என்ன செய்தார் சைதை துரைசாமி – 149
மாநகராட்சிப் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களில் பெரும்பாலோர் அதிகம் கற்றவர்கள் இல்லை. எனவே இவர்களுக்கு அரசு பதவிகளுக்கான போட்டித் தேர்வுகளில் தங்கள் பிள்ளைகளை பங்கேற்கச் செய்வதற்குப் பயிற்சி தரும் அளவுக்குப் புரிதல் இருப்பதில்லை. இவர்களுக்கு மத்திய அரசு, மாநில அரசு, வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு வேலையில் சேர்வதற்கு என்னென்ன தகுதிகள் வேண்டும், எப்படிப்பட்ட தேர்வுகள் நடைபெறும் என்பதும் தெரிவதில்லை.
எனவே, இந்தக் குறையைப் போக்கும் வகையில் 9ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் வருங்காலங்களில் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதுவதற்கு ஊக்குவிக்கும் வகையில், அனைத்து மாணவர்களுக்கும் ஐ.ஏ.எஸ். தேர்வு குறித்த அறிமுகத் தகவல்கள் வழங்கப்பட்டன. அதோடு மேற்படிப்பு குறித்தும் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு போன்ற போட்டித் தேர்வுகள் குறித்தும் அறிமுகம் செய்துவைக்கப்பட்டன. இந்த வயதிலேயே புரிதல் ஏற்பட்டால் மட்டுமே அவர்களால் கடுமையான போட்டிகளுக்கு இடையில் அரசு பதவிகளைக் கைப்பற்ற முடியும் என்பதற்காகவே இந்த பயிற்சிகளைக் கொடுப்பதற்கு சைதை துரைசாமி ஏற்பாடுகள் செய்தார். மனிதநேய அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு இலவசக் கையேடுகள் வழங்கப்பட்டன.
மாணவர்கள் பொது அறிவை வளர்த்துக்கொள்வதற்கு நாளிதழ்கள் மட்டும் போதாது என்பதால் பள்ளிகளில் நூலகம் மேம்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுத்தார் மேயர் சைதை துரைசாமி. அனைத்துப் பள்ளிகளிலும் நூலகம் அமைப்பதற்கும், பராமரிப்பதற்கும் நூலகத்தில் மாணவர்கள் சென்று படிப்பதற்கும் தேவையான வசதிகள் செய்து தரப்பட்டன.
மாணவர்களிடம் மேயர் சைதை துரைசாமி பேசுகையில், ‘’பொது அறிவுத் திறன் வளர்ப்பதற்கு சிந்திப்பதற்கு நூலகமே ஆசானாக, வழிகாட்டியாக, நண்பனாகத் திகழ்கின்றன. எனவே தினமும் நூலகம் செல்லும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். பாடப்புத்தகம் தவிர்த்து ஒரு மணி நேரம் பொது அறிவை வளர்த்துக்கொள்வதற்கு நேரம் ஒதுக்கவேண்டும்’’ என்று தொடர்ந்து அறிவுறுத்திவந்தார்.
மாநகராட்சி சார்பாக பள்ளிகளுக்கு ஏராளமான நூல்கள் வாங்கப்பட்டு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டன. தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளுக்கு நூலகத் தளவாட சாமான்கள் வாங்கப்பட்டு நூலக அறை நவீனப்படுத்தப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு நூல்கள் படிப்பதிலும், நூலகம் செல்வதிலும் ஆர்வம் அதிகரித்தது. இது மாநகராட்சிப் பள்ளிகளில் நடந்த முக்கியமான மாற்றமாகப் பாராட்டப்பட்டது.
- நாளை பார்க்கலாம்.