மருத்துவப் புதுமை
நீண்ட நாள் வாழவேண்டும் என்ற ஆசை எல்லா மனிதருக்கும் உண்டு. ஆனால், 90 வயதிலேயே நடக்க முடியாமல் உடல் தள்ளாடத் தொடங்குகிறது. இந்த உடல் பலவீனக் குறையைத் தீர்ப்பதற்கு புதிய வழி காட்டியுள்ளன, சுறா மீன்கள்.
உலகின் மிக நீண்ட ஆயுள் கொண்ட கிரீன்லாந்து சுறாக்களின் சராசரி ஆயுட்காலம் 250 ஆண்டுகள். ஆனாலும் அவை 500 ஆண்டுகள் வரை சுறுசுறுப்பாகவே வாழ்கின்றன. சுறாக்களின் நீண்ட ஆயுளுக்கான ரகசியம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின் முடிவு செக் குடியரசின் தலைநகர் பிராகாவில் நடைபெற்ற உயிரியல் மாநாட்டில் வெளியிடப்பட்டுள்ளது.
கிரீன்லாந்தில் பிடிபட்ட 23 கிரீன்லாந்து சுறாக்களின் தசைகளிலிருந்து திசு மாதிரிகளை எடுத்து அவற்றின் வளர்சிதை மாற்றத்தை ஆய்வாளர்கள் அளவிவிட்டனர். சுறாக்களின் வளர்ச்சிதை மாற்ற என்சைம்களின் செயல்பாட்டை ஒப்பிடும்போது, வெவ்வேறு வயதுகளுக்கு இடையே எந்த மாற்றமும் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
பொதுவாக விலங்குகள் வயதாக வயதாக என்சைம்களின் செயல்பாடு குறைவடையும். ஆனால், 4 வயது சுறாவுக்கும், 400 வயது சுறாவுக்கும் என்சைம்கள் ஒன்று போல இருப்பது ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. வளர்சிதை மாற்றம் சிதைந்து போகாததே நீண்ட ஆயுளுக்கு முக்கிய காரணம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.
இந்த ஆய்வின் மூலம் மனிதர்களின் ஆயுளை நீட்டிப்பதற்கும் என்சைம்களின் செயல்பாடுகளை மாற்றி அமைக்க முடியும் என்று நம்புகிறார்கள். இந்த ஆய்வு தீவிரமடையும் பட்சத்தில் இன்னும் 20 ஆண்டுகளில் மனிதர்கள் 125 ஆண்டுகள் சுறுசுறுப்புடன் வாழ்வதற்கு வழியைக் கண்டறிய முடியும் என்கிறார்கள்.