என்ன செய்தார் சைதை துரைசாமி – 325
குப்பையை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரித்து அகற்றும் பணியில் மக்களையும் மாணவர்களையும் ஈடுபடுத்தியது மட்டுமின்றி பொதுநலச் சங்கங்களையும் இணைத்துப் பணியாற்றினார் மேயர் சைதை துரைசாமி. இந்த காலகட்டத்தில் குப்பைத் தொட்டியில் கட்டிட இடிபாடுகள் போடுவதை தடுத்து நிறுத்துவதற்குமான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.
எதற்கும் உபயோகப்படாத பொருட்களையே குப்பை என்று மக்கள் வெளியே தூக்கிப் போடுகிறார்கள். இவற்றை முறைப்படி பிரித்துப் பயன்படுத்தினால், இவற்றில் இருந்து பல வகைகளில் வருமானம் பார்க்க முடியும் என்பது மேயர் சைதை துரைசாமிக்குத் தெரியவந்தது. இது குறித்து பல்வேறு அதிகாரிகளுடன் ஆலோசனைகள் நடத்தினார். தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டார். குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிப்பதை பல்வேறு நாடுகள் வெற்றிகரமாக நிறைவேறி வருவதை மேயர் சைதை துரைசாமி அறிந்துகொண்டார்.
அந்த வழியில் வெளிநாடுகளைப் போன்று சென்னையிலும் குப்பையை பயனுள்ளதாக மாற்றுவதற்கும் மின்சாரம் தயாரிக்கவும் தேவையான நடவடிக்கைக்குத் திட்டமிட்டார். குறிப்பாக பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் உள்ள குப்பையில் இருந்து, மின்சாரம் தயாரிக்கும் ஆலைகள் நிறுவலாம் என்ற முடிவுக்கு வந்தார். இதையடுத்து மேயர் சைதை துரைசாமியின் வழிகாட்டுதலில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிப்பதற்கு விரிவான திட்ட மதிப்பீடு மற்றும் அறிக்கை தயாரிப்பதற்கு ஏற்பாடு செய்தார்.
இந்தத் திட்டம் குறித்து, அண்ணா பல்கலைக்கழகம், ஐ.ஐ.டி., மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல் நிபுணர்கள், தமிழ்நாடு நகர்ப்புற கட்டமைப்பு நிதி சேவை நிறுவன பிரதிநிதிகள் அடங்கிய வல்லுனர் குழுவினர் ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது. அதேநேரம், ஒரு சில இடங்களில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிப்பதன் மூலம் சுற்றுசூழலுக்குப் பாதிப்பு ஏற்படுவது தெரியவந்தது. எனவே, யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையிலும் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து இல்லாமல் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிப்பதற்குத் திட்டமிட்டார் மேயர் சைதை துரைசாமி.
- நாளை பார்க்கலாம்.