ஹீலியம் பலூன் மேலே பறப்பது எப்படி..?

Image

அசத்தலான ஆறு ஆச்சர்ய தகவல்கள்


மக்களின் நண்பன்   ‘மூங்கில்’!
பச்சைத்தங்கம், ஏழைகளின் மரம், மக்களின் நண்பன்  என அழைக்கப்படும் மூங்கில், புல் வகையை சார்ந்த ஒரு தாவரமாகும். மூங்கில் எஃகைவிட ஆறு மடங்கு வலிமை வாய்ந்தது. அதனால் அதை பயோஸ்டீல் என்றும் அழைப்பர். இதன் அறிவியல் பெயர் பாம்புசியே. இது, உலகில் சுமார் 1400 இனங்களைக் கொண்டுள்ளது. அவற்றில் 136 இனங்கள் இந்தியாவில் உள்ளன. மூங்கில்களில் சில இனங்கள் ஒரே நாளில் சுமார் 30 செ.மீ வரை வளரக்கூடிய தன்மையுடையது. தமிழ்நாடடில் பெருவாரை (பொந்து மூங்கில்) மற்றும் சிறுவாரை (கல் மூங்கில்) என்ற இரண்டு இனங்கள் மட்டுமே உள்ளன. பிற மரங்களைக் காட்டிலும் மூங்கில் மரம் அதிகளவு கரியமில வாயுவை  (47 சதவிகிதம்)எடுத்துக்கொண்டு, அதிக அளவிலான பிராண வாயுவை (35 சதவிகிதம்) வெளியேற்றும் தன்மை கொண்டது. மூங்கில் அதிகமாக வளர்ந்து வருகிற இடம் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும். உலகின் மூங்கில் உற்பத்தியில் சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன.
——————-
மனிதனின் சிரிப்பில் 19 விதம்!
உங்கள் கண்களைப் பிரகாசிக்கச் செய்யும் சிரிப்பு, ஆத்மாவுக்கு புத்துணர்வு தருவதுடன், மூளையையும் தூண்டிவிட்டு, செயல்பட வைக்கும். நம் சிரிப்பால் மூளையில் எழும் தூண்டுதல், இரண்டாயிரம் சாக்லேட் பார் சாப்பிடுவதற்கு சமம் என்கிறது ஓர் ஆய்வு. ஒவ்வொரு முறை சிரிக்கும்போதும், 53 முக்கிய தசைகள் முகத்தில் இயங்குகிறது. ஒருவரின் சிரிப்பை, 300 அடி தூரத்தில் இருந்து உணர முடியும். சிம்பன்சி குரங்குகளுக்கு, மனிதர்கள்போல் சிரிக்கவும், புன்னகை செய்யவும் தெரியும். நாம் சிரிக்கும்போது குறைந்தது 50 சதவிகிதத்தினராவையாது பதிலுக்கு சிரிக்க வைக்க முடியும். மனிதனின் சிரிப்பில் 19 விதம் உண்டு. இவை, சமூகச் சூழல் மற்றும் தனிச் சூழல் என இருவகைப்படும். சமூகச் சூழலில் சிரிக்கும்போது, சில சதைகள் இயங்குகின்றன. அதுவே தனியாகச் சிரிக்கும்போது, நம் முகத்தின் இருபுறமும் உள்ள சதைகள் அனைத்தும் அசைகின்றன. சிரிக்கத் தெரியாதவர்கள், அவர்களை அறியாமலே தன்னைச் சுற்றி வேலி அமைத்துக் கொள்கின்றனர்.  
————–
வேகமாக நீந்தும் மயில் மீன்!
கடலில் எண்ணிலடங்காத மீன் வகைகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் மயில் மீன். ஆங்கிலத்தில் ஸ்வார்ட் ஃபிஷ்  என்று அழைக்கப்படும் இந்த மீனின் விலங்கியல் பெயர் சைபியஸ் கிளாடியஸ். கிளாடியஸ் என்றால் லத்தின் மொழியில் வாள் என்று அர்த்தம். இது சுமார் ஒன்பது அடி நீளம்வரை வளரக்கூடியது. உலகம் முழுதும் உள்ள சற்று வெதுவெதுப்பான கடற்பகுதிகளில் காணப்படும். பசிபிக், அட்லாண்டிக், ஆர்டிக் மற்றும் இந்தியப் பெருங்கடலில் கூட்டம் கூட்டமாகக் காணப்படும். முதுகுப்புறம் விரித்த மயில்தோகை போன்ற அமைப்பு கொண்டிருப்பதால் மயில் மீன் எனத் தமிழில் குறிப்பிடுகிறார்கள். இந்த மீனினத்தில் பல வகைகளுள்ளன. அதிக அளவாக சுமார் 90 கிலோ வரை இறைச்சியையுடையது. எனினும் நீளம் மற்றும் எடையில் பல்வேறு வேறுபாடுகள் கொண்டவையாக உள்ளன. இது கடல் வாழ் உயிரினங்களில் மிக வேகமாக நீந்தக்கூடியது. மணிக்குச் சராசரியாக 100 கி.மீ. வேகத்தில் நீந்தும். . ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் மயில் மீன்களைத் தூண்டில் போட்டு பிடிப்பது மிகப் பிரபலமான பொழுதுபோக்காக உள்ளது.
—————————
காதல்   ‘ரோஜா’!
காதல் மலரான ரோஜா, 1600ம் ஆண்டுவாக்கில் பிரபலமானது. அன்று பயிரிடப்பட்ட சிலவகை ரோஜாக்கள், இன்னும் வியாபார உலகில் உள்ளன. இதில், 150 வகைகள் உள்ளன. இது தவிர, ஆயிரக்கணக்கில் கலப்பு வகைகளும் உள்ளன. ரோஜாவின் வண்ணங்களின் வகையால் கொடுப்பவரின் எண்ணத்தைப் புரிந்துகொள்ளலாம். குறிப்பாக, சிவப்பு ரோஜா காதலின் வெளிப்பாடாக இருக்கிறது. ரோஜாக்களிலேயே மிகப் பெரியதை கிராண்ட் ஃப்ளோரா என அழைப்பர். இதன் தண்டு நீளமாக இருக்கும். இந்தியாவில் மிக அதிக ரோஜா செடிகளைக் கொண்ட இடம், ஊட்டி அரசுப் பூங்கா. இங்கு, 20,000க்கும் அதிகமான ரோஜாக்களைப் பார்க்க முடியும். கறுப்பு ரோஜாவும் இங்கு உண்டு. இது தவிர இந்தியாவில் டெல்லி, சண்டிகர், ஹைதராபாத், முன்னார் உள்ளிட்ட இடங்களிலும் ரோஜா தோட்டங்கள் உள்ளன. சண்டிகரில் உள்ள ரோஜா தோட்டம் 30 ஏக்கரில் அமைந்துள்ளது. குழந்தைகளின் மாமா என்று அழைக்கப்பட்ட நம் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, தன் சட்டையில் எப்போதும் ரோஜா மலரை அணிந்திருப்பார்.
—————-
ஹவாய் பழங்குடிகளின் தெய்வம்!
பொதுவாக காகம் என்றாலே கறுப்பாகத்தான் இருக்கும். ஆனால் ஐரோப்பா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் வசிக்கும் ‘கேரியன் காகம்’ பச்சை, ஊதா கலந்த நிறங்களில் இருக்கும். அதேபோல் நியூசிலாந்து, அயர்லாந்து, பிரிட்டனில் வாழும் ரூக் என்ற இன காக்கையும் ஊதா கலந்த நிறத்தில் இருக்கும்.முதன்முதலாக கிழக்கு ஆசியப் பகுதிகளில்தான் காகங்கள் தோன்றியதாக வரலாறு சொல்கிறது. அங்கிருந்து ஆப்பிரிக்கா, ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற கண்டங்களுக்கு காகங்கள் குடியேறின. சுமார் 40 வகையான காகங்கள் இருக்கின்றன. பொதுவாக அவை மூன்று முதல் ஆறு முட்டைகள் வரை இடும். 17 நாட்களில் குஞ்சு பொரிக்கும். இதன் ஆயுட்காலம் சராசரியாக 20 வருடங்கள். அமெரிக்கக் காடுகளில் வாழும் ஒரு சில இனங்கள் 30 வருடங்கள் வரை வாழ்கின்றன. ஆயிரம் ஆண்டுகளாக ஹவாய் காடுகளில் வாழ்ந்துவந்த ஹவாயன் காகம் 2002ல் அழிந்துவிட்டதாகச் சொல்லப்பட்டது. பிறகு சில இடங்களில் அவை தென்பட்டன. தற்போதைய கணக்கெடுப்பின்படி 114 ஹவாயன் காகங்கள் எஞ்சியிருக்கின்றன. இந்தக் காகத்தை ஹவாயில் வாழும் பழங்குடி மக்கள் தெய்வமாகக் கும்பிடுகின்றனர்.
———————-
மருத்துவத்துறை மன்னன் ‘ஹீலியம்’!
ராட்சத பலூன்களில் பயன்படுத்தப்படும் ஹீலியம் வாயுவை, பிரான்சை சேர்ந்த பியரி ஜான்சன் மற்றும் இங்கிலாந்து வானியலாளர் நார்மன் லாக்யர் ஆகியோர் கண்டறிந்தனர். 1868ல் சூரிய கிரகணத்தின்போது, சூரியக் கதிர்களைப் பகுப்பாய்வு செய்தபோது ஹீலியம் கண்டறியப்பட்டது. சூரியனைக் குறிக்கும் கிரேக்கச் சொல்லான ஹீலியோஸ் என்ற வார்த்தையிலிருந்து உருவாக்கப்பட்டது. காற்றைவிட எடை குறைந்தது ஹீலியம். ஹீலியம் ஒரு லிட்டருக்கு ஒரு கிராம் எடையை மேலே உயர்த்தவல்லது. அதனால் பலூன், விமானங்கள், பாராசூட் போன்றவற்றில் இதைப் பயன்படுத்துகிறார்கள். இது தீப்பற்றாது மற்றும் எதிர்வினை புரியாது. உலகில் ஹைட்ரஜனுக்கு அடுத்தபடியாக மிக அதிகமாகக் காணப்படும் தனிமங்களில் ஒன்று ஹீலியம். பூமியில் 24 சதவீதம் ஹீலியம் வாயு நிரம்பியுள்ளது. ஹீலியத்தைத் திரவமாகவும், திடப்பொருளாகவும் மாற்றி பயன்படுத்தலாம். ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, நுரையீரல் பாதிப்புகள் உள்ளிட்ட சுவாச நோய்களுக்கு ஹீலியம் கலந்த மருந்துக் கலவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படுகிறது. மருத்துவத்துறையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுப்பது உள்பட இன்னும் பல பயன்பாட்டிற்கும் ஹீலியம் பயன்படுத்துகிறார்கள்

Leave a Comment