டீன் வயதில் காதலிப்பவரை  எப்படி திருத்துவது?

பெற்றோருக்கு டிப்ஸ்

`பதினைந்து, பதினாறு வயதில் காதல் வருவது சகஜம். ஹார்மோன் கோளாறுகளால் வரவே செய்யும். இதற்கு பெற்றோர் என்ன செய்ய வேண்டும், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு விளக்கம் கொடுக்கிறார் செக்ஸாலஜிஸ்ட் டாக்டர் கார்த்திக் குணசேகரன்

“டீன் வயதில், ஆண் குழந்தைகளுக்கு உடன் படிக்கிற கேர்ள்ஸ் மீது நட்பும் ஈர்ப்பும்தான் இருக்கும். அதைக் காதல் என்று நினைத்துக்கொண்டிருப்பார்கள். இந்த நேரத்தில், பெற்றோர்கள் எங்களைப் போன்ற டாக்டர்களை அணுகினால், இந்த ஈர்ப்பு இயல்பானது என்பதையும், இதை எந்த எல்லைக்குள் நிறுத்திக்கொண்டால் நல்லது என்பதையும் உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லித் தந்துவிடுவோம்.

இந்தச் சொல்லித் தருதல்கூட, மாணவனுக்கு மாணவன் வேறுபடும். போன தலைமுறை சிறுவர்களை, `நீ இதைத்தான் செய்யணும்’ என்று பெற்றோர்களால் கட்டுப்படுத்த முடிந்தது. இந்தத் தலைமுறை சிறுவர்களை நாம் சுதந்திரமாக வளர்த்திருக்கிறோம். அவர்களைக் கேட்டுதான் அவர்களுக்கான முடிவுகளையே தீர்மானிக்கிறோம்.

ஆண் பிள்ளைகளின் இன்றைய நிலைமை பெற்றோராகிய நம்மால் நிகழ்ந்ததுதான். இனிமேலும், அவர்களைக் கட்டுப்படுத்த முடியாது. வேண்டுமானாலும் அவர்களுடைய சுதந்திரத்தில் எல்லைக் கோடுகள் போடலாம். கண்காணிக்கலாம். இத்தனை வயதுக்கு மேல் காதலிக்கலாம் என்பதுபோல எடுத்துச் சொல்லலாம். இந்த விஷயத்தில் சரியான தீர்வு இதுதான்.’’ என்கிறார்.

அதேபோல், ‘’வயதுக்கு வரும் பிள்ளைகளிடம் நட்பின் அவசியம் பற்றி பேசுங்கள். நட்புனா அதுல எதுக்கு ஆண் பெண் பேதம். உனக்கு உன் கிளாஸ்ல யார்கூட பேசினா கம்ஃபர்டா இருக்கோ அவங்களை அம்மா அப்பாவுக்கு அறிமுகப்படுத்தி வை. தாராளமா வீட்டுக்குக் கூட்டிட்டு வா. உனக்கு இந்த வயசுல உன் கிளாஸ்ல உள்ள ஏதாவது ஒரு பொண்ணு மேல ஸ்பெஷல் கேர் வரலாம். அதெல்லாம் சகஜம். அது தப்பில்லை. தாராளமா அந்தப் பொண்ணை நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டு வா. நாம் எல்லாம் சேர்ந்துகூட வெளிய போகலாம்’’ என்று அந்த வயதில் வருகிற பாலின ஈர்ப்பைச் சகஜம், இதெல்லாம் கடந்து போக வேண்டும் என்பதை நண்பனாகச் சொல்லி புரிய வையுங்கள். இல்லையென்றால் படங்களில் காட்டுகிற பட்டாம்பூச்சியெல்லாம் உங்கள் மகனின் வயிற்றில் பறக்க ஆரம்பிப்பதாகத் தேவையில்லாத கற்பனையில் ஈடுபடுவார்கள்.’’ என்கிறார்.

Leave a Comment