விளையாட்டுத் திடல்கள் எண்ணிக்கை கிடுகிடு உயர்வு

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 144

பள்ளி வளாக மைதானத்தின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு மேயர் சைதை துரைசாமி ஆய்வு மற்றும் நடவடிக்கை மேற்கொண்ட நேரத்தில், இன்னொரு குறை இருப்பது அவருக்குத் தெரியவந்தது. அதாவது பள்ளி, கல்லூரி மாணவர்கள் குறிப்பிட்ட நேரம் மட்டுமே பள்ளிகளில் விளையாடுகிறார்கள். விடுமுறை தினங்களில் மாணவர்கள் மட்டுமின்றி இளைஞர்களும் விளையாட்டு ஆர்வலர்களும் பயிற்சி எடுப்பதற்கு போதிய விளையாட்டுத் திடல்கள் இல்லை என்ற உண்மை புரிந்தது.

ஒலிம்பிக், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சின்னஞ்சிறு நாட்டின் வீரர்கள் எல்லாம் நிறையப் பதக்கம் அள்ளுகிறார்கள். ஆனால், நம் தமிழக மக்களிடம் நல்ல திறமை இருந்தாலும் போதிய பயிற்சிகள் எடுப்பதற்கு வாய்ப்பு இல்லாத காரணத்தாலே இந்திய அளவில் கூட போட்டியிட வழியில்லாமல் போகிறது. எனவே, விளையாட்டு ஆர்வம் உள்ளவர்களை ஊக்குவிக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் விளையாட்டுத் திடல்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதற்குத் திட்டமிட்டார்.

சைதை துரைசாமி மேயராகப் பதவி ஏற்ற தருணத்தில் மொத்தமே 48 மைதானங்கள் மட்டுமே சென்னையில் இருந்தன. அதாவது சென்னை மாநகராட்சி உருவாக்கப்பட்ட 1919ம் ஆண்டு முதல் இந்த 48 மைதானங்களே இருக்கின்றன. இந்த எண்ணிக்கை அதன் பிறகு உயர்த்தப்பட்டதே இல்லை என்பது தெரியவந்தது. பெருநகர சென்னையின் வளர்ச்சிக்கும் மக்களின் விளையாட்டு ஆர்வத்தை அதிகரிக்கவும் இந்த எண்ணிக்கை போதவே போதாது என்பதால் ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு புதிய மைதானம் உருவாக்குவதில் தனிக்கவனம் செலுத்தினார். சைதை துரைசாமியின் மேயர் பதவிக்காலம் முடிவடையும் நேரத்தில் பெருநகர சென்னையின் மைதானங்களின் எண்ணிக்கையை 213 என்று உயர்த்தியிருந்தார்.

விளையாட்டு மைதானங்களின் எண்ணிக்கையை உயர்த்தியது மட்டுமின்றி, இந்த மைதானங்களில் விளையாடுவதற்குத் தேவையான உபகரணங்கள் வழங்கியும், மைதானத்தை விரிவுபடுத்தியும் விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தினார். சைதை துரைசாமியின் முயற்சி காரணமாகவே, சென்னையில் இப்போது காணும் இடங்களில் எல்லாம் விளையாடு மைதானம் தென்படுகிறது. இது, சைதை துரைசாமி என்ற தனி மனிதர் மேற்கொண்ட முயற்சிக்குக் கிடைத்த வெற்றி என்றே சொல்ல வேண்டும்.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment