ஞானகுரு பதில்கள்
கேள்வி : என்னிடம் குறைவாகவே இருக்கிறது. இந்த நிலையில் இருப்பதை வைத்துக்கொண்டு நிம்மதியாக வாழ முடியுமா..?
- பி.சாம்ராஜ், மேகமலை.
ஞானகுரு :
குறைவு, அதிகம் என்பதெல்லாம் அவரவர் மனநிலையில் இருக்கிறது. உங்களால் விரும்பியதை சாப்பிட முடியாமல் இருக்கலாம். ஆனால், ஒரு நேரம் கூட சாப்பாடு கிடைக்காத மனிதர்கள் இருக்கிறார்கள். உங்கள் வீடு மிகவும் சிறியதாக இருக்கலாம். ஆனால், வீடு இல்லாமல் ரோட்டில் வாழும் மனிதர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். உங்களுக்கு நோய் துன்பம் தரலாம். ஆனால், சிகிச்சை செய்துகொள்ளவே முடியாத நிலையில் நிறைய மனிதர்கள் வாழ்கிறார்கள். நீங்கள் செய்யும் வேலை மோசமாக இருக்கலாம். ஆனால், அந்த வேலை கூட இல்லாமல் நிறைய மனிதர்கள் இருக்கிறார்கள். உங்களிடம் குறைவான சேமிப்பு இருக்கலாம். ஆனால், கழுத்து வரை கடனுடன் நிறைய பேர் இருக்கிறார்கள். இப்படி பார்க்கத் தொடங்கினால் உங்களிடம் நிறைய நிறைய இருப்பதை காணலாம்.
கேள்வி : எனது மேலதிகாரி எதற்கெடுத்தாலும் என் மீது கோபப்படுகிறார்… அவருடைய குணத்தை மாற்ற முடியுமா..?
சி.அயோத்திதாசன், சென்னை.
ஞானகுரு ;
ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால் அவருடைய மோசமான ஒரு பக்கத்தை மட்டுமே பார்க்கிறோம் என்று அர்த்தம். கெட்டவர் என்றும் நல்லவர் என்று யாரும் கிடையாது. எல்லோரிடமும் எல்லாமும் கலந்தே இருக்கும். உங்கள் மீது கோபப்படும் அதே நபர், அவரது குடும்பத்தினர், நண்பர்களிடம் சிரித்துப் பேசும் சந்தோஷமான நபராக இருக்கக்கூடும்.
யாருடைய குணத்தையும் யாராலும் மாற்ற முடியாது. ஆனால், மோசமான மனிதரையும் உங்களிடம் நல்லவராக நடந்துகொள்ளும்படி மாற்றிவிட முடியும். புலி மோசமான விலங்கு என்றாலும் அதை பழக்கப்படுத்தி வளையத்தில் தாவச்செய்ய முடியும். வளையத்தில் தாவினாலும் புலியின் குணம் மாறிவிடாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
உங்கள் மேலதிகாரி உங்களை பாராட்ட வேண்டும் என்றால், நீங்கள் முதலில் அவரது பாசிடிவ் பக்கங்களைப் பார்க்க வேண்டும். அவரது ஆளுமைத் திறன், அவரது பேச்சாற்றல், வேலை நுணுக்கம் போன்ற உண்மையான திறமைகளைப் பாராட்டுங்கள். எத்தனை கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு வந்திருப்பார் என்பதை அறிந்துகொண்டு நெருக்கம் காட்டுங்கள். அவரது பாசிடிவ் பக்கங்களை நீங்கள் பார்க்கத் தொடங்கிவிட்டால், அவரும் உங்களுடைய பாசிடிவ் பக்கத்தைப் பார்க்கத் தொடங்குவார். இது ஒரு ஆரம்பமாக இருக்கட்டும். புலியை பழக்க முடியும் எனும்போது அதிகாரியை மாற்ற முடியாதா..?