என்ன செய்தார் சைதை துரைசாமி – 141
பொதுவாக 70 சதவீத தொற்று நோய்கள் தண்ணீரின் மூலமே பரவுகின்றன. இதில் குழந்தைகளே மிக எளிதில் பாதிக்கப்படுகிறார்கள். ஜலதோஷம், டைபாய்டு, வைரஸ் காய்ச்சல், காலரா, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் பரவுவதற்கு தண்ணீரே காரணமாக இருக்கிறது. உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை செலுத்துபவர் என்பதால் சைதை துரைசாமிக்கு தண்ணீரின் முக்கியத்துவமும் மகத்துவமும் நன்றாகத் தெரியும்.
இந்த நிலையில், மேயர் பதவி ஏற்றுக்கொண்ட சைதை துரைசமி மாநகராட்சிப் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட நேரத்தில், பள்ளிகளில் போதிய குடிநீர் வசதி இல்லை என்பதை அறிந்து ரொம்பவே வருத்தப்பட்டார். தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கையோடு வாட்டர் பாட்டில் கொண்டுவந்துவிடுகிறார்கள். ஆனால், மாநகராட்சிப் பள்ளி மாணவர்களும் பெற்றோரும் அத்தகைய விழிப்புணர்வுடன் இருப்பதில்லை.
எனவே, மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்குவதற்கு விரும்பினார். இதற்காக ஆகாஷ் கங்கா என்ற தனியார் நிறுவனத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் பலனாக காற்றில் இருந்து தூய்மையான தண்ணீர் வழங்கும் இயந்திரங்கள் ஆகாஷ் கங்கா நிறுவனம் மூலம் பள்ளிகளில் நிறுவப்பட்டு மாணவர்களுக்கு சுகாதாரமான தண்ணீர் கிடைத்தது. இதனால் தனியார் பள்ளி மாணவர்கள் போன்று வீட்டில் இருந்து வாட்டர் பாட்டில் கொண்டுவரும் அவசியம் மாணவர்களுக்கு ஏற்படவில்லை. அதோடு தங்கள் பள்ளியில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் கிடைப்பது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மிகப்பெரிய மகிழ்ச்சி கொடுத்தது.
மாநகராட்சிப் பள்ளிகளில் குடிநீர் மட்டுமின்றி கழிவறையும் போதிய தண்ணீர் வசதியுடன் இருக்க வேண்டும் என்பதில் சைதை துரைசாமி மிகவும் கவனம் செலுத்தினார். கழிவறை வசதி மற்றும் தண்ணீர் பிரச்னை இருக்கும் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு புரவலர்கள், பொதுநிறுவனங்களின் உதவியை நாடினார். மேயர் சைதை துரைசாமியின் தீவிர முயற்சி மற்றும் வேண்டுகோளை ஏற்று பல தொண்டு நிறுவனங்கள் கழிவறை கட்டிக் கொடுத்தது மட்டுமின்றி பராமரிப்புப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டன. மாநகராட்சிப் பள்ளிகளில் இத்தகைய மாற்றம் நிகழ்ந்ததற்கு மாணவர்கள் மீது சைதை துரைசாமிக்க்கு இருந்த அன்பும் அக்கறையுமே காரணம் எனலாம்.
- நாளை பார்க்கலாம்.