க்யூட் குட்டி கதை
மிகவும் சாதாரண மனிதராக பிறந்துவிட்டால் அப்படியேதான் வாழவேண்டும், வெற்றி பெறுவதற்கும் முன்னேறுவதற்கும் வாய்ப்பு கிடைக்காது என்பதுதான் பலரது அழுத்தமான நம்பிக்கை. இந்த மூடநம்பிக்கைதான் வெற்றிக்கான தடைக்கல்லாக இருக்கிறது. ஏனென்றால் வெற்றி பெற முடியாது என்ற சிந்தனை எழுந்துவிட்டாலே, அங்கே முயற்சிக்கும் முன்னேற்றத்திற்கும் வேலை இருக்காது. தெளிவான சிந்தனையும் திட்டமிட்ட உழைப்பும் இருந்தால் வெற்றி நிச்சயம் தேடிவரும் என்பதற்கு ஏராளமான மனிதர்கள் சாட்சியாக இருக்கிறார்கள். அப்படியொரு மனிதரை சந்திக்கும்முன்பு ஒரு குட்டிக் கதை.
கடுமையாக உழைத்து முன்னேறிய செல்வந்தர் தன்னுடைய இறுதிக் காலத்தில் இருந்தார். இதுவரை வாழ்க்கையை சொகுசாக அனுபவித்துவந்த அவரது மகன், தந்தையின் உடல்நிலை குறித்து மிகவும் வருத்தமடைந்தான். எனக்கு வியாபார நுணுக்கம் எதையுமே நீங்கள் கற்றுத்தரவில்லை, நானும் உங்களைப் போன்று வாழ்க்கையில் வளர்ச்சி அடையவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதனால் எப்படி பணம் சம்பாதிப்பது, இந்த சொத்துக்களை பாதுகாப்பது என்று சொல்லிக்கொடுங்கள் என்று கேட்டான்.
மகனை அருகே அழைத்த தந்தை, உனக்கு நான் நிறைய சொல்லித்தரப் போவதில்லை. நான் சொல்லும் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் உன் வாழ்க்கையில் தீவிரமாக கடைப்பிடித்தால் நிச்சயம் வளர்ச்சி கிடைக்கும் என்று சொன்னார். அதாவது நம்முடைய வியாபார மண்டிக்கும், விளை நிலங்களுக்கும் போகும்போதும் வரும்போதும் உன் மீது வெயில் படாமல் பார்த்துக்கொள் என்று சொன்னார். அது ஏன், என்ன காரணம் என்று விளக்கம் கேட்கும்முன் செல்வந்தர் மரணம் அடைந்துவிட்டார்.
தந்தையின் வாக்கை வேதவாக்காக கடைபிடித்தான் மகன். வயலுக்கு செல்வதற்கு பெரிய குடையுடன் கிளம்புவான், உடலில் எங்காவது வெயில் பட்டுவிட்டால் உடனே திரும்பிவிடுவான். அடிக்கடி உடலில் வெயில் படுவதும், அதனால் திரும்பிவருவதும் வாடிக்கையாகிப் போனது. நிலத்திற்கும் கடைக்கும். தினமும் செல்லமுடியாத காரணத்தால் அவனது வியாபாரமும் செல்வமும் குறையத் தொடங்கியது. என்ன செய்வது என்று புரியாமல் விழித்தான் மகன். இந்த நேரத்தில் தேசாந்திரம் போயிருந்த தந்தையின் நண்பர் ஒருவர் ஊருக்குத் திரும்பினார். அவரிடம் தந்தையின் வாக்கு குறித்து சொன்ன மகன், அவர் சொன்னதை பின்பற்றித்தான் நடக்கிறேன், ஆனாலும் எனக்கு ஏற்றம் கிடைக்கவில்லை, தொடர்ந்து தோல்விதான் கிடைக்கிறது என்று வருத்தப்பட்டான்.
தந்தை என்ன சொன்னார் என்றும் அதை மகன் எப்படி நடைமுறைப் படுத்துகிறான் என்றும் கேட்டவர் சிரித்தேவிட்டார். உன்னுடைய தந்தை என்ன சொன்னார் என்பதை முதலில் தெளிவாக புரிந்துகொள். உன் மீது வெயில் விழக்கூடாது என்றால், தினமும் அதிகாலையில் சூரியன் வருவதற்கு முன்னர் எழுந்து வேலைக்குப் போய்விட வேண்டும் என்று அர்த்தம்.
அதேபோல் சூரியன் மறையும் வரையிலும் நீ வேலை செய்துவிட்டு இருட்டியபிறகுதான் திரும்பிவர வேண்டும் என்று பொருள். அவர் உழைக்கச் சொன்னதை சரியாக புரிந்துகொள்ளாமல் தந்தை மீது குறை சொல்லாதே என்று புரியவைத்தார். அப்போதுதான் மகனுக்கு அப்பாவின் அறிவுரை உரைத்தது. அதன்பிறகு தினமும் அதிகாலை முதல் இரவு வரை கவனமாக வேலை பார்க்கத் தொடங்கினான். செல்வமும் குவியவே, அப்பாவை போலவே மகனும் வளர்ச்சி அடைந்தான்.
இந்தக் கதையில் வரும் மகனைப் போன்றுதான் பலர் தங்கள் இஷ்டத்துக்கு வேலை செய்கிறார்கள். தாங்கள் செய்வதுதான் சரி என்றும் நினைக்கிறார்கள். கடுமையாக உழைப்பது மட்டுமே வெற்றிக்கு வழி. சொந்தத்தொழில் என்றில்லை, சம்பளத்துக்கு வேலை செய்தாலும் கடுமையாக உழைப்பவருக்கு வெற்றியும் புரமோஷனும் நிச்சயம்.
உழைத்துப் பாருங்கள், உண்மையை அறியலாம்.