அன்பு எப்படி..? ஆசை எவ்வளவு..?

Image

ஞானகுரு தரிசனம்

ஞானகுரு சாதாரணமாகப் பேசும் நேரத்தில் விழும் வார்த்தைகள் எல்லாமே தத்துவமே. ஒரு சில விஷயங்களுக்கு அவர் தரும் சுருக்கமான பதில் ஆழமானது மட்டுமல்ல, அர்த்தமுள்ளது.

அன்பு என்பது எப்படியிருக்க வேண்டும்..?

ஞானகுரு : நிபந்தனையற்றதாக, அனைத்து குறைகளுடனும் ஏற்கும் மனதுடன்  இருத்தல் வேண்டும். எல்லோருக்கும் தாயாக இரு.

ஆசை எத்தனை இருக்கலாம்..?

ஞானகுரு : தேவைக்கு அதிகமாக விரும்புவதுதான் ஆசை. பொருள் மீது மட்டுமல்ல, மனிதர்கள் மீதும் வைக்கும் ஆசைகள்  துன்பமே தரும்.

கேள்வி :பயம் என்பது என்ன..?

ஞானகுரு: நிச்சயமின்மையை ஏற்க முடியாத அச்சமே பயம். நிச்சயமின்மையை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வந்தால், அது சாகசம் ஆகிவிடும்.

கேள்வி : பொறுமை என்பது எதுவரை..?

ஞானகுரு : எந்த நிலையிலும் உணர்ச்சி வசப்படாத மனம். துன்பத்தில் இருந்து தப்பிக்க நினைக்காமல் ஏற்றுக்கொள்ளும் மனநிலை.

சீடர் : பொறாமையால் நன்மை கிடைக்குமா..?

ஞானகுரு : மற்றவர்களிடம் இருக்கும் நல்லவற்றை நம்மால் ஏற்க முடியாததே பொறாமை. பிறர் நல்லவற்றை ஏற்றுக்கொள்ளும்போது, அவர் உனக்கு உத்வேகம் தரக்கூடியவராக மாறிவிடுகிறார்.

கேள்வி : நிதானம் தேவைதானா..?

ஞானகுரு : எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்னும் தீவிரமாக சிந்திப்பதே நிதானம். தோல்வி அடையக்கூடாது என்ற எண்ணம் கொண்டவருக்குத் தேவையான முதல் தகுதி, நிதானம்.

கேள்வி : கோபம் ஏன் வருகிறது ?

ஞானகுரு : நம் கட்டுப்பாட்டை, நம் எதிர்பார்ப்புகளை ஒருவர் மீறிச் செல்வதை தாங்கிக்கொள்ள முடியாததே, கோபம். அப்படி பிறர் நடந்துகொள்வதை பொருட்படுத்தாமல் ஏற்பது சகிப்புத்தன்மை ஆகிவிடுகிறது.

கேள்வி : வெறுப்பு ஏன் ?

ஞானகுரு: இன்னொரு மனிதனை சகித்துக்கொள்ள முடியாத நிலையே வெறுப்பு. இதுவே மதம், இனம், மொழி, அரசியல் மீது பற்று வைக்கும்போது, அதுவே வெறுப்புக்கு காரணமாகிறது.

கேள்வி : வெட்கம் தேவையா..?

ஞானகுரு : மிகவும் விருப்பமானவர்களிடம் மிகுந்த அன்பைக்  காட்ட முடியாமல் தவிப்பது வெட்கமாக வெளிப்படுகிறது. இது, ஒரு வகையில் உதறவேண்டிய தயக்கமே.

Leave a Comment