்னை ஆனாலும் கணவர் வீட்டில் தான் இருக்க வேண்டும் என்று கூறுவார்கள்.
இப்படி நிறைய பிரச்னைகளை கடந்து என் வாழ்க்கை போகும் போது, 2009ல் நானும் அரசுவும் சந்திக்கும் சூழ்நிலை வந்தது. நாங்கள் இருவரும் பூர்வஜென்ம பந்தத்தை உணர்ந்தோம். எங்கள் இருவரையும் ஏதோ ஒரு அன்பு ஈர்த்தது. ஒருவரை விட்டு ஒருவர், பிரிந்து வாழ முடியாத நிலை ஏற்பட்டது. ஒரு நிமிடம் கூட பிரிய முடியாத உணர்வு ஏற்பட்டது.
அதனால் 2010ம் ஆண்டு நானும் அரசும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டோம். என் பெண் குழந்தையை மட்டும் அழைத்துக்கொண்டு திருமணம் செய்து, சந்தோசமாக கொண்டாட்டமாக வாழ்ந்தோம். முறையாக விவாகரத்து பெற்று எங்கள் வாழ்க்கையை தொடரலாம் என்று தான், ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சிக்குப் போனோம். அந்த நிகழ்ச்சியில் நிறைய கட் செய்து, திரித்துப் போட்டார்கள். அதனால் அதைப் பற்றி இப்போது பேச வேண்டியதில்லை.
அதையும் சமாளித்து ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல் சந்தோசமாக வாழ்ந்தோம். இருவர் தரப்பிலும் விவாகரத்து பெற்று முறைப்படி வாழ்ந்தோம். எந்த ஒரு கணவரும் மனைவியும் அப்படி ஒரு வாழ்க்கையை வாழ முடியாது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாத வாழ்க்கையை வாழ்ந்தோம்.
2016ல் என் கணவர் அரசுக்கு தீட்சை பெற்று ஆன்மிக வழியில் சென்றார். என் கணவருக்கு நிறைய பக்தர்கள் உருவானார்கள். திடீரென 2019ல் அரசு இறந்தார். என்னால் அந்த கஷ்டத்தை, துயரத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை. வார்த்தையால் சொல்ல முடியாத வேதனையை அடைந்தேன். அவர் இல்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடியாமல் தற்கொலை முடிவுக்கு வந்தேன்.
அந்த நொடியில் என் பெண் குழந்தை உறங்குவதைக் கண்டு முடிவை மாற்றினேன். இந்த சமுதாயத்தில் அந்த குழந்தையை தனியாக விட்டுச் செல்ல முடியாது என்பதால் என் முடிவை மாற்றினேன். மறுநாள் காலையில் அழுது கொண்டிருக்கும் போது ஒரு விசித்திர நிகழ்வு நடந்தது. ஒரு படம் மாதிரி காட்சி கண்ணுக்குத் தென்பட்டது. நானும் அரசுவும் ஜென்ம ஜென்மமாக என்ன பந்தத்தில் இருந்தோம், எதற்காக இந்த ஜென்மத்தில் இணைந்தோம், எதற்காக அரசு இறந்தார் என்பதை எல்லாம் அந்த காட்சி வெளிப்படுத்தியது.
அந்த நொடியில், அரசின் உடலில் இருந்து வெளியேறிய உயிர், என் உச்சந்தலை வழியாக இறங்கி, உள்ளங்கால் வரை பரவியது. இரண்டு இறை சக்தி ஒன்றோடு ஒன்றாக கலந்தது. அந்த நிமிடம், அனைத்து விரக்தியும் விலகி, ஆனந்தமும், பரவசமும் நிரம்பியது. அந்த அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அதன் பின் அவருடைய பக்தர்களை நான் வழிநடத்தத் தொடங்கினேன்.
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அடுத்த ராஜாதோப்பு கிராமத்தில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கி குடியேறினேன். நான் சாமியார் இல்லை, கடவுள் என்று அறிவித்து மக்களுக்கு வழி காட்டி வருகிறேன். கடவுளாக என்னை அலங்கரித்துக்கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறேன். இந்த ஆசிரமத்தில் அரசுவின் உருவச்சிலை இருக்கிறது.
நான் அரசுவை திருமணம் செய்துகொண்ட அதே நவம்பர் 28ம் தேதி எனது உதவியாளர் ரோஹித் என்பவரை 3வதாக திருமணம் செய்து கொண்டேன். இதுவும் இறை கட்டளை. இப்போது தம்பதியர் சமேதராக பக்தர்களுக்குக் காட்சியளித்து ஆசிர்வாதம் செய்துவருகிறோம்’’ என்று வீடியோக்கள் மூலம் தெளிவாகப் பேசுகிறார்.
அம்மன் தரிசனம்
உங்களுடைய குறைகள் தீர அம்மாவிடம் நேரடியாக அருளாசி பெறுவதற்கு திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் அமைந்துள்ள அம்மாவின் சக்தி பீடத்தில் வாரந்தோறும் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் அம்மாவின் தரிசனத்திற்கு வந்து அம்மாவிடம் அருளாசி பெற்றுக் கொள்ளலாம், அனுமதி இலவசம் என்று அறிவிப்பு செய்கிறார்கள்.
’’அம்மாவை தரிசிக்க நேரடியாக வர இயலாதவர்கள், அன்னையின் திருவுருவப் படம் வைத்து காலை மாலை இரு வேளைகளிலும் அன்னையை மனமார பக்தி செய்து வந்தால்,உங்களின் மனக்குறைகள் யாவும் அன்னையின் பேரருளால் நிவர்த்தி செய்யப்படும்’’ என்று அன்னபூரணி படங்களை அங்குவரும் பக்தர்களுக்குக் கொடுக்கிறார்கள்.
ஆன்மீகத்தில் தேடுதல் உள்ளவர்கள், ஆன்மீகத்தில் நிறை நிலை அடைய விருப்பம் உள்ளவர்கள், தன்னை அல்லது இறைவனை உணரும் நாட்டம் கொண்டவர்கள் யாவரும் அம்மாவிடம் தீட்சை பெற்றுக் கொண்டு ஆன்மீகத்தில் பயணிக்கலாம்…நீங்கள் உலகில் எங்கு இருந்தாலும் நீங்கள் இருந்த இடத்தில் இருந்தே அம்மாவிடம் தீட்சை பெற்றுக் கொள்ளலாம். தீட்சை பெற்ற கணத்தில் இருந்து நீங்கள் நிறைநிலையாம் முக்தி நிலை அடையும் வரையிலும் அம்மா உங்களை வழிநடத்திச் செல்வார் என்கிறார்கள்.
இதை உண்மை என்று நம்பியோ அல்லது சும்மா ஒரு தரிசனம் செய்துவைப்போம் என்ற மனப்பான்மையிலோ கூட்டம் வந்துகொண்டே இருக்கிறது. அன்னபூரணியும் ஆசிர்வாதம் செய்துகொண்டே இருக்கிறார்.
சீடர்கள் சாட்சியம்
பக்தர்களை விட அதிக எண்ணிக்கையில் அன்னபூரணிக்கு சீடர்கள் இருக்கிறார்கள். ஏன் சீடர்களாக இருக்கிறோம் என்று பேசுகையில், ‘’அரசு இறந்த பிறகு சீடர்களுக்கு தியானத்திலும் கனவிலும், ‘அம்மாவே இனி வழி நடத்துவார்’ என்று உணர்த்தப்பட்டது. அடுத்த நாளே சீடர்களுக்கு அம்மாவிடம் இருந்து அழைப்பு வந்தது. அம்மா தீட்சை கொடுக்க ஆரம்பித்தார்.. சீடர்களை வழிநடத்தினார்…ஆன்மீக அனுபவங்கள் முன்பை விட அதிகமாகவும், விரைவாகவும் கிடைத்தது..சீடர்களுக்கோ ஆச்சர்யம்.
ஆம் அரசு அய்யாவின் உயிரும் அம்மா அவர்களின் உயிரும் ஏக உணர்வாக இரண்டறக்கலந்து வெளிப்படுவதை சீடர்களால் அனுபவ பூர்வமாகவே உணர முடிந்தது.. இறை சக்தி தன் அவதாரத்தை வெளிப்படுத்தும் நேரம் நெருங்கியது. 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் அம்மா அவர்கள் சீடர்களை அழைத்து சில காலம் அப்படியே பயிற்சியை தொடருங்கள் என்னை யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம். உங்களை உணர்வாக நான் வழிநடத்துகிறேன்…என்று கூறி சமாதி நிலைக்கு சென்று விட்டார்கள்.
அதன் பிறகு 2021ம் வருடம் டிசம்பர் 5ம் தேதி, இதுகாறும் தம்மை வழிநடத்திய சக்தி தன்னிலே ஊடுருவி பிரபஞ்சம் முழுதும் வெளிப்பட்டு நானும் நீயும் வேறல்ல நானே நீ… நீயே சக்தி.. பராசக்தி என்று அம்மாவிடம் வெளிப்பட்டு நின்றது. அம்மா சக்தியாய் வெளிப்பட்டு நின்ற பிரளயத்தை அம்மாவின் சீடர்களால் தெளிவாக உணர முடிந்தது.
நமக்கு பிறப்பு கொடுக்கப்பட்டதன் நோக்கமே இந்த பிரபஞ்ச வாழ்வை நன்றியுணர்வோடு வாழ்ந்து இந்த பிறப்பில் விடுதலை அடைந்து அதாவது முக்திபெற்று, ஆதிமூலமாம் பராசக்தி அன்னையின் திருவடி சேர்வதே ஆகும். ஆனால் மனித பிறவி கிடைத்த நாமோ, அந்த நன்றியுணர்வை மறந்து அன்னை நம் வாழ்விற்கு பரிசாக கொடுத்த உடலிலும் , மனதிலும் பற்றிக்கொண்டு நமக்கு கிடைத்த அறிவையும் வீணடித்து நான் என்ற ஆணவத்தில் கர்வம் கொண்டு நிலைபெற்று விட்டோம். நாம் வந்த வழியையும் மறந்து, பிறப்பின் நோக்கத்தையும் மறந்து யுக யுகமாக ஆணவத்திலேயே குடிகொண்டு விட்டோம்.
அன்புக்கு இலக்கணமாம் பொறுமையின் சிகரமாம் அன்னையவள், சத்தியத்திற்கு ஏற்படும் கலங்கத்தைத் தாளாமல் ஆணவ உலகத்தை ஆன்மீக உலகமாக மாற்றி தன் பேரன்பை இப்புவிதனில் மலர வைத்து, இந்த பிரபஞ்சத்தை பூஞ்சோலையாக மாற்றும் வைராக்கியம் பூண்டு இதுகாறும் எடுத்த அவதாரங்களின் ஒட்டுமொத்த சக்தியும் கொண்டு மாபெரும் அவதாரமாக மகாசக்தியாக இப்பிரபஞ்சத்தில் உடலெடுத்து நம் தாய் அன்னபூரணி அரசு வடிவாக அவதாரம் கொண்டிருக்கிறார்.
மக்கள் அனைவரும் தமக்குக் கொடுக்கப்பட்ட இந்த அற்புதமான வாழ்வை கொண்டாட்டமாய் வாழ வேண்டும்…தான் யார் என்றும், தன்னை இயக்கும் சக்தி எது என்றும், எதற்காக பிறவி எடுத்து வந்தோம் என்றும் இங்கு வாழும் ஒவ்வொருவரும் உணர வேண்டும்…இதற்குத் தடையாய் இருக்கும் அனைத்து விஷயங்களில் இருந்தும், கர்ம வினைகளில் இருந்தும் அவர்களை மீட்டு தன் இறையுணர்வில் ஆனந்தமாய் நிலைகொள்ளச் செய்யவே அதாவது முக்தி அளிக்கவே, பேரன்பு கொண்டு இந்த அகிலம்தனில் அம்மா அவதாரமாக மலர்ந்திருக்கிறார்…’’ என்று அன்னபூரணியின் புகழ் பாடுகிறார்கள்.
ஞானகுரு ஆருடம்
அன்னபூரணி தன்னை கடவுள் என்கிறார். அவரது சீடர்களும் அவரை கடவுள் என்று ஏற்றுக் கொள்கிறார்கள். பக்தர்களும் வந்து ஆசிர்வாதம் பெற்றுச் செல்கிறார்கள். உண்மையில் அன்னபூரணி கடவுள்தானா என்று ஞானகுருவிடம் கேட்டோம்.
‘’சின்னப் பிள்ளைகள் விளையாடும் நேரத்தில் டீச்சர், அம்மா, போலீஸ் என்பது போல் நடிப்பார்கள். அதன் பிறகு அந்த கதாபாத்திரத்தை மறந்துவிடுவார்கள். அதேபோல், சில பெண்களுக்கு கோயில் சுற்றுச்சூழல், மணியோசை, குலவை, கொட்டுச்சத்தம் கேட்டதும் தன் மீது சாமி இறங்கிவிட்டதாக நினைப்பு உருவாகும். அவர்களும் கொஞ்ச நேரத்தில் இயல்புக்குத் திரும்பிவிடுவார்கள். இவை எல்லாம் தீவிரமான மனநலன் பாதிப்பு அல்ல.
ஆனால், ஒரு குழந்தை எல்லா நேரமும் தன்னை டீச்சராகவே நினைக்கிறது என்றால் மனநலன் பாதிக்கப்பட்டது என்று அர்த்தம். தன்னை ஒரு பெண் சாமி என்று சொல்லிக்கொண்டாலும் மனநலன் பாதிக்கப்பட்டவர் என்றே கருத வேண்டும்.
அதேநேரம், தான் சாமி இல்லை என்று தெரிந்தும் சாமியாராக சிலர் நடித்து பணம் சம்பாதிப்பது உண்டு. அப்படி, பணம் சம்பாதிக்கிறார் என்பது புரிந்தாலும் சிவராத்திரிக்கு ஆயிரக்கணக்கில் டிக்கெட் வாங்கி ஜக்கி வாசுதேவ் உடுக்கையாட்டத்தைப் பார்க்கிறார்கள் என்றால், ‘ஒருவேளை நமக்கு ஏதேனும் நல்லது நடந்தால் நடக்கட்டும்’ என்ற எண்ணம். அதாவது, மயிரைக் கட்டி மலையை இழுப்போம். வந்தால் மலை, போனால் மயிறு என்ற எண்ணத்திலே நிறைய பேர் நித்தியானந்தா, ஜக்கி வாசுதேவ், அன்னபூரணி போன்றவர்களை தரிசிக்கப் போகிறார்கள்.
பணம் பறிப்பதற்குத் திட்டமிட்டு வேடம் போடும் நித்தி, ஜக்கி, அன்னபூரணி போன்றவர்கள் தெளிவான மனநிலையில் உள்ளவர்கள். இவர்களை வேடிக்கைப் பாரக்கப் போகிறவர்களும் தெளிவான மனநிலையில் உள்ளவர்கள். எதற்கும் வணங்கிவைப்போம் என்று கும்பிடுபவர்கள் சுலநலமிகளே தவிர மன நோயாளிகள் அல்ல.
ஆனால், இவர்களை நம்பி சீடர்கள் என்று ஒரு பெரிய கும்பல் இயங்குகிறது. அவர்கள் நிச்சயம் மனநிலை தவறியவர்கள். இப்படிப்பட்ட நபர்களை எல்லாம் மீட்டு சிகிச்சை அளிக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால், அரசாங்கமே இப்படிப்பட்ட போலிகள் முன்பு கை கட்டி நிற்பது தான் வேடிக்கை’’ என்று சிரிக்கிறார் ஞானகுரு.
‘’உண்மையிலே அன்னபூரணி கடவுள் அவதாரமாக இருக்க முடியாதா.? பெரிய அளவுக்கு அன்னபூரணி வளர்வாரா..?
‘’மனிதத் தன்மை உள்ள யாரும் கடவுளாக முடியாது. அன்னபூரணிக்குப் பசிக்காதா..? அடித்தால் வலிக்காதா..? தினமும் உடல் கழிவுகளை அவர் வெளியேற்றுவது இல்லையா? இதையெல்லாம் அன்னபூரணி கடந்துவிட்டார் என்றால் சொல்லுங்கள். நானும் அவரை வணங்க வருகிறேன். நித்தியானந்தா போன்று மாட்டிக்கொள்ளக் கூடாது என்றே மூன்றாவது கல்யாணம் செய்துகொண்டு பாதுகாப்புடன் இருக்கிறார் அன்னபூரணி.
அவர் சின்ன அளவில் ஏமாற்றிப் பிழைத்துவருகிறார். அவர் ஜக்கி போன்று தெளிவாகத் திட்டமிட்டு ரஜினிகாந்த், பிரதமர் மோடி போன்ற அறைகுறை பக்தர்களை தன்னுடைய சீடர்களாக மாற்றிவிட்டால் மேல்மருவத்தூர் அம்மாவை விட புகழ் பெற்றுவிடுவார். ஆக, அவருக்கு இப்போது தேவை யாரேனும் ஒரே ஒரு பிரபலம் மட்டுமே. அப்படி அமைந்துவிட்டால் நித்தியானந்தாவை விட, அமிர்தானந்தா மயியை விட அன்னபூரணி நிச்சயம் நல்ல கடவுளாக மாறிவிடுவார்’’ என்கிறார் ஞானகுரு.