ஆசிரியர் சிந்தனை
எதையாவது சிந்தித்துக்கொண்டே இருப்பது மனிதரின் இயல்பாக மாறிவிட்டது. சிந்திப்பதால் மட்டும் எதுவும் மாறிவிடப் போவதில்லை என்பது தெரிந்தும் சிந்திக்கிறார்கள். அதீத சிந்தனையே பல்வேறு குழப்பமான முடிவுகள் எடுப்பதற்கும், உடல் நிலை பாதிப்புக்கும் காரணமாக இருக்கிறது என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதற்காக சிந்திக்காமல் இருக்க முடியுமா..? அதற்கு சாத்தியம் இல்லை. ஆனால், கொஞ்சம் குறைவாக சிந்திக்கலாம், அதேபோல் நல்ல விஷயங்களை மட்டும் சிந்திக்கலாம்.
மூளையே நினைவுகள், எண்ணங்கள், உணர்வுகள், செயல்கள் ஆகியவற்றுக்கு மூல காரணமாக இருக்கிறது. மூளை ஒரு போதும் ஓய்வு எடுப்பதில்லை. விழித்திருக்கும்போதும், உறங்கும்போதும் சுவாசம், இருதயத்துடிப்பு, ஹார்மோன் சுரப்பு, நினைவுகள் மற்றும் கனவுகள் போன்ற அனைத்தையும் கட்டுப்படுத்துகிறது. இத்தகைய மூளைக்கு எதிர்காலம் குறித்த பல்வேறு சிந்தனைகள் கடும் இடையூறாக உள்ளன. எனவே, மூளைக்கு ஓய்வு கொடுக்க வேண்டியது அவசியம்.
பொதுவாக மூளைக்கு தூக்கத்தில் மட்டுமே கொஞ்சம் தளர்வு கிடைக்கிறது. தூங்கும் நேரத்தில் தான் உடலின் கழிவுப்பொருட்கள் நீக்கப்படுகின்றன. தூங்கும் நேரத்தில் தான் உடலின் செல்கள் புனரமைக்கப்படுகின்றன. ஆகவே, ஒவ்வொரு நபரும் தினமும் 7 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டியது அவசியம். இந்த நேரம் குறையும்போது மூளை அதிகம் உழைக்க வேண்டிய அவசியம் ஏற்படும். அதனாலே பதட்டம், சிந்தனைத் திறன் குறைவு, எதிர்கால அச்சம் போன்றவை தோன்றுகின்றன.
மனசுக்குப் பிடித்த செயலை செய்யும்போதும் பாசிடிவாக சிந்திக்கும் நேரத்திலும் மூளை நிதானத்துக்கு வருகிறது. பிடித்த இசை, இயற்கை ரசனை, ஓவியம், புத்தகம் போன்று ஏதேனும் ஒன்றில் மனம் லயித்து ஈடுபடும்போது நிறைய சிந்தனைகள், குழப்பங்கள் ஏற்படுவதில்லை. இது, மூளைக்குக் கொடுக்கும் ரெஸ்ட்.
இந்த ஓய்வு உடலுக்கு சுறுசுறுப்பும், மகிழ்ச்சியும் கொடுக்கிறது. அதிக சிந்தனையே இதய பிரச்னைகளுக்கு அஸ்திவாரம் போடுகிறது. எனவே, மூளைக்குக் கொஞ்சம் ஓய்வு கொடுங்கள். அதுவே, ஆரோக்கியத்திற்கான வழி.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்