பணமே மந்திரம்
பணம் இல்லாதவரை யாரும் தேடி வர மாட்டார்கள். பணம் இருப்பவரை தேடி வருபவர்கள் யாரும் அன்புக்காக வருவதில்லை, அவசரத்துக்கு உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையினாலே அன்பாக இருப்பார்கள். தேடித்தேடி வருவார்கள்.
கடன் வேண்டும் விரைவில் திருப்பிக் கொடுக்கிறேன் என்று கேட்டுவரும் நண்பர்களை, உறவினர்களை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் நிறய பேர் மாட்டிக் கொள்கிறார்கள். உறவு முக்கியம் என்று நினைத்தால் பணம் போய்விடும். பணம் முக்கியம் என்று நினைத்தால் உறவு போய்விடும் என்று அஞ்சுவார்கள்.
அப்படியென்றால் எப்படி கடன் கொடுப்பது..?
உங்கள் செலவுகளுக்கு மீறிய பணம் கைவசம் அல்லது வங்கியில் இருக்கிறதா என்பதில்தான் இந்தக் கேள்விக்கான முதல் பதில் உள்ளது. உங்களிடம் போதிய பணம் இல்லாத பட்சத்தில், யாருக்கும் எந்த காரணம் கொண்டும் கடன் தர வேண்டியதில்லை. இல்லை என்று உறுதியுடன் சொல்லுங்கள்.
’வேறு எங்காவது கடன் வாங்கி, கடன் கொடுங்கள், நான் கட்டிக்கொள்கிறேன்”, ‘ஜாமீன் கையெழுத்து மட்டும் போடுங்கள்” என்று வீசும் வலைகளில் ஒருபோதும் சிக்கிவிடாதீர்கள்.
அதேபோன்று உறவினர் என்ன காரணத்திற்காக கடன் கேட்கிறார் என்பது அடுத்த கேள்வி. கல்விக்கு, திருமணத்துக்கு, மருத்துவமனைக்கு போன்ற அத்தியாவசிய செலவு என்றால் கொடுக்கலாம். வியாபாரத்தை விருத்தி செய்யப்போகிறேன், கார் வாங்கப் போகிறோம், டூர் போகிறோம் என்பது போன்ற வெட்டிச் செலவு என்றால் இல்லை என்று உறுதியாகச் சொல்லிவிடலாம்.
அடுத்ததாக, கடன் கொடுத்தால் வசூல் செய்ய முடியுமா என்பதைப் பார்க்க வேண்டும். அவரால் எப்போதும் கடனை திருப்பித்தர முடியாது, அதே நேரம் நல்ல உறவினர் என்றால், உங்களால் முடிந்த சிறு தொகையை கொடுத்துவிட்டு ஒதுங்கிவிடலாம். அது, வந்தால் லாபம், வரவில்லை என்றால் உறவுக்கு செய்த உதவி என்று நிம்மதி அடையலாம்.
நிச்சயம் பணத்தை திருப்பிக் கொடுப்பார், நாணயஸ்தர் என்று தெரிந்தால் மட்டும் கடன் கொடுக்கலாம். அதேநேரம், எப்போது திரும்பக் கொடுப்பார் என்று கேட்டு, சரியாக அந்த நேரத்தில் திருப்பிக் கேட்பதற்கு தயங்கக் கூடாது. கேளாத பணம் வீடு வந்து சேராது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
ஏனென்றால் நீங்கள் கொடுப்பது பணம் மட்டுமல்ல, உங்கள் நம்பிக்கையையும். அதனால், கடன் என்றால் நேரத்துக்கு ஏற்ப முடிவெடுக்க வேண்டுமே தவிர, எல்லா நேரமும் இல்லை என்றும் சொல்ல வேண்டாம், இருக்கிறது என்பதற்காக கொடுக்கவும் வேண்டாம்.
இதே விதி உங்களுக்கும் பொருந்தும். ஆம், அவசரத் தேவை ஏற்படும்போது உங்களிடம் இருக்கும் நகை, சேமிப்பு போன்றவற்றையே பயன்படுத்துங்கள். எதற்காகவும் உறவினர்களை தொந்தரவு செய்ய வேண்டாம். அதன்பிறகு பணமும் கிடைக்காது, உறவும் இருக்காது.
