இறுதிப்பயணம் விமர்சனம்
இயக்குனர் இமயம் பாரதிராஜா 85 வயதில் நிறைவாழ்வு முடித்து விடைபெற்றுச் சென்றுள்ளார். பாரதிராஜாவுக்கு அஞ்சலி செலுத்திய இளையராஜாவின் பேச்சு நிறைய பேருக்கு வேதனையும் சங்கடமும் கொடுத்திருக்கிறது.
ஏனென்றால், இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன், ‘’பாரதிராஜா எங்களை சென்னைக்கு அழைத்துவந்து சோறு போட்டான். அவன் இல்லையென்றால் நானும், இளையராஜாவும் சென்னைக்கே வந்திருக்க மாட்டோம்..’’ என்று உடைந்துபோய் அழுதார்.
அதேநேரம் இளையராஜா எந்த சலனமும் இல்லாமல், ‘’பாரதிராஜாவை என் நண்பன்னு சொல்றீங்க, எல்லாரும் எனக்கு நண்பர்கள் தான். எல்லோரையும் எனக்குப் பிடிக்கும். அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்’ என்று நகர்ந்துவிட்டார்.
இளையராஜா எதுவும் பேசாமல் போயிருக்கலாம். பாரதிராஜாவை பாராட்டி பேசியிருக்கலாம் என்று கடுமையாக விமர்சனம் வைக்கிறார்கள்.
உண்மை என்ன தெரியுமா..?
துன்பத்தை ஒவ்வொரு மனிதரும் ஒரு வகையில் எதிர்கொள்வார்கள். இளையராஜாவின் இசையும் வாழ்க்கைப் போராட்டங்களும் அவருக்கு புத்தர் போன்று தெளிவு கொடுத்திருக்கிறது என்று சொல்லலாம். இறப்பு வாழ்க்கையின் ஒரு பகுதி, அதிக பாசம் அதிக துன்பம் தரும் என்பதை உணர்ந்திருக்கிறார். அவருக்குப் பிடித்ததை செய்கிறார், சரி என்று நினைப்பதைப் பேசுகிறார்.
அதனால்தான் மனைவி ஜீவா, மகள் பவதாரணி இழப்புக்குப் பிறகும் இயங்கிக்கொண்டே இருக்கிறார், சிம்பொனி இசைக்க முடிகிறது. இளையராஜா போன்று பற்று இல்லாமல் வாழக் கற்றுக்கொண்டால், எந்த துன்பமும் தொந்தரவு தராது.
கலைஞர்களின் படைப்புகளைக் கொண்டாடுவோம்; அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கை மீதான விமர்சிப்பதைத் தவிர்ப்போம். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
