• Home
  • உறவுகள்
  • அடுத்த குழந்தைக்கு எத்தனை ஆண்டு இடைவெளி..?

அடுத்த குழந்தைக்கு எத்தனை ஆண்டு இடைவெளி..?

Image

பிள்ளை வளர்ப்பு

முதல் குழந்தை பெற்ற அடுத்த வருடமே அடுத்த குழந்தை பெற்றுக்கொள்பவர்கள் அதிகம். ஒரேயடியாக குழந்தை வளர்ப்பு வேலை முடிந்துவிடும் என்றுதான் திட்டமிடுகிறார்கள். இன்னும் சிலர், கொஞ்சம் இடைவெளி விடலாம் என்று ஆசைப்பட்டு, 10 வருடங்களுக்குப் பின்னர் குழந்தை பிறப்புக்கு முயற்சி செய்கின்றனர். இன்னும் சிலர் கொஞ்சம் தாமதம் ஆகட்டும் என்று தள்ளிப்போட்டு, தள்ளிப்போட்டு ஒரேயடியாக அடுத்த குழந்தை பெறுவதையே தவிர்த்து விடுகிறார்கள்.

மருத்துவரீதியாகவும், பெண்களின் உடல் ரீதியாகவும் முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.

பொதுவாகவே, முதல் குழந்தையை பெற்று எடுத்த பின்னர், அடுத்த குழந்தையை பெற்று எடுக்க சரியான கால இடைவெளி தேவை என்றுதான் சொல்ல வேண்டும்.  ஏன் இந்த கால இடைவெளி தேவை என்றால், முதல் பிரசவத்தின் போது ஏற்பட்ட காயங்கள் மற்றும் தழும்புகளை ஆறவும், கர்ப்பபையை பழைய நிலைக்கு கொண்டு வரவும், பெண் உடல் வலிமை பெற்று உடலளவிலும், மனதளவிலும் அடுத்த குழந்தையை ஏற்க ஆயத்தமாக வேண்டியது அவசியம். அதனால், முதல் குழந்தை பெற்றெடுத்ததுமே அடுத்த குழந்தைக்கு பெண்ணை அவசரப்படுத்துவது நல்லதல்ல.

சுகப்பிரசவம் ஆன பெண்கள் என்றால், அவர்கள் உடல் விரைவில் குழந்தையைப் பெற்றுக்கொள்ள தயாராகிவிடும். ஆனால், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம். அதுவும் ஒரு வருடமாவது தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பதால், முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் இடையில்  குறைந்தது ஒரு வருட இடைவெளியாவது அவசியம்.
இதுவே, முதல் பிரசவம் சிசேரியனாக இருந்தால், குறைந்தது 6 மாத காலமாவது நல்ல ஓய்வில் இருக்கவேண்டியது அவசியம். ஏனெனில் சிசேரியனால், உண்டான புண்கள் ஆறவே, 3 மாதமாகும், மேலும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அத்துடன் தாயின் உடல்நலனும் மனநலனும் இயல்பான நிலைக்குத் திரும்பவேண்டும். இதற்கெல்லாம்  குறைந்தது இரண்டு வருடங்கள் வரையிலும் ஆகலாம். அதனால், முதல் குழந்தைக்கும் இரண்டாம் குழந்தைக்கும் வருடக்கணக்கில் இடைவெளி இருப்பது நல்லது என்கின்றனர், மருத்துவர்கள்.

ஏனென்றால்,  பிரசவத்தால் ஏற்பட்ட காயங்கள் மற்றும் உடல் சோர்வு, மனதில் உண்டாகும் அழுத்தம் போன்றவை அத்தனை எளிதில் போய்விடாது. நிறைய பெண்கள் சுகப்பிரசவம் செய்துகொள்ளும்போது, தன்னால் முடியவில்லையே என்ற கவலையும் அவர்களுக்கு இருக்கும்.  எனவேஅ இவர்களுக்கு இரண்டு ஆண்டு என்ற கால இடைவெளி அவசியம். இந்த காலகட்டத்தில், நல்ல சத்தான உணவுகளை உண்டு, உடலை பழைய பலம் பெறச் செய்த பின்னர் அடுத்த குழந்தையை பற்றிய சிந்தனையை தொடங்க வேண்டும்.
முதல் பிரசவத்திற்கும், இரண்டாம் குழந்தையை கருத்தரிப்பதற்கும் சரியான கால இடைவெளி இல்லாமல் இருந்தால், தாய்க்கு உடல் நலக்குறைபாடுகள் அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் பிறக்கப்போகும் குழந்தைக்கு சரியான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல், நஞ்சுக்கொடி சுற்றல், நஞ்சுக்கொடி குறுக்கீடு போன்ற பற்பல உடல் நலக் குறைபாடுகளும், முதல் குழந்தையை சரியாக கவனிக்க முடியாமல் போகும் என்பதால், அந்த குழந்தைக்கும் உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம்.

இதுதவிர, குடும்ப பொருளாதாரமும் சரியாக கணிக்கப்பட வேண்டும். அடுத்த குழந்தையும் சிசேரியன் என்றால், அந்த செலவுகளை சமாளித்தல், இரண்டு குழந்தைகளின் படிப்புச் செலவு போன்றவை எல்லாமே சரியாக திட்டமிடப்பட வேண்டும்.

கர்ப்பகாலம், தாய்ப்பால் ஊட்டும் காலம் என அனைத்திலும் தாயின் உடலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்பட்டிருக்கும்; எனவே, தாயின் உடல் சரியான ஆரோக்கிய நிலையை அடைந்த பின்னரே இரண்டாம் குழந்தையைப் பற்றி  யோசிக்கவேண்டும். குறிப்பிட்ட காலத்துக்கு முன்னர், தாய்க்கு உடல் நலம் தேறும் முன்னர், போதிய ஊட்டச்சத்துக்கள் இல்லாத நிலையில், குழந்தை பிறப்புக்கு ஆசைப்பட்டால், அது தாய்க்கு மட்டுமல்ல, குழந்தைக்கும் ஆபத்தாக மாறலாம். ஆம், 36 வாரங்களுக்கு முன்பாகவே, குறை மாதத்தில் குழந்தை பிறக்கவும் வாய்ப்புண்டு;

இந்த நேரத்தில் இன்னொரு விஷயத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது திருமணம் முடித்து எத்தனை ஆண்டுகள் ஆகிறது, என்ன வயசு என்பதையும் பார்க்க வேண்டும். ஏனென்றால், முதல் குழந்தைக்கே 30 வயதுக்குப் பிறகுதான் பெற்றெடுத்தார் என்றால், 1 வருடம் முடிந்ததுமே அடுத்த குழந்தைக்குத் தயாராகிவிடலாம். ஏனென்றால்,  35 வயதிற்கு மேல் இரண்டாம் குழந்தையை பெற்றுக்கொள்வது அத்தனை ஆரோக்கியமானது அல்ல..!

அதேநேரம், ஒவ்வொரு குடும்பத்துக்கும் இரண்டாம் குழந்தை நிச்சயம் அவசியம் வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள். தாய் நல்ல ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாகவும் இருக்கவேண்டியது அவசியம். எனவே, என்ன பிரசவமானாலும் முதல் மற்றும் இரண்டாம் குழந்தைக்கு இடையே குறைந்தது இரண்டு ஆண்டு கால இடைவெளியாவது இருக்க வேண்டும். இந்த இடைவெளி 7 ஆண்டுகளைத் தாண்டிவிடுவதும் ஏற்கத்தக்கது இல்லை.

Leave a Comment

Image Not Found

கட்டுரை பகுதிகள்