பிள்ளைகளுக்கு எப்படி அறிவுரை சொல்வது..?

ஞானகுரு பதில்

கேள்வி  : இன்றைய பிள்ளைகள் அறிவுரைகளைக் கேட்பதே இல்லை, எப்படி அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்?

  • பி.மணிவண்ணன், சூலக்கரை.

ஞானகுரு :

காலங்காலமாக பிள்ளைகளுக்கு அறிவுரைகள் சொல்லப்பட்டு வருகின்றன. திருக்குறள், நாலடியார், ஆத்திச்சூடி என்று நீதி நூல்களுக்கும் குறைவு கிடையாது. பகவத்கீதை, குரான், பைபிள் போன்ற மத நூல்களும் மனிதர்களுக்கு அறிவுரைகளை அள்ளித் தருகின்றன.

பொய் சொல்லக்கூடாது, பேராசை ஆபத்து, மது உடலுக்குக் கெட்டது என்பவை எல்லோருக்கும் தெரியும். ஆனாலும், இவற்றை யாரும் கேட்பதில்லை, கேட்கப் போவதும் இல்லை.

பிள்ளைகளுக்கும் மனிதர்களுக்கும் அறிவுரைகளைத் தாண்டி ஆலோசனைகளே தேவை. ஏனென்றால் ஒவ்வொரு பிள்ளையின் பிரச்னைகளும் வெவ்வேறானவை. அந்த தீர்வுகளை புதுமையாகச் சொல்லுங்கள். கதை வடிவத்தில் ஆலோசனை கொடுப்பது பிள்ளைகளுக்கு மிகவும் எளிதாகப் புரிந்துவிடும்.

காஸ்ட்லி பைக் கேட்கும் பிள்ளையிடம் நேரடியாக மறுப்பு தெரிவிக்காதீர்கள். பக்கத்து தெரு பையன் ஸ்போர்ட்ஸ் பைக் ஓட்டிச் சென்று யாரையோ இடித்துவிட்டான். அவனுடைய லைசென்ஸை கேன்சல் செய்துவிட்டார்கள். அடுத்த 10 வருடங்கள் வண்டி ஓட்ட முடியாதாம். அதோடு அடிபட்டவர்களுக்கு மருத்துவச் செலவு லட்சக்கணக்கில் ஆகிவிட்டதாம் என்று அவ்வப்போது சொல்லிக்கொண்டே இருந்தால், பைக் வாங்கும் ஆசையைத் தள்ளிப் போடுவார்கள். 

அதேநேரம், எல்லா நேரமும் ஆலோசனையும், அறிவுரையும் சொல்லிக்கொண்டே இருக்காதீர்கள். பிள்ளைகள் குழப்பத்தில் இருக்கும்போது, வழி தெரியாமல் தடுமாறும் நேரத்தில் மட்டும் சொன்னால் போதும். அதையே அவர்கள் ஆர்வமுடன் எடுத்துக்கொள்வார்கள். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment