சட்டத்தில் சந்தேகம் கேளுங்கள்
கேள்வி ; கோர்ட் அனுப்பும் சம்மனை வாங்காமல் புறக்கணித்தால் என்ன நிகழும் ?
– ஏ. ராஜாக்கனி, அல்லம்பட்டி
நிலா ;
சிவில் அல்லது கிரிமினல் வழக்கு என்பதைப் பொறுத்து நீதிமன்ற நடவடிக்கை இருக்கும். சிவில் வழக்குகள் என்றால், சம்மனை வாங்கவில்லை என்றாலும் நீதிமன்றம் அதனை சம்மன் வழங்கியதாகவே எடுத்துக்கொள்ளும். அதேநேரம், நோட்டீஸை அவர் பார்வையில் படும் வகையில் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். வீட்டு வாசலில் நோட்டீஸ் ஒட்டுவது, நாளிதழ்களில் அறிவிப்பு வெளியிடுவது போன்ற நடவடிக்கைகள் இருக்கும்.

கிரிமினல் வழக்கு என்றால் வழக்கின் தன்மையைப் பொறுத்து ஜாமீனில் வெளிவரக்கூடிய வாரண்ட் அல்லது ஜாமீன் இல்லாமல் சிறைக்கு அனுப்பும் வாரண்ட் பிறப்பிக்கப்படும். இந்த நடவடிக்கையை காவல் துறை மூலம் நீதிமன்றம் மேற்கொள்ளும்.
கேள்வி ; விவகாரத்து வழக்குப் போட்டால் தீர்ப்புக்கு எத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டும்?
– மனோகரன், காந்தி நகர்
நிலா ;
கணவன், மனைவி இருவரும் பரஸ்பரம் பிரிவதற்கு ஒப்புக்கொண்டு நீதிமன்றத்துக்குச் சென்றால் 6 மாதம் முதல் 1 வருடத்திற்குள் விவாகரத்து பெற்றுவிட முடியும். பரஸ்பர ஒத்துழைப்பு இல்லாமல் யாராவது ஒருவர் மட்டும் விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்றால், அந்த வழக்கு முடிவுக்கு வருவதற்கு குறைந்தது 3 வருடங்கள் ஆகும். எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் தள்ளிப்போட முடியும். எனவே, பிரிவது என்று முடிவு செய்துவிட்டால் இரண்டு வீட்டாரும் பேசி, கொடுக்க வேண்டியதைக் கொடுத்து, பெற வேண்டியதைப் பெற்று பரஸ்பர விவாகரத்துக்கு முயற்சி செய்வதே நல்லது.
கேள்வி ; சட்டத்திற்கு பலர் மதிப்பு தருவதில்லை, பயம் கொள்வதும் இல்லை… ஏன்..?
- பி. முருகேசன், சூலக்கரை மேடு
நிலா ;
தாமதிக்கப்படும் நீதியை அநீதி என்பார்கள். நீதிமன்றத்துக்குப் போனால் நியாயம் கிடைத்துவிடும் என்று நம்பிக்கையுடன் வருகிறார்கள். ஆனால், தீர்ப்பு கிடைப்பதற்கு மிக நீண்ட காலமாகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது என்றாலும் இந்த தாமதமே நீதித் துறை மீதான நம்பிக்கையை குறைக்கிறது. அதேபோல், நீதி கொடுப்பதிலும் சில விசித்திரங்கள் நடப்பதுண்டு. சாதாரண மனிதர்களின் முக்கிய வழக்குகளை விசாரணைக்கே எடுக்காத நீதிமன்றம், முக்கிய நபர்களின் சாதாரண வழக்குகளையும் நள்ளிரவிலும் விசாரிப்பதுண்டு.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை குற்றவாளி என்று ஒரு நீதிபதி எழுதிய தீர்ப்பில், இன்னொரு நீதிபதி அவர் நிரபராதி என்று விடுதலை செய்த காட்சிகளையும் மக்கள் பார்க்கிறார்கள். இதுபோன்ற குளறுபடிகள் நடப்பதாலே நீதிக்கு மதிப்பு குறைகிறது. இவற்றை எல்லாம் சரி செய்யும் முயற்சிகள் நடக்கத்தான் செய்கிறது. அதேநேரம், நீதிமன்றம், தண்டனைக்குப் பயந்தே பலர் தவறு செய்வதற்கு அஞ்சுகிறார்கள் என்பதும் உண்மை.
- எம்.நிலா B.Com., LLM (Hons.), Diploma in Prof. Counselling
உயர்நீதிமன்ற வழக்கறிஞர், மதுரை. தொடர்புக்கு : 7299753999