தேவையான சீர்திருத்தங்கள்
கிண்டி மருத்துவமனை டாக்டர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் நாடு முழுக்க அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இது தொடரக்கூடாது என்றால் ஸ்டாலின் அரசு உடனடியாக இந்த காரியத்தை செய்ய வேண்டும் என்று பட்டியல் போட்டிருக்கிறார் விடுதலைச் சிறுத்தைகளின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு.
அவரது அறிக்கையில், ‘’மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளாக வருபவர்கள் யார்?அன்னாடம் காய்ச்சிகள் தான் வருகிறார்கள். எப்படியாவது நோயிலிருந்து விடுதலையாகலாம் எனும் உந்துதலில் தான் அரசு மருத்துவமனைக்கு வருகிறார்கள். அப்படி அவலத்தோடு வருகிற நோயாளிகளை வாஞ்சையோடும் ஆறுதலோடும் பேசுகிற மருத்துவர்கள் எத்தனை பேர் என எண்ணி விடலாம்.
“அதோ போறாரே தங்கமான டாக்டர்” என ஓரிருவரை சொல்லி விடலாம். நாட்டிலேயே மிகப்பெரிய மருத்துவக் கல்வி கட்டமைப்பை கொண்டது தமிழ்நாட்டில் தான் 11,500 MBBS இடங்கள், 4,453 MD இடங்கள், 676 DM இடங்கள் மற்றும் செவிலியர் படிப்பில் 7,075 இடங்கள் உள்ளன. அதேபோன்று மருத்துவ சிகிச்சை கட்டமைப்பிலும் 36 மருத்துவக் கல்லூரி மருத்துவமனிகள், 26 உயர் சிறப்பு & 2 பன்முக உயர் சிறப்பு மருத்துவமனைகள் என மொத்தம் 65,046 படுக்கை வசதிகள் உள்ளன.
பதிவு செய்யப்பட்ட மருத்துவர்கள் 1,49,399 பேருடன் தமிழ்நாடு இரண்டாமிடத்தில் உள்ளது. வளர்ந்த நாடுகளுக்கு இணையாக 1,495 என மருத்துவர் – மக்கள் தொகை விகிதம் அமைந்துள்ளது. இவை அனைத்தும் 50 ஆண்டுகால திராவிட அரசியலின் தொடர் நடவடிக்கைகளால் விளைந்தவை. இந்தியாவின் மற்ற பகுதிகளில் இன்றளவும் நிலவும் சனாதன பழமைவாத சிந்தனைகளை புறந்தள்ளி, நடைமுறை வாழ்வில் அறிவியல் மனப்பான்மையை கையாண்டதால் தான் தமிழ்நாடு இன்று தனித்து உயர்ந்து நிற்கிறது.
இந்த பின்னணியில் சமீபத்தில் நாம் எதிர்கொள்ளும் செய்திகள், எளிய மக்களுக்கு அரணாக விளங்கும் மருத்துவக் கட்டமைப்பு குறித்து அவரக்ளுக்கு எதிர்மறையான எண்ணம் ஏற்பட்டுள்ளது போல காட்டப்படுகிறது. கடந்த வாரம் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், அரசு மருத்துவர்களுக்கான பணியிடங்களில் 30% இடங்கள் காலியாக இருப்பதாகவும், அக்டோபர் மாதத்தில் 18,000 பணியிடங்களில் 5,000இடங்கள் காலியாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர். இது மட்டுமல்லாமல், ஆரம்ப சுகாதர நிலையங்களில் 40%இடங்கள், துணை சுகாதார இடங்களில் 33% இடங்கள், மகப்பேறு மருத்துவமனைகளில் 250 இடங்கள், மருத்துவ கல்லூரிகளில் 2500 இடங்கள் காலியாக உள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் 2000 மகப்பேறு மருத்துவர்கள் தேவைப்படும் சூழலில் வெறும் 850 பேர் மட்டுமே உள்ளதாக மருத்துவர்கள் சங்கம் சொல்கிறது.
இதற்கு பதிலளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் காலிப்பணியிடங்களை நிரப்பிட தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக விளக்கம் அளித்துள்ளார். எதார்த்த நிலை இவ்வாறிருக்க, தற்போதுள்ள மருத்துவ கட்டமைப்பால் நோயாளிகளுக்கு முழு கவனத்தை செலுத்த இயலுமா என்ற கேள்வி எழுகிறது. ஏற்கனவே மருத்துவர்கள் 24 மணிநேர ஷிப்டுகளில் வாரம் 2-3 முறை வேலை செய்வதாக புலம்புகின்றனர். தாங்க முடியாத சுமையை அவர்கள் மீது சுமத்தினால், நோய் தடுப்பு – சிகிச்சை நடைமுறைகளில் சிக்கல் ஏற்படுவதும், அதனால் மருத்துவர் – நோயாளி இடையே முரண்களும், மோதல்களும் நடப்பதும் இயல்பு தானே? விக்னேஷ் போன்ற இளைஞர்கள் இப்படியான முடிவை எடுத்ததற்கு அவன் மட்டுமே காரணமா? அல்லது நான் மேலே பட்டியலிட்ட விடயஙக்ளும் காரணமாக அமைந்ததா?
மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களின் கோரிக்கைகளை அரசு உடனே நடைமுறைப்படுத்த வேண்டும். மருந்தாளுநர்கள் , செவிலியர்கள், லேப் டெக்னீசியன்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பெரும்பாலான பணிகளுக்கு குறைந்த தொகுப்பு ஊதியத்தில் இருப்பவர்களை நிரந்தர பணியாளர்களாக அங்கீகரிக்க வேண்டும். இனி நீட் போன்ற தேர்வுகளும் இன்னும் மோசமான விளைவுகளை உண்டாக்க போகிறது. 50 ஆண்டுகால தொடர் பணிகளால் மருத்துவ கட்டமைப்பில் விளைந்த பலன்களை தக்க வைப்பது மிகவும் அவசியம்’’ என்றார்.
நியாயாமான கோரிக்கை. அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.