ஞானகுரு பதில்கள்
கேள்வி : மரணம் குடும்பத்துக்கு பெரும் இழப்புதானே..?
- என்.துரைராஜ், சூலக்கரை.
ஞானகுரு :
மரணம் எந்த அளவுக்கான இழப்பு என்பது சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு மட்டுமே தெரியும். பொருள் ஈட்டாதவரின் இழப்பை சிலர் பொருட்படுத்துவதே இல்லை. சில மரணங்கள் மற்றவர்களுக்கு விடுதலையாகவும் இருக்கக்கூடும்.
கேள்வி : கல்வி வாழ்க்கைக்கு அவசியமா..?
- எல்.இருளப்பன், பர்மா காலனி.
ஞானகுரு :
ஏதேனும் ஒரு மொழியில் பேசவும், எழுதவும், கணக்கு பார்க்கவும் ஓரளவு கல்வி இருப்பது வாழ்க்கையை சுலபமாக நகர்த்த உதவும். பொதுவாக கல்வி சாதாரண மனிதருக்கும் மிகப்பெரும் நம்பிக்கை தருகிறது. அதனாலே நம்மவர்கள் இன்று அந்நிய நாடுகளுக்கு தயக்கமின்றி செல்கிறார்கள். அதேநேரம், வெற்றிக்கும் கல்விக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஏனென்றால், கற்ற கல்வியின் மூலம் வெற்றியைத் தொட்டவர்கள் மிகமிகச் சிலரே.
கேள்வி : சொல்லியும் திருந்தாதவர்களை என்ன செய்யலாம்..?
- டி.உமாதேவி, சசிநகர், சிவகாசி.
ஞானகுரு :
தவறு செய்வது மனித இயல்பு. இன்னும் சொல்லப்போனால் தவறு செய்யாத மனிதர்கள் யாரும் கிடையாது. தவறுக்கு காரணம் அறிந்து திருந்துபவர்கள் அடுத்த படியில் ஏறிவிடுகிறார்கள். அதேநேரம், தப்பு செய்ததற்கு பொருத்தமான காரணங்களைக் கண்டுபிடித்துச் சொல்பவர்களை திருத்த நினைப்பதுதான் தவறு.