ஆனந்த விடியல் அவசியம்
பாவம், புண்ணியம் என்பதெல்லாம் கட்டுக்கதைகள் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதேநேரம், மனிதன் இன்னொரு மனிதனுக்குச் செய்யும் மாபெரும் பாதகம் என்ன தெரியுமா..?
தூக்கத்தில் இருப்பவரை எழுப்புவது.
ஆம், எத்தனை கவலைகள், துயரங்கள் இருந்தாலும் அவற்றை சில மணி நேரங்களாவது மறக்கடிக்கும் சக்தி தூக்கத்திற்கு மட்டுமே உண்டு. தூக்கத்தில் இருந்து எழும் நேரங்களில் உடலும் உள்ளமும் புத்துணர்ச்சியுடன் திகழ்வதை எல்லோருமே அனுபவிக்க முடியும். எனவே, அத்தகைய அற்புதமான சுகத்தில் திளைப்பவரை… தூக்கத்தில் இருந்து எழுப்புவது ஒருபோதும் சரியில்லை.
அதுசரி, பள்ளிக்கூட நாட்களில் அயர்ந்து உறங்கும் பிள்ளையை எப்படித்தான் எழுப்புவது..?
பிள்ளைகள் வாழ்வில் படிப்பு என்பதும் முக்கியம். எனவே, தூங்கும் குழந்தையை எழுப்பத்தான் வேண்டும். அதேநேரம், முடிந்தவரை குழந்தை தானாகவே விழிக்கும் வகையில் பெற்றோர் நடந்துகொள்ள வேண்டும்.
இதன் அர்த்தம் என்னவென்றால், குழந்தைகள் தூங்குவதற்குப் போதுமான நேரத்தைக் கொடுக்க வேண்டும். பள்ளி செல்லும் குழந்தைகளின் வயதைப் பொறுத்து குறைந்தது 8 மணி நேரத்தில் இருந்து 10 மணி நேரம் வரையிலும் தூங்குவதற்கு அனுமதிக்கலாம்.
அவர்கள் தூங்கும் நேரமே அவர்கள் எழும் நேரத்தை தீர்மானிக்கிறது. எனவே, எந்த நேரத்தில் குழந்தை தூங்கவேண்டும் என்பதை முன்கூட்டியே தீர்மானித்து, அந்த நேரத்தில் தூங்கச் செய்ய வேண்டும்.
நள்ளிரவு வரை பெற்றோருடன் சேர்ந்து குழந்தையும் விழித்திருந்து தொலைக்காட்சியில் படம் பார்த்துக்கொண்டிருந்தால், பகலில் கண் விழிப்பது நரக வேதனையாகத் தெரியும். ஆகவே, இரவு 10 மணிக்குக் குழந்தையை தூங்குவதற்குப் பழக்கப்படுத்துங்கள்.
சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமை மட்டும் லேட்டாக தூங்கலாம் என்பது சரியான அணுகுமுறை அல்ல. அன்றைய தினம் பகலில் எத்தனை ஜாலியாக இருக்கவேண்டுமோ, அப்படியிருக்கலாம். படுக்கை நேரம் என்பது எப்போதும் ஒன்றாகவே இருக்கட்டும். ஒரு நாள் லேட்டாகத் தூங்கி லேட்டாக எழுவது, அடுத்தடுத்த நாட்களில் பாதிப்பை உருவாக்கும்.
குழந்தை அளவுக்கு பெற்றோர் அதிக நேரம் தூங்கவேண்டியதில்லை என்றாலும், தினமும் குழந்தைக்கு முன்னதாகவே எழவேண்டியது அவசியம். பெற்றோர் அவசரகதியில் எழுந்து, குழந்தைகளையும் அதே வேகத்தில் எழுப்புது காலை நேரத்தை கவலை நேரமாக மாற்றிவிடும்.
குறிப்பிட்ட நேரம் தாண்டியும் குழந்தை தூங்கிக்கொண்டு இருக்கிறதா..? முதலில் ஜன்னல், கதவுகளைத் திறந்துவைத்து அறைக்கு வெளிச்சமூட்டுங்கள். மெல்லிய சத்தத்தில் இசையை ஓட விடுங்கள். இதற்குப் பின்னரும் பிள்ளை எழவில்லை என்றால், மென்மையாக உடலில் மசாஜ் செய்வது போன்று அழுத்தம் கொடுங்கள். அதோடு, குழந்தையிடம் மெல்லிய குரலில் மகிழ்ச்சியாகப் பேசுங்கள்.
எந்த காரணம் கொண்டும், ‘நேரமாச்சு சனியனே… சீக்கிரம் எழுந்திரு.. ஸ்கூலுக்கு நேரமாச்சு’ என்று குழந்தையின் காலை நேரத்தை டென்ஷனாக்கிவிடாதீர்கள். இப்படி எழும் குழந்தைகள் சரியாக சாப்பிடாமல், தூங்கி விழுந்தபடி பள்ளிக்குச் செல்வதால், நிச்சயம் படிப்பில் கவனம் செலுத்த முடியாது. எனவே, காலை நேரம் என்பது திருப்பள்ளி எழுச்சி போன்று குழந்தைக்கு மட்டுமல்ல, பெற்றோருக்கும் நல்ல அனுபவமாக இருத்தல் அவசியம்.
காலையில் எழும்போதே குழந்தைக்கும் பெற்றோருக்கும் டென்ஷன் ஏற்படும் பட்சத்தில், அன்றைய தினம் முழுவதுமே சிக்கலாகவே கழிவும். ஆகவே, காலை நேரத்தை ஆனந்தமாகத் தொடங்குங்கள். அதுவே, மகிழ்ச்சிக்கு அடிப்படை.