துன்பத்தில் இருந்து விடுதலை பெறுவது எப்படி..?

Image

புத்தரின் குட்டி ஸ்டோரி

எல்லா மனிதர்களுக்கும் ஏதேனும் துன்பம் வந்துகொண்டே இருக்கின்றன. நஷ்டம், நோய், இழப்பு, தோல்வி என்பதுடன் மரணம் நிறைய பேரை பயமுறுத்துகிறது. நெருங்கியவர்களின் மரணம் என்பதைவிட, பெற்ற பிள்ளையின் மரணம் மிகவும் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற தருணங்களில் மனதை வலிமையாக்குவது எப்படி..?

இந்த பெண்ணின் கதையைக் கேளுங்கள்.

கணவனையும், தன்னுடைய இரண்டு மகன்களையும் நோய்க்கு பறிகொடுத்த பரிதாபப் பெண் அவள். எனவே, எஞ்சியிருந்த ஒரே ஒரு மகனிடம் தன்னுடைய பாசத்தை எல்லாம் கொட்டினாள். இரவும் பகலும் தன்னுடைய உயிரைப் போன்று பாதுகாத்தாள். ஆனால், அந்த மகனுக்கும் நோய் வந்தது. அவள் கண் முன்னேயே துடித்துடித்து இறந்துவிட்டான்.

வானமே இடிந்து தலையில் விழுந்தது போல் உணர்ந்தாள். இறந்த மகனின் உடலை கட்டிப்பிடித்த அழுது துடித்த நேரத்தில், புத்தர் அவளுடைய கிராமத்துக்கு வந்திருப்பதாக அறிந்தாள். உடனே, அந்த குழந்தையின் உடலைத் தூக்கி தோளில் போட்டுக்கொண்டு ஓடினாள்.

புத்தரைக் கண்டதும் அவர் கண் முன்னே பிள்ளையின் உடலை கிடத்திவிட்டு, அவருடைய பாதங்களை கட்டியாகப் பிடித்துக்கொண்டாள். ‘’புத்தரே… என் குழந்தைக்கு உயிர் தாருங்கள்… உங்களால் நிச்சயம் முடியும். நீங்கள் உயிர் தருவதாகச் சொல்லும் வரை நான் உங்கள் கால்களை விட மாட்டேன்… எனக்கு வாக்கு கொடுங்கள்…’’ என்று கெஞ்சினாள்.

ஒரு தாயால் வேறு என்னதான் செய்ய முடியும். புத்தராலும் வேறு என்ன செய்துவிட முடியும்..?

‘’உயிர் தருகிறேன் தாயே… முதலில் எழுந்து நில்லுங்கள்… எனக்கு கொஞ்சம் உப்பு மட்டும் அக்கம்பக்கத்து வீட்டில் இருந்து வாங்கிக்கொண்டு சீக்கிரம் வாருங்கள். ஆனால், அந்த வீட்டில் இதுவரை ஒரு மரணம் கூட நிகழ்ந்திருக்கக்கூடாது…’’ என்று மட்டும் நிபந்தனை விதித்தார்.

புத்தர் சொன்னதைக் கேட்டதும், அந்த தாய்க்கு மிகப்பெரும் நிம்மதி. தன்னுடைய பிள்ளைக்கு உயிர் வரப்போகிறது என்ற நம்பிக்கையுடன் உடனே ஊருக்குள் ஓடிப்போனாள். ஒவ்வொரு வீடாகச் சென்று உப்பு கேட்டாள்.

எல்லோருடைய வீட்டிலும் மரணம் நிகழ்ந்திருப்பதைக் கண்டாள். அனைத்து மனிதர்களும் மரணங்களைக் கடந்தே வாழ்ந்துவருவதை அறிந்துகொண்டாள். ஐம்பதுக்கும் மேற்பட்ட வீடுகளின் கதவை தட்டிய பிறகே, அவளுக்கு புரியவந்தது. இனி, எத்தனை வீட்டுக்குப் போனாலும், கிடைக்கப் போகும் பதில் ஒன்றே ஒன்று. அது, மரணம் தவிர்க்க இயலாதது.

எனவே, உண்மையை அறிந்துகொண்டு மீண்டும் புத்தர் காலடியில் சரண் அடைந்தாள். இப்போது அவள் விழிப்பு அடைந்திருந்தாள். புத்தரைப் போலவே அவளும் உண்மையை அறிந்திருந்தாள்.

அந்த குழந்தைக்கு உயிர் தர முடியாது என்பது புத்தருக்கு நன்றாகவே தெரியும். ஆனால், நம்பிக்கையுடன் வந்திருக்கும் பெண்ணிடம், முடியாது என்று சொல்வது அறமில்லை. அந்த பெண்ணுக்கு உண்மை நிலையை புரிய வைக்க வேண்டியது தன் கடமை என்பதாலே, அப்படியொரு நிபந்தனை விதித்தார். அந்த பெண்ணுக்கும் உண்மை புரிந்துபோனது.

ஒவ்வொரு வீட்டிலும் ஏதேனும் ஓர் உறவை இழந்த அனுபவம் சோகமாய் நெஞ்சை அடைத்துக் கொள்ளும். அதையே நினைத்துப் புலம்பாமல் எல்லா உயிர்களையும் சமமாக எண்ணி, அனைத்து உயிர்களிடமும் அன்பு செய்வதுதான் சரியான தீர்வு என்கிறார் புத்தர்.

Leave a Comment