சிரிச்சா குத்தமில்லீங்க
பிரபலங்கள் என்ன பேசினாலும் வைரலாகிவிடும். அதற்குக் காரணம் அவர்களுடைய சமயோசித புத்தியும் புத்திசாலித்தனமமும் தான். இதோ நான்கு பிரபலங்கள் வாழ்க்கையில் நடந்த நகைச்சுவை சமாச்சாரம். படிச்சு சிரிச்சுட்டுப் போங்க.
அரசியல் ரகசியம்
இரண்டாம் உலகப்போர் நடந்த நேரத்தில், வின்ஸ்டன் சர்ச்சிலை முட்டாள் என்று சொன்ன ஒருவனை போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்தது. அடுத்த நாள் நாடாளுமன்றத்தில், எதிர்க் கட்சியினர் இதனை ஒரு பிரச்னையாக கொண்டுவந்தார்கள்.
‘’நம் நாட்டில் போலீஸ் ராஜ்ஜியம் நடக்கிறதா? ஜனநாயகம் இல்லையா? முட்டாள் என்று சொன்னதற்காக கைது செய்யலாமா?” என்று கொந்தளித்தனர்.
அமைதியாக பதில் சொல்ல எழுந்தார் சர்ச்சில். ‘’முட்டாள் என்று என்னை சொன்னதற்காக கைது செய்யவில்லை. போர் நடக்கும்போது ராணுவ ரகசியத்தை வெளியே சொல்லக்கூடாது” என்று சொல்ல, அவையில் பலத்த சிரிப்பு.
எங்கேயும் கிடைக்காத ஒன்று
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தன் வீட்டில் பழையச் சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்த நேரம் ஒரு நண்பர் அவரை பார்க்கவந்தார். அவர் அதிர்ச்சியுடன், ’’என்ன… பழையச் சோற்றை சாப்பிடுகிறீர்கள்? உங்கள் தகுதிக்கு பலகாரம் சாப்பிடக் கூடாதா?” என்று மட்டம் தட்டுவதைப் போல் பேசினார். உடனே கலைவாணர், ”நண்பரே… சிறிதுநேரம் இப்படி உட்காருங்கள்” என்று சொல்லிவிட்டு, தன் வேலையாளை அழைத்தார்.
அவரிடம், ”உடனே போய் ஏதாவது ஹோட்டலில் பழையச் சோறு வாங்கி வா” என்று கட்டளையிட்டார். சிறிது நேரத்தில் ஹோட்டலுக்குச் சென்று திரும்பிவந்த வேலைக்காரர்… கலைவாணரிடம், ”ஐயா… எந்த ஹோட்டலிலும் பழைய சோறு கிடைக்கவில்லை. மாறாக, இட்லி, தோசை மற்றும் பொங்கல் போன்ற உணவுகளே உள்ளன” என்று சொன்னார்.
இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த தன் நண்பரிடம் திரும்பிய கலைவாணர், ”இப்போதாவது புரிகிறதா? புதிய உணவெல்லாம் கிடைக்கும். ஆனால், பழையச் சோறு கிடைக்காது, அதை வீட்டில்தான் சாப்பிட முடியும்” என்று சொன்னதுடன் வந்தவர், வாயடைத்துப்போனார்.
கண்டுபிடிப்புக்குத் தண்டனை
பிரபல அறிவியல் விஞ்ஞானியான தாமஸ் ஆல்வா எடிசன் பெரிய விஞ்ஞானி என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், ஒரு கண்டுபிடிப்புக்காக அவர் ஆரம்ப காலத்தில் வேலையில் இருந்து விரட்டப்பட்டவர் என்பது தெரியுமா? ஆம், ஆரம்ப காலத்தில் அவர் வேலை செய்த நிறுவனம் மிகவும் பழைமையானது. அதனால் அந்த நிறுவனத்தில் எலிகள் காணப்பட்டன. அவற்றின் அட்டகாசத்தைக் பொறுக்கமுடியாத எடிசன், அவைகளைக் கொல்வதற்கு புதிய சாதனம் ஒன்றைக் கண்டுபிடித்தார். அதன்மூலம் எலிகள் அனைத்தும், அலுவலகம் முழுவதும் செத்துக்கிடந்தன. அதைக் கண்டு அதிர்ந்த நிறுவனம், எடிசனை வேலையிலிருந்து நீக்கிவிட்டனர். எலிகளை அப்புறப்படுத்துவதற்குப் பதிலாக எடிசனை வேலையில் இருந்து அப்புறப்படுத்தியது எப்பேர்ப்பட்ட மடத்தனம்?
பெயர் மட்டும் எழுதலாமா?
ஒருமுறை ஆபிரகாம்லிங்கனைக் காண ஒருவர் வந்திருந்தார். அந்த நேரம் பார்த்து, லிங்கன் அவசர வேலையாக வெளியில் சென்றுவிட்டார். கொஞ்சம் நேரம் காத்திருந்த அந்த நபர், வெறுத்துப்போய், லிங்கன் வீட்டு வாசலில் ‘கழுதை’ என்று எழுதிவிட்டுச் சென்றுவிட்டார். பின்னர் வீடு திரும்பிய லிங்கன், வந்தவர் யார் என்பதை அங்கு எழுதப்பட்டிருந்த வாசகத்தை வைத்தே கண்டுகொண்டார்.
பின்னர், மறுநாள் அந்த நபரை லிங்கன் சந்தித்து, “நேற்று நீங்கள் என் வீட்டுக்கு வந்திருந்தீர்கள் போலிருக்கிறது. உங்கள் பெயரை எழுதிவிட்டுப் போயிருக்கிறீர்கள். அதனால் யார் வந்தது என்பதை அறிய மிகவும் வசதியாக இருந்தது” என்று சொல்ல, நொந்தே போனார் அந்த நபர்.