ஞானகுரு பதில்கள்
கேள்வி : ஒரு சிலருக்கு மட்டும் வெற்றி மேல் வெற்றி கிடைக்கிறதே, அது எப்படி..?
- எஸ்.ராமலட்சுமி, திண்டுக்கல்.
ஞானகுரு :
கிரிக்கெட்டில் ஒரு சில கேப்டன்கள் தொடர்ந்து டாஸ் ஜெயித்துக்கொண்டே இருப்பார்கள். இதனை அதிர்ஷ்டம் அல்லது திறமை என்று சொல்லிவிட முடியாது. அதாவது டாஸ் போடும்போது எல்லோருக்கும் 50% வெற்றிக்கு வாய்ப்பு உண்டு. ஆனால், சிலருக்கு தொடர்ந்து டாஸில் வெற்றி கிடைப்பது தற்செயல் மட்டுமே. இதை அதிர்ஷ்டம் அல்லது நல்ல நேரம் என்று சொல்வது சரியில்லை. இது ஒரு வாய்ப்பு. அவ்வளவுதான். ஏனென்றால் டாஸில் ஜெயிப்பதால் மட்டும் போட்டியை வென்றுவிட முடியாது. அதேநேரம், தொடர் வெற்றி பெறுபவர்களை ஆழ்ந்து நோக்கினால் சில விஷயங்களை அறிய முடியும். அதாவது, அவரது நோக்கம் தெளிவாக நேர்க்கோட்டில் இருக்கும். தடைகள் வந்தாலும் முயற்சியைக் கைவிட மாட்டார். தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்வார். இப்படி ஏராளமான காரணங்களாலே வெற்றி மேல் வெற்றி கிடைக்குமே தவிர, அதிர்ஷ்டத்தால் அல்ல.
கேள்வி : உடல் வலிமையால் தவறு செய்கிறார்களா அல்லது பண வலிமையினாலா..?
- எஸ்.வீரலட்சுமி சந்தோஷ், கடலூர்.
ஞானகுரு :
ஒருவருக்கு உடல் பலம் இருக்கிறது என்றால், அவர் சமாதானம் நாடுவாரே தவிர சண்டை போட மாட்டார். அதேபோல், பணம் வைத்திருப்பவர்கள் அதனை பாதுகாக்கவும் பெருக்கவும் நினைப்பார்களே தவிர, தவறு செய்து மாட்டிக்கொள்ள விரும்ப மாட்டார்கள். வாழ்வில் முன்னேறுவதற்கான ஆசையும் லட்சியமும் இல்லாதவர் மட்டுமே, குறுக்குவழியை தேர்வு செய்கிறார்.