மைக்கேல் ஜோர்டன்
’என் வாழ்க்கையில் 9000 முறை ஷூட் போடும் சந்தர்ப்பத்தை வீணடித்திருக்கிறேன். இதுவரை 300 போட்டிகளில் தோல்வி அடைந்திருக்கிறேன். நான் ஷூட் போட்டு அணியை வெற்றி பெற வைத்துவிடுவேன் என்று மைதானத்தில் உள்ளவர்கள் நம்பிய வேளையில், 26 முறை அந்த வாய்ப்பை வீணடித்திருக்கிறேன். நான் மீண்டும் மீண்டும் தோற்றுக்கொண்டே இருக்கிறேன். ஆனால் வெற்றிக்காக போராடிக்கொண்டே இருக்கிறேன். அதனால்தான் வெற்றியாளனாக என்னால் வலம் வர முடிகிறது’ என்று சொன்னவர் யார் தெரியுமா..?
மைக்கேல் ஜோர்டன். இதுவரையிலான காலத்தின் மிகச்சிறந்த கூடைப்பந்து விளையாட்டு வீரராகப் போற்றப்படுபவர். ஆனால், இவரும் சிறுவயதில் நிராகரிப்புக்கு ஆளானவர்தான். ஆம், பள்ளி காலத்தில் மிகப்பிரமாதமான விளையாட்டு வீரர் என்று பெயர் வாங்கியிருந்தாலும், சீனியர் அணியில் இடம் கிடைக்கவில்லை. என்னவென்று கேட்ட நேரத்தில், ‘தம்பி, உனக்கு உயரம் பத்தாது’ என்று விரட்டியடித்தார்கள். அதைக் கேட்டு வீட்டில் கதவை பூட்டிக்கொண்டு அழுதிருக்கிறார்.
ஆனால், அது கொஞ்ச நேரம்தான். திறமையை நிரூபித்தால் நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில், பள்ளியின் ஜுனியர் அணியில் இணைந்து விளையாட ஆரம்பித்தார். தினமும் காலையில் கோச் வருவதற்கு முன்பாகவே பேஸ்கட் பால் ஆடிக் கொண்டிருப்பார். மாலையில் அவர், ‘போதும் கிளம்பு’ என்று கழுத்தைப் பிடித்துத் தள்ளினால் மட்டுமே கிளம்புவார். நினைவில், கனவில், உணர்வில், எண்ணத்தில் எப்போதும் கூடைப்பந்தே துள்ளிக் கொண்டிருந்தது. அந்தத் தீவிரப் பயிற்சி, இடை விடாமுயற்சி அவரை ஜூனியர் அணியின் நட்சத்திர வீரர் ஆக்கியது. அவர் விளையாடும் ஆட்டங்களுக்கென தனிக் கூட்டமும் கூட ஆரம்பித்தது. மேட்ச் வின்னராக மிளிர்ந்தான். ஆட்டத்திறனால் அவர் புகழும் வளர்ந்தது, அப்படியே அந்த ஒரு வருடத்தில் அவரும் (10செமீ கூடுதலாக) வளர்ந்திருந்தான். அவரை நிராகரித்த கோச், வாரியணைத்து பல்கலைக்கழக அணியில் சேர்த்துக்கொண்டார். பின் அவர் பேஸ்கட் பால் உலகின் சூப்பர் ஸ்டார் ஆக உச்சம் தொட்டதெல்லாம் வரலாறு
அந்த விடாப்பிடியான முயற்சிதான் அவரை விளையாட்டு வீரராக மாற்றியது. ‘வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால், சில தடைகள் வரும், நானும் அவைகளை சந்தித்தேன். அவைகளைக் கடந்துதான் வரவேண்டும். என்னால் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியும். நாம் அனைவருமே ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் தோல்வியடைவோம். ஆனால், முயற்சியின்மை என்பதை என்னால் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு முறை முயற்சியை கைவிட நினைத்தீர்கள் என்றால் அதுவே வாடிக்கையாகிவிடும்’ என்கிறார் ஜோர்டன்.
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நடுத்தரக் குடும்பத்தில் 1963ம் ஆண்டு பிறந்தவர் மைக்கேல் ஜோர்டன். தந்தை மின்சார ஆலையில் மேற்பார்வையாளர். தாயார் வங்கி நிர்வாகி. குடும்பத்தில் மொத்தமுள்ள ஐந்து குழந்தைகளில் நான்காவது குழந்தையாக பிறந்தவர் மைக்கேல் ஜோர்டன். ஆரம்பக் கட்டங்களில் பேஸ் பால் விளையாடி வந்த மைக்கேல் ஜோர்டனுக்கு பின்னாட்களில் பேஸ்கெட் பால் விளையாட்டு மீது ஈர்ப்பு ஏற்படுகிறது. பள்ளி அணிகளில் இணைய முயற்சிக்கும் போது, உயரத்தை காரணம் காட்டி நிராகரிக்க, அது தந்த ஏமாற்றமும், வேதனையும் மைக்கேல் ஜோர்டனுக்கு சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும், தனக்கான ஒரு அடையாளத்தை பதிக்க வேண்டும் என்கிற உத்வேகத்தையும் அளிக்கிறது. பள்ளியின் ஜூனியர் அணியில் இணைந்து விளையாட ஆரம்பிக்கிறார். தன்னுடைய திறமையை நிரூபித்து படிப்படியாக முன்னேறி, உலகின் சிறந்த கூடைப்பந்தாட்ட வீரர் என வரலாறு பேசக் கூடிய உயரத்தைத் தொட்டுள்ளார். கூடைப்பந்தாட்ட உலகின் உயரிய சாதனையாகக் கருதப்படும் எம்.வி.பி.(MVP) விருதினை இதுவரை 5 முறை வென்றுள்ளார்.
சிகாகோ புல்ஸ் அணிக்காக மைக்கேல் ஜோர்டன் விளையாடும் போட்டிகளில், அரங்கம் பார்வையாளர்களால் நிரம்பி வழியும். அதில் பாதி ரசிகர்கள் மைக்கேல் ஜோர்டன் விளையாடும் ஸ்டைலை மட்டுமே காண வந்தவர்கள். அணி வெற்றி, தோல்வி குறித்து அவர்களுக்கு கவலையேயில்லை. பந்து ஜோர்டன் கையில் விளையாட்டு பொம்மை போன்றுதான் இருக்கும். கையில் பொம்மையை வைத்துக்கொண்டு அதைக் கொடுப்பது போலக் கொடுத்து, கை மாற்றி மாற்றி குழந்தையிடம் விளையாடுவதும், அதில் குழந்தை ஏமாந்து போவதும் பார்ப்பதற்கு எப்படிப் பரவசம் தருமோ, அது போலவொரு பரவசம் மைக்கேல் ஜோர்டன் களமிறங்கும் போட்டிகளில் பார்வையாளர்களுக்குக் கிடைக்கும்.
மின்னல் வேகத்தில் கால் நகர்வுகள் மற்றும் பம்பரம் போல சுழலும் உடலுடன் மைக்கேல் ஜோர்டன் பந்தை கைமாற்றி எதிராளியை ஏமாற்றுவதையும், அந்தரத்தில் எகிறிக்குதித்து பாயின்ட் எடுப்பதையும் காண கூடைப்பந்து ரசிகர்கள் தவமாய் காத்துக் கிடப்பார்கள். அவர்கள் எதிர்பார்ப்பை எந்தவொரு போட்டியிலும் நிவர்த்தி செய்ய மைக்கேல் ஜோர்டன் தவறியதுமில்லை.
1986ல் ஒரு போட்டியில் விளையாடும்போது, ஜோர்டனின் கால் உடைந்துவிட, அடுத்த 64 போட்டிகளில் விளையாட இயலாமல் போனது. ஒரு நட்சத்திர வீரருக்கு மிகவும் மோசமான சூழல் என்பது காயத்தால் முடங்கும் காலகட்டமே. காயத்திலிருந்து மீண்டு வந்தாலும், பழைய வேகத்தைத் தொலைத்து காணாமல் போனவர்கள் பலர் உண்டு. ‘இந்த மாதிரியான சோதனைகளும் தோல்விகளுமே தன்னை முழுவீச்சில் இயக்கும் எரிபொருள்’ என்று இயங்கிய அவர், நம்பிக்கை வற்றாத பயிற்சியால், ‘பழைய மைக்கேல் ஜோர்டனாக’ உடலால், மனதால் மீண்டு வந்தார். பந்து, கூடைக்குள் ஓய்வின்றி விழ ஆரம்பித்தது.
அவருக்கு ஏர் ஜோர்டான் மற்றும் அவரது ஏர்நெஸ் என்ற புனைப்பெயர்களைப் பெற்றது. கூடைப்பந்தில் சிறந்த தற்காப்பு வீரர்களில் ஒருவராக புகழ் பெற்றார். 1991 ஆம் ஆண்டில், அவர் தனது முதல் NBA சாம்பியன்ஷிப்பை புல்ஸ் உடன் வென்றார், மேலும் 1992 மற்றும் 1993 ஆம் ஆண்டுகளில் பட்டங்களுடன் அந்த சாதனையைப் பின்பற்றி, “மூன்று-பீட்” பெற்றார். ஜோர்டான் 1993-94 என்.பி.ஏ பருவத்தின் தொடக்கத்திற்கு முன்பு கூடைப்பந்தாட்டத்திலிருந்து திடீரென ஓய்வு பெற்றாலும், மைனர் லீக் பேஸ்பாலில் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கினாலும், அவர் மார்ச் 1995 இல் புல்ஸுக்குத் திரும்பினார், மேலும் 1996, 1997, மற்றும் 1998 ஆம் ஆண்டுகளில் மூன்று கூடுதல் சாம்பியன்ஷிப்புகளுக்கு இட்டுச் சென்றார், 1995-96 NBA பருவத்தில் 72 வழக்கமான சீசன் வெற்றிகளைப் பெற்றது. ஜோர்டான் ஜனவரி 1999 இல் இரண்டாவது முறையாக ஓய்வு பெற்றார், ஆனால் 2001 முதல் 2003 வரை மேலும் இரண்டு NBA பருவங்களுக்கு வழிகாட்டிகள் உறுப்பினராக திரும்பினார்.
ஜோர்டான் 1996 ஆம் ஆண்டில் வெளியான ஸ்பேஸ் ஜாம் திரைப்படத்திலும் தன்னைப் போலவே நடித்தார். 2006 ஆம் ஆண்டில், அவர் சார்லோட் பாப்காட்ஸின் (இப்போது ஹார்னெட்ஸ்) பகுதி உரிமையாளராகவும், கூடைப்பந்து நடவடிக்கைகளின் தலைவராகவும் ஆனார், மேலும் 2010 இல் ஒரு கட்டுப்பாட்டு ஆர்வத்தை வாங்கினார். 2014 இல், ஜோர்டான் என்பிஏ வரலாற்றில் முதல் பில்லியனர் வீரர் ஆனார். அவர் ராபர்ட் எஃப். ஸ்மித் மற்றும் ஓப்ரா வின்ஃப்ரே ஆகியோருக்குப் பின்னால் மூன்றாவது பணக்கார ஆப்பிரிக்க-அமெரிக்கர் ஆவார்.
மைக்கேல் ஜோர்டன் விளையாட்டிற்கு இணையான ரசிகர் கூட்டம், பிறருக்குத் தன்னம்பிக்கை அளிக்கும் விதமாக, தன்னுடைய கடந்த காலம் குறித்து அவர் பேசும் பேச்சிற்கும் உண்டு. இதோ அவரது சில தன்னம்பிக்கை மொழிகள்.
* நான் எனது வாழ்க்கையில் மீண்டும் மீண்டும் தோல்வியடைந்தேன், அதனாலேயே நான் வெற்றியடைந்தேன்.
-* நீங்கள் செய்ய விரும்பும் எதையும் செய்வதற்கு, இப்போது ஒன்றும் அதிக தாமதமாகிவிடவில்லை.
-* முயற்சிக்கும்வரை உங்களால் என்ன சாதிக்க முடியும் என்பது உங்களுக்கு ஒருபோதும் தெரியாது.
* எல்லைகள் என்பவை பயத்தைப்போன்றே பெரும்பாலும் ஒரு மாயை.
* எப்போதுமே ஒரு எதிர்மறையான சூழலை நேர்மறையான சூழலாக மாற்றிவிடுங்கள்.
* நீங்கள் மற்றவர்களின் எதிர்பார்ப்புகளை ஏற்றுக்கொண்டால், அதன் பின்விளைவுகளை உங்களால் ஒருபோதும் மாற்றமுடியாது.
* உங்களது வேலையில் நீங்கள் செயல்பட்டால், முடிவுகள் வரும் என்பதை எப்போதும் நான் நம்பினேன்.
* செயலிலிருந்து ஒருமுறை வெளியேறிவிட்டால், அது பழக்கமாகிவிடும். ஒருபோதும் பின்வாங்காதீர்கள்.
* வெற்றிபெற கற்றுக்கொள்ள வேண்டுமானால், நீங்கள் முதலில் தோல்வியடைய கற்றுக்கொள்ள வேண்டும்.
.